சாய்ந்தமருது-
விடுதலைப் புலிகள் இயக்கத்தினை புகழ்ந்ததான விஜயகலா மகேஸ்வரனின் உரை சிங்களவர்கள் மத்தியில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. சிங்கள அரசாங்கம் தனது தமிழ் சமூகத்துக்கு விளைவிக்கும் அநீதிக்கு எதிராக விரக்தியின் விளிம்பில் இருந்துகொண்டு அவரது சமூகம் சார்பில் தெரிவித்த துணிச்சலான கருத்தானது பாராட்டுக்குரியதுமாகும்.
விஜயகலா மகேஸ்வரனின் உரையினைவிட மிகவும் பாரதூரமான உரைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பட்டி தொட்டி தொடக்கம் பாராளுமன்றத்திலும் மற்றும் சர்வதேசத்திலும் முழங்கியிருக்கின்றார்கள்.
அப்படியிருந்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்ப்படாத எதிர்ப்பலைகள் விஜயகலா மகேஸ்வரனுக்கு ஏற்பட்டதுக்குரிய காரணமென்ன ? பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சியினர்கள் மட்டுமல்லாது அவரது சொந்த கட்சியான ஐ.தே. கட்சியினர்களும் சேர்ந்து அவருக்கெதிராக பாராளுமன்றத்தில் கோசம் எழுப்புவதற்குரிய காரணம் என்ன ?
விஜயகலா ஓர் தமிழ் கட்சி உறுப்பினராக இருந்துகொண்டு புலிகளுக்கு சார்பாக பேசியிருந்தால் அவரது உரையானது பத்தோடு பதினொன்றாக போயிருக்கும். ஆனால் அவர் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் என்பதனால்தான் அவரது உரை பாரிய அதிர்வலையினை ஏற்படுத்தியுள்ளது.
ஆளும் ஐ.தே. கட்சி தலைமையிலான அரசாங்கத்தினை வீட்டுக்கு அனுப்பிவிட்டு ஆட்சியை எப்படி பிடிக்கலாம் என்று காத்துக்கொண்டிருக்கின்ற எதிர்கட்சியினர்களுக்கு அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலாவின் கருத்து துரும்பாக அமைந்துள்ளது.
அதனால் அவரது உரையினை தூக்கிப்பிடித்துக்கொண்டு அதனை ஓர் பாரதூரமான விடயமாக காண்பிப்பதன் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் ஐக்கிய தேசிய கட்சிக்கு இருக்கின்ற செல்வாக்கினை அழித்துவிட முடியும் என்பது எதிர்கட்சியினர்களின் கணிப்பாகும்.
மறுபுறத்தில் ஐ.தே. கட்சி உறுப்பினர்களும் விஜயகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்கள்.
ஐ.தே.கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோசத்தினை முன்வைக்கின்றபோது தனது கட்சிகாரர் என்ற காரனத்திற்காக பேசாது மௌனமாக இருந்தால், அது தங்களது கட்சியின் செல்வாக்கில் சரிவினை ஏற்படுத்திவிடும் என்பது ஐ.தே. கட்சி உறுப்பினர்களின் கணிப்பாகும். இதனால் தற்காப்பு நடவடிக்கையாக விஜயகலாவுக்கு எதிராக தங்கள் தலைமைக்கு அழுத்தங்களை வழங்கியுள்ளார்கள்.
எது எப்படி இருப்பினும் விடுதலைப் புலிகளின் அழிவானது சிங்கள அரசாங்கத்தினை தட்டி கேட்க யாருமற்ற நிலையினை உருவாக்கியுள்ளது என்பது விஜகலா மகேஸ்வரனின் கருத்திலிருந்து புரிந்துகொள்ள முடிகின்றது.