கல்முனை பொதுச்சந்தை அபிவிருத்திப்பணியினை விரைந்து முன்னெடுக்கும் வகையில் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் வேண்டுகோளில் கொழும்பிலிருந்து வருகைதந்த கட்டட திணைக்கள உயர் அதிகாரிகள் குழு நேற்று (5) வியாழக்கிழமை கல்முனை பொதுச்சந்தைக்கு நேரடி விஜயம் செய்து கள ஆய்வுப் பணியினை மேற்கொண்டனர்.
இதன்போது கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றகீப், ஆணையாளர் ஜே. லியாகத் அலி, பொறியியலாளர் ரி. சர்வானந்தன், அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். சத்தார், நௌபர் ஏ. பாவா, கே.எம். தௌபீக் மற்றும் கட்டட திணைக்களத்தின் பொறியியலாளர்கள், படவரைஞர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.
கல்முனை பொதுச்சந்தை அபிவிருத்திப் பணிக்காக முதற் கட்டமாக 50 மில்லியன் ரூபா நிதி நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டதனைத் தொடர்ந்து மேற்படி உயர்மட்டக் குழுவினர் பிரதி அமைச்சர் ஹரீஸின் வேண்டுகோளில் குறித்த கள ஆய்வுப் பணியினை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் குறித்த அபிவிருத்திப் பணியினை அடுத்த மாதமளவில் ஆரம்பிக்கும் வகையில் மதிப்பீட்டு அறிக்கை உள்ளிட்ட ஆவண தயார்படுத்தல் மற்றும் அலுவலக நடைமுறைகளை விரைவுபடுத்தி பூரணப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக இதன்போது குறித்த குழுவினர் தெரிவித்தனர்.