-பிராந்தியக் காரியாலயப் பிரிப்பை சாய்ந்தமருது மக்கள் எதிர்க்கக்கூடாது!
கடந்த சில நாட்களாக பரவலாக பேசப்படுகின்ற ஒரு பேசுபொருளாக சாய்ந்தமருதில் இருக்கும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உப அலுவலகமானது தரமுயர்த்தப்படுகிறது என்பதனை விட, அக்கரைப்பற்றில் இருக்கும் பாரிய பிராந்திய காரியாலயமானது இரண்டாகப் பிரிக்கப்பட்டு அது சாய்ந்தமருதுக்கு கொண்டு வரப்படுகிறது. என்பதாகவே கருத்துகள் பரிமாறப்படுகின்றன.
இதனை யார் கொண்டு வருகிறார்கள் அல்லது யார் இதனைப் பிரிக்க முயற்சிக்கிறார்கள் என்பதனை வைத்துத்தான் அதிகமான கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் தான் அக்கரைப்பற்றில் உள்ள பிராந்திய காரியாலயத்தை துண்டாடவும், சாய்ந்தமருது மக்களின் உயிரோட்டமான போராட்டத்தின் திசையை மாற்றுவதற்கான முயற்சியாகவும் சித்தரிக்கப்பட்டே அநேகமான கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இவை உண்மையா இல்லையா என்பதனை ஆராய்வதை விட, இதனை நமக்கு சாதகமாக எவ்வாறு பயன்படுத்தலாம் என்றே நாம் பார்க்கவேண்டியுள்ளது. ஏனெனில், சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபைப் போராட்டத்தைப் பொறுத்தவரையில், அது நீருக்குள்ளால் நெருப்பைக் கொண்டுபோவதற்கு ஒப்பானதாகவே இதுவரை தெரிகிறது.
இந்தப் பின்னணியில், பிராந்தியக் காரியாலய மாற்றத்தை வித்தியாசமான கோணத்தில் நாம் பார்க்கவேண்டியுள்ளது. எதிர்க்கட்சி என்றால் எல்லாவற்றையும் எதிர்ப்பது தான் என்பது போல, முஸ்லிம் காங்கிரஸின் எல்லா செயற்பாடுகளையும் சாய்ந்தமருது எதிர்க்க வேண்டும் என்பதல்ல. பொதுவாக காரியாலயங்கள் மக்களுக்கானவை. சேவைகள் மக்களின் காலடிக்குச் செல்ல வேண்டும். அதற்காகத் தான் தேசிய காரியாலயங்கள், மாகாண காரியாலயங்களாகவும், மாவட்ட அல்லது பிராந்திய காரியாலயங்களாகவும் பரவலாக்கம் செய்யப்படுகின்றன.
இதனால் நன்மையடையப் போவது மக்கள் தான். இங்கே நாங்கள் கவனிக்கவேண்டிய மிகவும் முக்கியமான விடயம் யாதெனில், பாரிய பரப்பைக் கையாளுகின்ற ஒரு பிராந்திய காரியாலயம் இரண்டாக்கப்பட்டு, இரண்டு பிராந்திய காரியாலயங்களாக்கப்படுகின்ற போது அது மக்களுக்கு நன்மையானதாகவே பார்க்கப்பட வேண்டும். எனினும், சிலர் அதாவது இந்தப் பிரிப்பை விரும்பாத சிலர் அதற்கு பலவிதமான காரணங்களை முன்வைக்கிறார்கள். ஆனால், என்ன தான் காரணங்களை முன்வைத்தாலும், ஒரு பிராந்தியக் காரியாலயம் இரண்டு பிராந்தியக் காரியாலயங்களாக்கப்படுகின்ற போது, அது சேவையில் அதிகரிப்பையே தருவதுடன், மக்கள் தற்போது எதிர்நோக்குகின்ற சில அசௌகரியங்கள் இல்லாமல் போவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
அதாவது இந்தப் பிரிப்பானது பெரிய காரியாலயம் என்ற மாயயை இல்லாமல் செய்துவிடும் என்பது சிலரின் விதண்டாவாதமாகும். ஆனால் உண்மையில் இந்தப் பிரிப்பானது அந்த மாயயைத் தாண்டி மக்களின் சேவைக்கானதாகவும், மக்களின் நலனுக்கானதாகவுமே பார்க்க வேண்டும். அதேவேளை, இந்தக் காரியாலயப் பிரிப்பானது ஊர்களுக்கிடையில் பிரிவினையை உண்டாக்குவதற்காகவோ அல்லது பெரிய பிராந்திய சபையின் தரத்தைக் குறைப்பதற்காகவோ அல்லது மக்களின் மத்தியில் குழபப்த்தை ஏற்படுத்துவதற்காகவோ அல்ல என்பதை முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினர் மக்களுக்கு பகிரங்கமாகத் தெரியப்படுத்த வேண்டும்.
அதனை நாங்களும் முற்றுமுழுதாக வரவேற்கிறோம். இதனை எந்த சாய்ந்தமருது மக்களும் எதிர்க்கக்கூடாது. காரணம், இந்தப் பிரிப்பை நியாயப்படுத்திச் சொல்லும் அதே காரணங்கள் தான் கல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருதைப் பிரித்து தனியான நகர சபையை உருவாக்குவதற்கும் பொருந்தும். ஏனெனில், உள்ளூராட்சி சபைகள் உருவாக்கப்பட்டதன் நோக்கமும் சேவைகள் மக்களின் காலடிக்கு நெருக்கமாகச் சென்றடைய வேண்டும் என்பது தான்.
எனவே, அக்கரைப்பற்றிலுள்ள பாரிய பிராந்திய காரியாலயத்தை இரண்டாக்கி சாய்ந்தமருதிலும் ஒரு பிராந்திய காரியாலயத்தை உருவாக்குவது மக்களுக்காகவே என்பதை முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக்கொண்டால், சாய்ந்தமருது மக்களின் கோரிக்கைான நகர சபையும் அவ்வாறான ஒன்றே என்பதை ஏற்றுக்கொண்டு, உடனடியாக அதற்கான முன்னெடுப்பை மேற்கொள்ளவேண்டும். அவ்வாறில்லையெனில், இந்தப் பிராந்தியக் காரியாலயப் பிரிப்பை எதிர்ப்பவர்கள் முன்வைக்கின்ற காரணங்கள் உண்மை என்றாகிவிடும்.