திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை கிறிஸ்லஸ்பாம் தோட்டத்தில் இனவாதம் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் முறையற்ற விதத்தில் தோட்டத்தொழிலாளர்களை வேலை நிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கிறிஸ்லஸ்பாம் தோட்டத்தொழிலாளர்கள் 21.07.2018 அன்று கிறிஸ்லஸ்பாம் தொழிற்சாலைக்கு முன்பாக 21.07.2018 காலை 11.00 மணியளவில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
சுமார் 175 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்யும் குறித்த தோட்டத்தில் தோட்ட முகாமையாளர் தோட்டத்தொழிலாளர்களை சிங்களத்தில் பேசுமாறு வற்புறுத்தி வருவதாகவும், கொழுந்து இல்லாத தேயிலை மலைகளில் 18 கிலோவினை எடுக்குமாறு பணித்தாகவும், அவ்வாறு முடியாது என தெரிவிக்கும் பட்சத்தில் தோட்டத்தொழிலாளர்களை அச்சுறுத்துவதாகவும் சில தொழிலாளர்களின் வேலையை நிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதே வேளை தொழிலாளர்கள் முகாமையாளர் வரும் போது தொப்பி அணியக்கூடாது எனவும் அதனை கழற்றுமாறும் தெரிவித்ததாகவும் இவர்கள் தெரிவித்தனர்.
தோட்ட தொழிலாளர்கள் குறித்த நிலுவையை பறிக்காததன் காரணமாகவும் தோட்ட நிர்வாக உத்தியோகத்தர்களின் பணிப்புரைக்கு அமைய வேலை செய்யாமைக்காகவும் விசாரணைக்காக தோட்டத்தொழிலாளர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்திருத்தமையும் குறிப்பிடத்தக்கது.
சுமார் 1 மணித்தியாலத்துக்கும் மேல் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 60 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.