ஐ.தே.க.வுடன் தொடர்ந்து பயணிப்பது கஷ்டம்; எங்களை புறந்தள்ளினால் அரசியல் ரீதியாக தகுந்த பதிலடி கொடுப்போம்: அமைச்சர் ரவூப் ஹக்கீம் காட்டம்

ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-

ங்களுக்கு நடந்த நம்பிக்கை மோசடிகளை பார்க்கின்றபோது, இனியும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பது என்பது மிகவும் கஷ்டமான விடயம். நாங்கள் வெற்றியீட்டிய சபைகளில், எங்களை புறந்தள்ளிவிட்டு மாற்று அணிகளுடன் ஐ.தே.க. ஆட்சியமைத்தால் அரசியல் ரீதியாக அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக தெரிவான உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு நேற்று (23) மாலை கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு உரையாற்‌றிய அமைச்சர் மேலும் கூறியதாவது;

நாங்கள் கடந்த 3 வாரங்களாக சிறிகொத்தாவில் ஐ.தே.க. முக்கியஸ்தர்களை சந்திந்து பேசிவந்த விவகாரங்களையும் பின்னர் நடந்த விபரீதங்களையும் வைத்து பார்க்கின்றபோது, இனியும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பது என்பது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு மிகவும் கஷ்டமான விடயம் என்பதை மிகவும் வேதனையுடன் சொல்லிக்கொள்கிறேன்.

உள்ளூராட்சி தேர்தலில் நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்ட நிலையில், எங்களுக்கு நடந்த நம்பிக்கை மோசடிகளினால் அவர்களுடன் தொடர்ந்து பயணிப்பதில் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இப்படியான சூழ்நிலையில் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பது என்பது மிகவும் சவாலுக்குரிய விடயம்.

முஸ்லிம் காங்கிரஸ் அமோக வெற்‌றியீட்டிய சபைகளில் எங்களுக்கு தவிசாளர் பதவி தரவேண்டிய நிலையில், எங்களை புறந்தள்ளிவிட்டு மாற்று அணிகளுடன் கூட்டுச் சேர்வதாக இருந்தால் அதற்கு அரசியல் ரீதியாக நாங்கள் தகுந்த பதிலடியை கொடுப்பதற்கும் தயங்கமாட்டோம். இயலுமானவரை இந்த ஆட்சியில் ஒற்றுமையுடன் பயணிப்பது என்ற நோக்கத்தில் இருந்தாலும், எங்களை பலவீனப்படுத்திக்கொண்டு பயணிக்க முடியாது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் இருக்கத்தக்க நிலையில், தேர்தலில் இணைந்து போட்டியிடும் நேசக் கட்சிகளுக்கும் ஒரு செயலாளரை சிறிகொத்தாவில் நியமிக்க வேண்டுமென நாங்கள் கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்திருக்கிறோம். அப்படியில்லாவிட்டால், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பது எங்களது சாத்தியமாகாது.

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட அனுபவத்தில் அடிப்படையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்‌கிரஸ் தனித்துதான் போட்டியிடவேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். பல இடங்களில் தனித்துப்போட்டியிட்டு கட்சியின் தளத்தை பாதுகாத்திருக்கிறோம். சில இடங்களில் விட்டுக்கொடுக்காமல் இருந்ததன் மூலம் அங்கு குறிப்பிடத்தக்களவு உறுப்பினர்களை வென்றிருக்கிறோம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்கு தகுதிபெற்றுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் இன்னும் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன. கடந்த இரு வாரங்களாக பல கட்சிகளுடன் இதுதொடர்பாக பேசிக்கொண்டிருக்கிறோம். சபைகளில் ஆட்சியமைப்பது குறித்து இறுதி முடிவெடுக்க இன்னும் ஓரிரு தினங்கள் செல்லும்.

நாங்கள் ஆட்சியமைப்பதற்காக எல்லா இடங்களிலும் விதம்விதமான விட்டுக்கொடுப்புகளை செய்யவேண்டியிருக்கிறது. ஆட்சியை பங்கிடுதல், தவிசாளர், பிரதி தவிசாளர் பதவிகளை பங்கிடுதல், மாற்றுக்கட்சி உறுப்பினர்களை சேர்த்துக்கொள்தல் என்று பல்வேறு விதமான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

வியாழக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்கான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சம்பந்தன் ஐயா, மாவை சேனாதிராஜா ஆகியோருடன் நடத்தியிருந்தோம். அதன் இறுதி முடிவுகள் இன்னும் ஓரிரு தினங்களில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் துமிந்த திசாநாயக்கவுடனும் சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பாக நாங்கள் பேச்சுவார்த்தை நடாத்தியிருக்கிறோம். ஜனாதிபதி நாடுதிரும்பியவுடன் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவின் பின்னர்தான் அதன் இறுதி தீர்மானங்கள் எட்டப்படும்.
இதேவேளை, பொதுஜன பெரமுன கட்சியின் மாவட்ட தலைமைகள் ஆட்சியமைப்பது தொடர்பில் எங்களை நாடிவந்து தீவிரமாக பேசிக்கொண்டிருக்கின்றனர். தவிசாளர் பதவி தருகிறோம் என்றும் பிரதி தவிசாளர் பதவி தருவோம் என்று பாராளுமன்றத்தில் பேசுகின்றனர். இதற்கான முடிவுகளை நாங்கள் விரைவில் அறிவிப்போம்.

செப்டம்பர் மாதமளவில் மாகாணசபை தேர்தல் நடைபெறலாம் என்றொரு நிலவரம் காணப்படுகிறது. வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஆளும்கட்சி குழுக் கூட்டத்தின்போது, புதிய தேர்தல் முறையில் மாகாணசபை தேர்தலை நடாத்துவது பாதகமானது. அதற்கான எல்லை நிர்ணயத்தில் முஸ்லிம்களுக்கு ஆபத்து காணப்படுகிறது. எனனே, பழைய முறையில் மாகாணசபை தேர்தலை நடத்துமாறு நான் பிரதமரிடம் கடுமையாக வலியுறுத்தியுள்ளேன்.

புதிய தேர்தல் முறையினால் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ள நிலையில், மாகாணசபை தேர்தல் நடைபெற்றால் அதைவிட பெரிய குழப்பங்கள் ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டினேன். அங்கிருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்கள் புதிய கலப்பு தேர்தல் முறையில் பிரச்சினைகளை இருக்கின்றன. அதனால் பழைய தேர்தல் முறைக்கே செல்லவேண்டும் என்று எனக்கு ஆதரவாக பேசினார்கள்.
பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த சிலரும் பழைய தேர்தல் முறைக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். பழைய தேர்தல் முறைக்கு செல்வதற்கான ஆதரவை திரட்டலாம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. பழைய தேர்தல் முறையில் மாகாணசபை தேர்தல் நடைபெறும் என்‌றொரு எதிர்பார்ப்பில் நாங்கள் இருந்துகொண்டிருக்கிறோம்.















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -