தலவாக்கலையில் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன உரை






தலவாக்கலை பி.கேதீஸ்-

ஆறுமுகன் தொண்டமானின் தொழிற்ச்சங்கத்தை மலையக மக்கள் சக்தி படுத்த வேண்டும். மலையகத்தின் மாற்றத்திற்காக உழைத்த சௌமிய மூர்த்தி தொண்டமான் பெயர் நீக்கப்பட்ட இடமெல்லாம் மீண்டும் சௌமிய மூர்த்தி தொண்டமானின் பெயரை சூட்ட உடனடியாக நடவடிக்கை எடுப்பேன். நான் சொன்னால் அதனை செய்வேன் எனவே மலையக மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து சேவல் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை பெற்றுக்கொள்ளவும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்வேன் என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலை முன்னிட்டு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இணைந்து நடாத்திய தேர்தல் பிரச்சார கூட்டம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் 28.1.2018 ஞாயிற்றுக்கிழமை தலவாக்கலை நகர மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான்,மத்திய மாகாண அமைச்சர் ரமேஸ்,ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான்,எஸ்.பி.திஸாநாயக்க,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரபாகணேசன், கொத்மலை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் குமார தசாநாயக்க, இ.தொ.காவின் மாகாணசபை உறுப்பினர்கள்,கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர். இந்த பிரச்சார கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இந்த கூட்டத்தில் உரையாற்றும்போது மேலும் தெரிவிக்கையில் எனக்கு இன்று ஞாபகம் வருகின்றது சில மாதங்களுக்கு முன்பு அட்டன் நோர்வூட் நகரிலே இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களோடு வந்து உங்கள் அனைவரையும் சந்தித்தேன் இந்திய பிரதமர் நோர்வூட் நகருக்கு வந்து சென்றதன் பின்னர் பலமுறை எனக்கு அவரை சந்திக்க கிடைத்தது. அவரை சந்திக்கின்ற ஒவ்வொரு வேளையிலும் நோர்வூட் கிளங்கன் வைத்தியசாலையை தான் திறந்து வைத்தபோது மலையக மக்கள் தன்னை அன்போடும் மரியாதையோடும் வரவேற்றதை அவர் பெருமையோடு கூறுவார்.நான் எதிர்வரும் மூன்றாம் மாதம் 1ம் திகதி இந்தியாவில் நடைபெறும் சம்மேளனம் ஒன்றில் கலந்துக்கொள்வதற்காக செல்ல இருக்கின்றேன். அன்றைய தினம் நிச்சயமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மலையக மக்கள் உங்களை பற்றி என்னிடம் விசாரிப்பார். தங்களுடைய இன்பம் துன்பம் தங்களுடைய பிரச்சினைகள் தொடர்பாக என்னிடம் விசாரிப்பார் அப்போது நான் இங்குள்ள நிலைமைகள் தொடர்பாக பிரதமருக்கு எடுத்து கூறுவேன். நான் இங்கு உரையாற்றும் முன்னர் மலையக மக்கள் தொடர்பிலான வரலாற்று திரைப்படம் ஒன்று காண்பிக்கப்பட்டது.

பிரித்தானியர் காலத்திலே இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தொழில் நிமித்தம் வரவழைக்கப்பட்ட மலையக மக்கள் எவ்வாறான துன்பங்களை அனுபவித்தனர் என எனக்கு நன்கு தெரியும்.மலையக மக்கள் பரம்பரையாக மகிழ்ச்சியாக வாழ்ந்தவர்கள் அல்ல.நீங்கள் அன்று அனுபவித்த அனைத்து துன்பங்களுக்கும் உங்களுக்கும் விடுதலையை பெற்றுக்கொடுத்தவர் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான்.அவரை யாரும் இலகுவில் மறந்து விட முடியாது.நான் ஆறுமுகன் தொண்டமானோடு மிக குறுகிய காலமாகவே பழகி இருக்கின்றேன்.ஆனால் தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் அவர்களோடு மிக நீண்ட காலமான நட்பு இருக்கின்றது. அவர் மக்களை நேசித்து போல எங்களுடனும் நட்புறவை பேணி வந்தார்.

இந்த நாட்டிலே தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமானுக்கு கௌரவம் கொடுப்பவர்கள் மரியாதை செலுத்துபவர்கள் மலையக மக்கள் மாத்திரமல்ல இந்நாட்டில் வாழும் தமிழ்,சிங்கள,முஸ்லிம் அனைத்து மக்களும் ஆகும். சௌமிய மூர்த்தி தொண்டமானின் பெயரையோ செயற்பாடுகளையோ யாராவது தடுக்க முயற்சித்தால் அது மாபெரும் குற்றம் என்பதை நான் கூற விரும்புகின்றேன்.

உங்களை போன்று இந்த நாட்டிலே வாழ்கின்ற தொழிலாளர் பிரச்சினைகளுக்கும் தொழிற்ச்சங்க பிரச்சினைகளுக்கும் ஒரு வரலாற்று முக்கியத்துவத்தை கொடுத்தவர் சௌமிய மூர்த்தி தொண்டான் ஆகையால் அட்டன் தொழிற் பயிற்சி நிலையத்தின் அவருடைய பெயர் நீக்கப்பட்டமைக்கு நான் வருந்துகின்றேன். சௌமிய மூர்த்தி தொண்டமானின் பெயரை எங்கெல்லாம் அழித்தீர்களோ அங்கெல்லாம் உடனடியாக அவரின் பெயரை மீண்டும் சூட்டும்படி அவருடைய பெயரை நீக்கியவர்களுக்கு அறிவித்துள்ளேன்.

இன்று தோட்ட தொழிலாளர்களுக்கு ஏராளமான பிரச்சினைகள் இருக்கின்றன. இங்கு பிரச்சினைகள் உருவாக பல காரணங்கள் இருக்கின்றன.ஒரு நோயாளிக்கு ஒரு வைத்தியர் மருந்து கொடுப்பதற்கு முன்னர் அவருக்கு என்ன நோய் பற்றி பரிசோதித்து அறிய வேண்டும். அதேபோலதான் தோட்ட தொழிலாளர்களுக்கு என்னென்ன பிரச்சினைகள் எதனால் உருவாகின்றது என்பது தொடர்பாக ஆராய்ந்து பார்க்க நான் விரும்புகின்றேன். இந்த அரசாங்கம் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு கொஞ்ச கொஞ்சமாக தீர்வை பெற்றுக் கொடுத்துள்ளது. 1964ம் ஆண்டளவில் எனது கட்சியின் தலைவி அமரர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தத்தினூடாக மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுத்தார். அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் காணப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.அதேபோல மலையக மக்கள் மத்தியில் வீடமைப்பு பிரச்சினை மற்றும் சுகாதார பிரச்சினை மிக அதிகமாக காணப்படுகின்றன.

எனவே வீடமைப்பு திட்டத்தில் தற்போது வழங்கப்படும் 7 பேர்ஜஸ் காணியை அதிகரிக்கும் ஆலோசனை என்னிடம் இருக்கின்றது. பெருந்தோட்ட பகுதிகளில் தேயிலை செடிகளை நாட்டுவது மிக நீண்ட காலமாக நடைபெறவில்லை.இந்த பெருந்தோட்ட தேயிலை தோட்டங்களை நிர்வகிக்கும் நிர்வாகங்களிடம் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. மேலும் கடந்த 20 ஆண்டுகளில் தோட்டப் புறங்களில் பெருந்தோட்ட பயிர் செய்கையின் அபிவிருத்தி நடவடிக்ககைள் மிக மிக குறைவாக இருக்கின்றது.இதனை நடத்துபவர்கள் வருமான நோக்கத்திலே இருக்கின்றார்களே தவிர அதனை அபிவிருத்தி செய்ய வில்லை.

இந்த நாட்டிலே தேயிலை பயிர்ச்செய்கை மாத்திரமல்ல ஏனைய பயிர்ச்செய்கையும் நாம் ஆராய வேண்டும். தேயிலை தோட்டங்களிலே தேயிலை செடிகளை முறையாக பயிரிடாமையினால் தான் தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது இது இலங்கையின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

எமக்கு வெளிநாட்டு வருமானத்தை ஈட்டிக்கொடுக்கும் ஒரே ஒரு வருமானம் அது தேயிலை ஏற்றுமதி ஆகும். எனவே பெருந்தோட்ட பயிர்ச்செய்கையில் இன்னும் பல புதிய மாற்றங்களை நாம் ஏற்ப்படுத்த வேண்டும்.அதேபோல தென்னை பயிர்ச்செய்கையிலும் வீழ்ச்சி ஏற்ப்பட்டுள்ளது.தேயிலை,தென்னை போன்ற பெருந்தோட்ட பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கவும் புதிய திட்டங்களை உருவாக்கி அதில் முழுமையான பயனை மக்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் பல புதிய மாற்றங்களை உருவாக்க உள்ளேன்.

இலங்கை நாட்டின் தேயிலை உலகிலே மிக தரமான தேயிலை என்பதை நீங்கள் அனைவரும் உணர வேண்டும். ஒரு சில முகவர்கள் நமது நாட்டின் தேயிலையுடன் வெளிநாட்டு தேயிலையை கலப்படம் செய்து ஏற்றுமதி செய்து நமது நாட்டின் தேயிலைக்கு அவப் பெயரை ஏற்ப்படுத்துகின்றனர்.அதேபோல மிளகு ஏற்றுமதியிலும் இவ்வாறான செயல்களில் முகவர்கள் ஈடுபடுகின்றனர்.

எனவே தரமான தேயிலை,மிளகு போன்றவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளேன். தேயிலை உறற்பத்தியில் வீழ்ச்சி ஏற்ப்பட்டால் மலையக மக்களின் வாழ்வாதாரத்தில் பின்னடைவு ஏற்படும். இவை அனைத்துக்கும் தீர்வை பெற்றுக்கொடுக்க நல்லதொரு வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளேன்.அதேபோல தேயிலை உற்பத்தியோடு மரக்கறி உற்பத்தியையும் மக்கள் மத்தியில் ஊக்குவித்து வருகின்றேன். விதை கிழங்கு 100 ற்கு 50 வீதம் மானியத்தை பெற்றுக்கொடுத்துள்ளேன்.

மலையக நகரங்களை நாம் பாதுகாக்க வேண்டும்.அட்டன்,நுவரெலியா,தலவாக்கலை,கந்தபல போன்ற பிரதேசங்களில் புதிய நகர நிர்மாணங்களை உருவாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றேன். நான் சுகாதார அமைச்சராக இருந்தபோது அட்டன் நோர்வூட் கிளங்கன் வைத்தியசாலையை இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணித்தேன்.அதனை இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அப்போது அங்கு பல்வேறு குறைபாடுகள் நிலவுவதாக நான் அறிந்தேன் அதனை வெகுவிரைவில் தீர்த்து வைக்க நடவடிக்கை மேற்கொள்வேன்.

தற்போது உரையாற்றிய எஸ்.பி.திஸாநாயக்க அட்டன் பிரதேசத்திலே அதிகமாக கஞ்சா போன்ற போதைப்பொருள் மக்கள் மத்தியில் விற்பனை செய்யப்படுவதாக கூறினார். மக்களுக்கு தெரியும் நான் போதைப் பொருட்கள் ஒழிப்பது தொடர்பில் பல்வேறு வேலைத்திட்டங்களை கடந்த சில வருடங்களாக மேற்கொண்டு வருகின்றேன். அதன் அடிப்படையில் தோட்டப் புறங்களுக்கு போதைப் பொருட்களை கொண்டு வருபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க இருக்கின்றேன்.

மலையக மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வை பெற்றுக்கொடுக்க கடினமான வேலைத் திட்டம் ஒன்றை முன்னெடுப்பேன். நான் இந்த வாரத்தில் இரத்தினபுரி,மட்டக்களப்பு,யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளுக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றேன். அங்கு இன்று மலையக மக்கள் கூடியதுபோல பெருந்திரளான மக்கள் என்னை வரவேற்றனர். எனவே இத்தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி முழு நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி செய்யப்பட்டு விட்டது.

என்னால் உருவாக்கப்படுகின்ற அனைத்து பிரதேச சபை பிரதிநிதிகள் மக்களுக்கு சேவை செய்ய கோடிக் கணக்கான நிதியை கொடுக்க நான் தயாராக இருக்கின்றேன். நான் சொன்னால் அதனை செய்வேன் அதேபோல பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கும் தீர்வை பெற்றுக்கொடுத்தேன். மாகாண அமைச்சர் ரமேஸ் மற்றும் செந்தில் தொண்டமான் என்னிடம் மக்களின் அபிவிருத்திகள் தொடர்பாக அதிகமாக பேசுவார்கள் அவர்கள் மக்களின் அபிவிருத்திக்காக என்னிடம் நிதி கேட்டுள்ளார்கள். நானும் அதனை ஏற்றுக்கொண்டு கோடிக் கணக்கில் பணம் கொடுத்துள்ளேன்.

அண்மையில் நான் பயணித்த ஹெலிகெப்டர் காலநிலை சீர்கேடு காரணமாக கொட்டக்கலையில் ஆறுமுகன் தொண்டமானின் வீட்டருகே தரையிறக்கம் செய்யப்பட்டது.அப்போது என்னை சூழ்ந்து கொண்ட கிராம மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களிடம் தங்களின் குறைபாடுகளை கேட்டேன். அப்போது கொட்டக்லை வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டி ஒன்று தேவை என்றும் பாடசாலையில் மலசல கூட வசதியில்லை என்றும் என்னிடம் கூறினார்கள் அதற்கிணங்க ஓரிரு மாதங்களில் அம்புலன்ஸ் வண்டி ஒன்றையும் பாடசாலைக்கு தேவையான வசதிகளையும் செய்து கொடுத்தேன்.



அனைத்து மக்களும் எதிர்பார்க்கும் நல்ல பல திட்டங்களை உருவாக்குவேன்.மேலும் செயமிய மூர்த்தி தொண்டமானின் பெயர் நீக்கப்பட்ட இடமெல்லாம் மீண்டும் அப்பெயரை சூட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பேன். எனவே அனைத்து மக்களும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ம் திகதி சேவல் சின்னத்திற்கு வாக்களித்து ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான தொழிற்சங்கத்தை சக்தி பலப்படுத்துங்கள். இவை அனைத்திற்கும் எனது பூரண ஆதரவை வழங்குவேன் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -