கதிர்காமம் என்றாலே பெரும்பாலானோரின் நினைவில் முதலில் வருவது கதிரைமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையான் கதிர்காமக் கந்தன் ஆலயமே. இந்தக் கதிரைமலை, "ஏழுமலை" என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால், உண்மையில் கதிர்காமத்தைச் சூழ்ந்து ஏழு மலைகள் அமைந்துள்ளன என்பது பலருக்கும் அறியாத தகவலாகும்.
கதிரைமலை, வள்ளிமலை, தெய்வானைமலை, இடும்பன்மலை, நாகமலை, பச்சைமலை, களுகுமலை மற்றும் விபூதிமலை ஆகிய மலைகள் தெய்வீக மகத்துவம் வாய்ந்ததாக பக்தர்களால் கருதப்படுகின்றன. இவற்றில் கதிரைமலைக்கு மட்டுமே பொதுமக்கள் சுதந்திரமாகச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஏழு மலைகளில் மிகவும் வியப்பூட்டும் தனிச்சிறப்பைக் கொண்டது விபூதிமலை. கதிர்காமத்திலிருந்து கித்துள்பாவ வழியாக சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த மலை, தனித்துவமான ஆன்மிக மரபால் பிரபலமானது.
ஆடி மாதத்தில் நடைபெறும் கதிர்காமக் கந்தனின் ஆடிவேல் திருவிழா காலமான சுமார் 15 நாட்களில் மட்டுமே இம்மலையில் இயற்கையாக விபூதி தோன்றுவதாக நம்பப்படுகிறது. அந்த இயற்கை விபூதியே பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டாண்டு காலமாக குறிப்பிட்ட பரம்பரையைச் சேர்ந்த குடும்பத்தினரே இந்த விபூதியை எடுக்கும் மரபை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றனர்.
அண்மையில் சித்தர்கள் குரல் அன்பர்கள் அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் சிவசங்கர் ஜீ தலைமையில் பக்தர்கள் விபூதிமலைக்கு சென்று விசேட பூஜை நடத்தி, மரபுப்படி விபூதி எடுக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
இதுகுறித்து தலைமுறைகளாக விபூதி சேகரித்து பக்தர்களுக்கு வழங்கி வரும் ரவீந்திரன் என்ற இளைஞர் கூறியதாவது:
“நாங்கள் பிறந்த நாளிலிருந்தே இந்தப் பணியைத்தான் செய்து வருகிறோம். விபூதிமலையில் கதிர்காமக் கந்தனின் ஆடிவேல் திருவிழா நடைபெறும் சுமார் 15 நாட்களில் மட்டுமே மணல் போன்ற வடிவில் விபூதி உருவாகும். மற்ற நாட்களில் அது வெண்மையான பாறையாகவே காணப்படும். அதை உடைக்கவோ எடுக்கவோ முடியாது. இது முழுவதும் கந்தனின் அருளால் நிகழும் அதிசயம் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றார்.
ஆன்மிக நம்பிக்கைகளும், பாரம்பரிய மரபுகளும் இணைந்திருக்கும் இந்த விபூதிமலை, கதிர்காமத்தின் மறைந்திருக்கும் அரிய அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது. கதிர்காமத்திற்குச் செல்லும் பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் இந்த இடத்தையும் நேரில் சென்று கண்டு அதன் தனிச்சிறப்பை அனுபவிக்கலாம்.

0 comments :
Post a Comment