மலரும் புத்தாண்டு அரசியல் பலத்தை நிரூபிக்கும் தேர்தல் ஆண்டாக விளங்கப் போகின்றது. இந்த ஆண்டில் நாட்டு மக்கள் அனைவரும் சகல அரசியல் உரிமைகளையும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தமது செய்தியில்,
2017 ஆம் ஆண்டு இறுதியில் ஆரம்பமான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2018 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நிறைவடையவுள்ளது. தொடர்ந்து மாகாண சபைத் தேர்தலும் வரவுள்ளது. எனவே, இந்த வருடத்தை தேர்தல் ஆண்டு என்று கூறினால் மிகையாகாது.
மக்களின் உரிமைகளை நிலைநாட்டவும், நிம்மதியான அமைதியான வாழ்க்கை நடைபெறவும் அரசியல் ரீதியான செயற்பாடுகள் இன்றிமையாதனவாக உள்ளன. அந்த வகையில் நடைபெறும் உள்ளூராட்சித் தேர்தல் ஊடாக அரசியல் அதிகாரம் பரவலாக்கப்படுகின்றது. மலையகத்தைப் பொறுத்த வரையில் புதிதாக நான்கு பிரதேச சபைகள் அமையவுள்ளன. இதன் தொடர்ச்சியாக நான்கு பிரதேச செயலகங்களும் கிடைக்கவுள்ளன. இவற்றின் ஊடாக மக்களின் சிரமங்கள் நீங்கி, உரிய பயன்கள் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே, எம்மை நாமே ஆள்வதற்கு கிடைத்துள்ள அரசியல் வாய்ப்பை எமது மக்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அதேபோல், மக்களின் நிலையான வாழ்வாதாரத்துக்கு தேவையான அரசியல் அங்கீகாரத்தைப் பெற்று தனி வீட்டுத் திட்டம் வெற்றி பெறவும், மலையக மக்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படவும் போட்டிப் பொறாமைகள் நீங்கி ஒற்றுமை வளரவும் பிறந்துள்ள புத்தாண்டு சுபிட்சம் மிக்கதாக அமைய வேண்டும் என வாழ்த்துகிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
