சாய்ந்தமருது நகரசபை விவகாரத்தில் அனைத்து தரப்புகளுடனும் பேச்சு நடத்தத் தயாராக உள்ளோம்.பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் அதம்பாவா



எம்.வை.அமீர்-
சாய்ந்தமருது கலாசார நிலையத்தின் ஏற்பாட்டில், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்ட “திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் – 2026” இன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் வருடாந்த பாராட்டு மற்றும் விருது வழங்கும் விழாவும் 2026.05.24 ஆம் திகதி சாய்ந்தமருது கலாசார நிலையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அம்பாறை கரையோர மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் அதம்பாவா, சாய்ந்தமருது நகரசபை தொடர்பான தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாக கருத்து வெளியிட்டார்.

சாய்ந்தமருது நகரசபை விவகாரம் தொடர்பாக பல்வேறு குழுக்கள் தம்மை சந்தித்து கலந்துரையாடி வருவதாக தெரிவித்த அவர், “யாரையும் நாம் புறக்கணிக்கவில்லை. எல்லோருடனும் பேசத் தயாராக இருக்கிறோம். ஒருமித்த குரலுடன் இந்தப் பிரதேசத்தின் நகர அபிவிருத்தி மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அடைய வேண்டும்” என வலியுறுத்தினார்.

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் சில தவறான தகவல்களையும் அவர் சுட்டிக்காட்டினார். “என்னைச் சந்திக்க முடியாது என்று சிலர் முகப்புத்தகங்களில் எழுதுகின்றனர். அது உண்மையல்ல. கல்முனை மாநகர எல்லைக்குள் உள்ள பல குழுக்களுடன் நான் தொடர்ந்து கலந்துரையாடி வருகிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

சாய்ந்தமருது நகரசபை விவகாரத்தில் முதற்கட்டமாக எல்லை நிர்ணயம் மற்றும் நிர்வாக அடிப்படைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளதாகவும், சிலர் எதிர்காலத் தேர்தல் நோக்கில் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார். “முதலில் அடிப்படை நிர்வாகத் தீர்வுகளை உறுதி செய்ய வேண்டும். பின்னர் தேர்தல் உள்ளிட்ட விடயங்கள் வரும்” என்றார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் தற்போது கிடைத்துள்ள அரசியல் வாய்ப்புகளை பயன்படுத்தி, கல்முனை மாநகர எல்லைக்குள் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார். தமிழர், முஸ்லிம், சிங்கள மக்கள் அனைவரும் சமத்துவமாகவும் ஒற்றுமையாகவும் வாழக்கூடிய சூழலை உருவாக்குவது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இதன்போது சாய்ந்தமருது கலாசார நிலைய அபிவிருத்தி தொடர்பிலும் அவர் கருத்து தெரிவித்தார். கலாசார நிலையத்தில் காணப்பட்ட குறைபாடுகள் குறித்து தமக்கு அறிவிக்கப்பட்டதாகவும், அவற்றை நிவர்த்தி செய்ய புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுடன் தொடர்பு கொண்டு தேவையான வசதிகளுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

குளிரூட்டும் வசதி வசதி, ஸ்மார்ட் போர்ட், ஜெனரேட்டர் உள்ளிட்ட தேவைகள் தொடர்பாக பட்டியல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் திருமணங்கள் மற்றும் பெரிய சமூக நிகழ்வுகளையும் நடத்தக்கூடிய வகையில் மண்டபத்தை மேலும் அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சாய்ந்தமருது உள்ளிட்ட கரையோரப் பகுதிகளின் வீதி, கழிவுநீர், சுகாதாரம், நீர்ப்பாசனம், விவசாயம் மற்றும் மீன்பிடி துறைகள் தொடர்பான அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நிகழ்வில் சாய்ந்தமருது கலாசார நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.பி. நௌசாத் தலைமையிலான ஏற்பாட்டுக் குழுவினருக்கு பாராளுமன்ற உறுப்பினர் தனது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் கலந்து கொண்டு உரையாற்றினார். எம்.எம். ஆஷிக் தனது உரையில், சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலையம் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக தெரிவித்தார். ஆரம்ப காலங்களில் அபிவிருத்தி இன்றி காணப்பட்ட நிலையம், பின்னர் கிடைத்த நிதியுதவிகளின் மூலம் முழுமையான வசதிகளுடன் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, பாராளுமன்ற உறுப்பினரின் பங்களிப்பால் கலாச்சார நிலையத்தின் தேவைகள் முன்னுரிமைப்படுத்தப்பட்டு பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் பாராட்டினார்.

மேலும், கடந்த ஐந்து ஆறு ஆண்டுகளில் பல்வேறு பயிற்சி நெறிகள் மற்றும் மாணவர்களின் திறன் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட நிகழ்ச்சிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அழிந்து வரும் பாரம்பரிய கலைகள் மற்றும் கலாச்சார அம்சங்களை மீள உயிர்ப்பிக்கும் பணியில் கலாச்சார மத்திய நிலையம் முக்கிய பங்கு வகித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அதன் ஒரு பகுதியாக, 152 மாணவர்கள் பாரம்பரிய கலை மற்றும் கலாச்சார பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து சான்றிதழ்களைப் பெற்றிருப்பது பெருமைக்குரிய விடயமாகும் என தெரிவித்தார்.

இன்றைய கல்வி முறை கல்விச்சாதனைகளை அளித்தாலும், முழுமையான மனிதர்களை உருவாக்குவதில் சவால்கள் உள்ளதாக குறிப்பிட்ட அவர், கலை, கலாச்சாரம் மற்றும் விளையாட்டு போன்ற துறைகள் மாணவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கு அவசியமானவை என வலியுறுத்தினார். சமூகத்தில் அதிகரித்து வரும் தீய பழக்கவழக்கங்களிலிருந்து இளைஞர்களைப் பாதுகாக்கவும், திறமையான மற்றும் பொறுப்புள்ள தலைமுறையை உருவாக்கவும் கலை மற்றும் கலாச்சார செயற்பாடுகள் முக்கிய ஆயுதமாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, கலாச்சார மத்திய நிலையம் அண்மையில் நடைபெற்ற போட்டி நிகழ்வொன்றில் முதலிடம் பெற்றிருப்பது சாய்ந்தமருதுக்கும் கலாச்சார நிலையத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாகக் கூறிய அவர், அதற்காக பாடுபட்ட பயிற்றுநர்கள், அதிகாரிகள் மற்றும் ஏற்பாட்டாளர்களுக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார். எதிர்காலத்திலும் இவ்வாறான திறன் மேம்பாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு, சமூகத்திற்கு பயனுள்ள முழுமையான இளைஞர்கள் உருவாக்கப்பட வேண்டும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பர்ஹான், சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்ற புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டப் பாடநெறிகளைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழாவில் உரையாற்றினார்.

தனது உரையில், இந்நிகழ்வு சாதாரண சான்றிதழ் வழங்கும் நிகழ்வல்ல என்றும், சமூகத்தின் கலாசார அடையாளத்தையும் பாரம்பரிய மரபுகளையும் பாதுகாக்கும் விழிப்புணர்வு நிகழ்வாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். ஒரு சமூகத்தின் உண்மையான செல்வம் அதன் கட்டிடங்களோ அல்லது பொருளாதார வளங்களோ அல்ல; அதன் கலாசாரம், மரபு மற்றும் பண்பாட்டு அடையாளங்களே என அவர் வலியுறுத்தினார்.

மேலும், இன்றைய தொழில்நுட்ப உலகில் இளைஞர்கள் அலைபேசிகளில் நேரத்தை செலவிடும் சூழலில், மரபு கலைகள் மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளில் சிறுவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். இவ்வாறான நிகழ்வுகள் எதிர்கால தலைமுறையினருக்கு கலாசார விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றும் பாராட்டினார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவை பாராட்டிய அவர், எந்த நிகழ்வாக இருந்தாலும் மக்களுடன் இணைந்து செயல்படும் அர்ப்பணிப்புள்ள மக்கள் பிரதிநிதியாக அவர் திகழ்கிறார் எனக் குறிப்பிட்டார். கரையோரப் பகுதிகளின் அபிவிருத்திக்காக பாராளுமன்ற உறுப்பினரின் சேவையை மக்கள் பயனுள்ளதாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இறுதியாக, நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த ஏற்பாட்டுக்குழுவினருக்கும் கலாசார நிலைய நிர்வாகத்தினருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு உரையை நிறைவு செய்தார்.

நிகழ்வில் அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் டி.எம். ரின்சான் கல்முனை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம். பழீல், அக்கரைப்பற்று, மருதமுனை கலாச்சார நிலையப் பொறுப்பதிகாரிகள், பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் ரஸ்மி மூஸா உள்ளிட்ட பலரும் சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

சாய்ந்தமருது கலாசார அதிகார சபை தலைவர் கலைஞர் அஸ்வான் எஸ். மௌலானாவின் வரவேற்புரையுடன் ஆரம்பமான

நிகழ்வை சாய்ந்தமருது கலாசார அதிகார சபை பிரதித்தலைவர் நூருல் ஹுதா உமர் நெறிப்படுத்தினார்

கலாசார மற்றும் திறன் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு பல்வேறு பயிற்சிப் பாடநெறிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்த மாணவர்களுக்கான பாராட்டு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வாக அமைந்த இவ்விழாவில், தேசிய பிரதீபா போட்டிகள் மற்றும் மாகாண மட்டங்களில் சாதனை படைத்த பலரும் கௌரவிக்கப்பட்டனர்.













































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :