சாய்ந்தமருது உள்‌ளூராட்சி சபை- பின்னணியும் பிரச்சினைகளும்

ஜெம்சாத் இக்பால்-

ண்மையில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கட்டார் நாட்டுக்கு சென்றிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், 25ஆம் திகதி அங்குள்ள பீனிக்ஸ் பாடசாலையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பேசிய விடயங்களை தொகுத்து இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபை என்றிருக்கின்ற பிரதேசம் எமது கட்‌சியின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃபின் காலத்தில் ஏற்கனவே இருந்த கல்முனை பிரதேச சபையை நகர சபையாக்கி, நகர சபையை மாநகர சபையாக்குகின்ற பணியை தலைவருடைய இழப்பின் பிறகு 2001ஆம் ஆண்டளவிலே நாங்கள் மாநகர சபையாக பிரகடனப்படுத்தினோம்.


அதன்பின்னர், பலவிதமான பிரச்சினைகளின் பின்னணியில் தலைவரின் மரணத்தின் பின்னர் தான் சாய்ந்தமருது பிரதேசத்துக்கான பிரதேச செயலகமும் பிரகடனப்படுத்தப்பட்டது. நானும் தலைவரின் பாரியார் பேரியல் அஷ்ரஃபுக்கும் இடையில் இருந்த கூட்டுத்தலைமை என்ற ஒரு சிக்கல், 2002இல் சாய்ந்தமருது மக்கள் முன்னிலையில் பிரமாண்டமான கூட்டத்தில் எனது கரங்களுக்கு தலைமைப்பதவி வந்துசேர்ந்த நிகழ்வில்தான் சாய்ந்தமருது பிரதேச செயலகம் பிரகடனப்படுத்தப்பட்டது.

அதன்பின்னர் மாநகர சபை தேர்தல் வருகின்றபோது வழமைபோல மேயர் பதவி யாருக்கு என்ற ஒரு பெரிய சிக்கலுக்கு கட்சி முகம்கொடுத்தது. கடந்த மாநகர சபைத் தேர்தலில் கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மத்தியில் இந்தப் போட்டி நிலவியது. சாய்ந்தமருதில் திடீரென கட்சிக்கு அறிமுகமான வேட்பாளரும் மாநகர சபை மேயர் பதவியை இலக்குவைத்து தேர்தலில் போட்டியிட்டார்.

கடைசியில் மேயர் பதவி யாருக்கு வழங்குவது என்பதில் கல்முனை மற்றும் சாய்ந்தமருதுக்கு ஒரு பெரிய இழுபறி காணப்பட்டது. வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்த சாய்ந்தமருதைச் சேர்ந்த புதிய அபேட்சகருக்கு மேயர் பதவி வழங்கப்பட வேண்டும் என்பது சாய்ந்தமருது பிரதேசத்தின் கோரிக்கையாக இருந்தது.

கட்சியின் நீண்டகால உறுப்பினராக இருக்கும் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பருக்கு மேயர் பதவி வழங்கப்படுவதை எதிர்த்து, சாய்ந்தமருதில் சில போராட்டங்கள் மிக தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. இவற்றை புரிந்துகொண்டால்தான் சரியான பரிமாணத்தை உணர்ந்து, இதில் சமூகமும் கட்சியும் பிரதேசமும் ஏற்றுக்கொள்ளக் கூடிய இறுதித்தீர்வை நாங்கள் எட்டுவதற்கான நியாங்களை புரிந்துகொள்ளலாம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கம் பிரதேசவாதம் என்பதற்கு சாவுமணி அடிக்க வேண்டும் என்ற ஒரு முக்கியமான விடயத்தை முன்நிறுத்தி மறைந்த தலைவரினால் உருவாக்கப்பட்ட இயக்கம். ஆனால், துரதிஷ்டவசமாக தவிர்க்கமுடியாத சில காரணங்களால் பிரதேச ரீதியான பிணக்குகளும், பிரச்சினைகளும் இன்னும் தீராமல் தொடர்ந்துகொண்டிருப்பது கவலைக்குரிய விடயம்.

இதற்காக சாய்ந்தமருது பிரதேச சபை கொடுக்கப்படக்கூடாது என்பதற்கான நியாயமாக இதை எடுத்துக்கொள்ள முடியாது. அதற்கு பல நியாயங்கள் உள்ளன. இதற்கு மத்தியில் இப்பிரச்சினையின் பின்னணியை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எவ்வளவு தூரம் இந்தப் பிரச்சினை போனதென்றால், சில வர்த்தக நிலையங்கள் தீவைத்து கொளுத்தப்படும் அளவுக்கு வன்முறைக்கு இட்டுச்செல்கின்ற அளவுக்கு போய்விட்டது.

இப்போது கட்சியை விட்டு விலகிச் சென்றுள்ள ஜெமீல், அப்போது நிஸாம் காரியப்பருக்கு ஆதரவளித்தார் என்ற காரணத்துக்காக அவருடைய வர்த்தக நிலையம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. கல்முனைக்கும் சாய்ந்தமருதுக்கும் இடையிலிருந்த கட்சி அரசியல்வாதிகளுக்கிடையே இருந்த போட்டி காரணமாக இந்த விபரீதங்கள் நடந்தேறின.

சாய்ந்தமருதில் போட்டியில் சிராஸ் மீராசாஹிப், கல்முனையில் போட்டியிட்ட நிஸாம் காரியப்பர் ஆகியோருக்கிடையிலான பிரச்சினைக்கு தீர்வாக, இருவரும் மேயர் பதவிக்காலத்தை இரண்ரை வருடங்களுக்கு பகிர்ந்துகொள்வேண்டும் என்று கூறினோம். அதனடிப்படையில் இணக்கத்தீர்வுக்கு வந்த பின்னர், சிராஸ் மீராசாஹிபுக்கு மேயர் பதவியை முதலில் கொடுத்தோம்.

ஆனால், மேயர் பதவியை திருப்பிக் கையளிக்கும் நேரம் வந்தபோது அதனை இழக்க விரும்பாமல், முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்று சிராஸ் மீராசாஹிபும் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரும் விரும்பினர். இதனால் நான் கடுமையானதொரு நிலைப்பாட்டை எடுக்க நேரிட்டது. கட்சி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும். அவர் தனது மேயர் பதவியை இராஜினாமா செய்யாவிட்டால், அவர் கட்சியை விட்டு நீக்கப்படுவார் என்ற கடுமையான அறிவிப்பைச் செய்ய நேரிட்டது.

இந்த அறிவிப்புச் செய்தன் பின்னர், சிராஸ் மீராசாஹிப் மன்னிப்புக் கேட்டு, மேயர் பதவியை இராஜினாமா செய்து பிரச்சினைக்கு சுமுகமான தீர்வுக்கு எட்டப்பட்டது. இப்போது அவரும் கட்சியில் இல்லை. இருந்தாலும் சாய்ந்தமருதுக்கு வழங்கப்பட்ட மேயர் பதவியை பறித்து கல்முனைக்கு வழங்கப்பட்டதாக திரைமறைவில் சொல்லப்படும் குற்றச்சாட்டு வேதனைக்குரிய விடயம்.

அதுபோல கல்முனைக்கு மேயர் பதவி கொடுக்கவேண்டும் என்று சொன்ன ஜெமீலும் பின்னர் கட்சியுடன் முரண்பட்டார். கடந்த மாகாண சபைத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் கட்சிக்கு இரண்டு அமைச்சுப் பதவிகள் கிடைத்தபோது, அதில் ஒன்றை அம்பாறை மாவட்டத்துக்கு கொடுப்பதற்‌கு தீர்மானித்தோம். அதை தனக்கு வழங்கவேண்டும் என்று ஜெமீல் விடாப்பிடியாக நின்‌றார்.

ஆனால், சம்மாந்துறையில் நீண்ட இடைவெளியின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னத்தில் அந்த தொகுதியை வென்‌றிருந்தது. அந்த சூழ்நிலையில், சம்மாந்துறைக்கு பாராளுமன்ற உறுப்பினர் இல்லாதநிலையில், மாகாண அமைச்சு பதவியை சம்மாந்துறைக்கு வழங்கவேண்டும் என்ற கோரிக்கைக்கு கட்சி செவிசாய்க்க நேரிட்டது. ஆனால், தனது அமைச்சு பதவி வழங்கப்படவில்லை என்பதை காரணம்காட்டி, பிரிந்துசென்ற ஜெமீல் இப்போது கட்சிக்கு எதிராக செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்.

சாய்ந்தமருதுக்கு வந்த பதவிகளை கட்சி தரவில்லை அல்லது தந்த பதவிகளை பறித்தது என்று பேசுகின்ற அதேநேரம், சாய்ந்தமருதுக்கு ஒரு தேசியப்பட்டியல் பதவியை கட்சி வழங்கியது என்பதையும் இங்கு ஞாபகப்படுத்தவேண்டும். அதுவும் கல்முனையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இருக்கின்ற நிலையில், சாய்ந்தமருதுக்கு தேசிப்பட்டியல் ஆசனத்தை வழங்கியிருந்தோம்.

அந்த தேசியப்பட்டியலை பெற்றவர், கட்சி அரசாங்கத்தோடு முரண்பட்டு விலகியபோது அவர் விலகாமலிருந்து தன்னுடைய பிரதியமைச்சர் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக கட்சிக்கு துரோகம் செய்தார். அதற்காக சாய்ந்தமருது மக்களோடு கட்சி முரண்பட்டிருக்க முடியாது. மக்கள் கட்சியோடு நின்றார்கள் என்பது ஒவ்வொரு தேர்தலிலும் சாட்சியாக இருந்தது. ஒவ்வொரு தேர்தலிலும் கட்சியின் வாக்குவங்கியில் பலவீனப்படுத்தாத பிரதேசமாக சாய்ந்தமருது இருந்துவருகிறது.

சாய்ந்தமருது பிரதேசசபை கோரிக்கை இவ்வாறானதொரு விபரீதங்களோடு தொடர்புபட்டதாக இருக்கின்ற நிலையில், சாய்ந்தமருதுக்குரிய அரசியல் அந்தஸ்தை கல்முனைக்குடி மக்கள் சரியாக தருவதில்லை என்பதான மனப்பதிவின் பின்னணியில் இப்பிரச்சினை இன்று பூதாகரமான பிரச்சினையாக மாறியுள்ளது.

கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது, நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து மூன்று வேட்பாளர்களை மாத்திரம் நிறுத்துகின்ற ஒரு நிலையில், அந்த தேர்தலில் கட்சிக்கெதிராக பிரசாரம் செய்வதற்காக சாய்ந்தமருது பிரச்சினை மீண்டும் களத்துக்கு கொண்டுவரப்பட்டது. அந்த சூழ்நிலையில் தலைவர் என்ற அடிப்படையில் எனக்கு மேல் பலவிதமான அழுத்தங்கள் வந்தன.

ஒரு கட்டத்தில் பிரதமர் தலைமையில் நடந்த கூட்டத்தில், சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை வழங்கப்படும் என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டது. எனவே, அந்த உத்தரவாதத்தை நிறைவேற்றுகின்ற தார்மீகப் பொறுப்பு கட்சிக்கு இருக்கின்றது.

இதுசம்பந்தமாக இடையே நுழைந்து, இதைவைத்து தங்களுடைய அரசியலை செய்யவேண்டும் என்ற முயற்சியில், கட்சியிலிருந்து விலகியவர்களும் இன்னும் சிலரும் கட்சிக்கு சவாலாகவிருக்கும் இன்னும் சில சில அமைச்சர்களை வைத்து சில நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்தப் பின்னணியில் சாய்ந்தமருது உள்ளூராட்சிமன்ற கோரிக்கை புதியதொரு வடிவில் சிக்கல்மிக்கதாக மாறியுள்ளது.

புதிய தேர்தல் முறை பற்றி எல்லோருக்கும் தெரியும். விகிதாசார முறையிலும் வட்டாரமுறையிலும் கலப்பு தேர்தல் அடிப்படையில் உறுப்பினர்களை தெரிவுசெய்யும் ஒரு முறை. இதனடிப்படையில் 70% வட்டாரமும் 30% விகிதாசாரமும் என்ற அடிப்படையில் உறுப்பினர்களை தெரிவுசெய்யும் முறை இன்று, 60:40 என்ற முறைக்க மாற்றப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏனைய சிறுபான்மைக் கட்சிகளோடு சேர்ந்து, நீண்ட போராட்டத்தின் பின்னர் இந்த மாற்றத்தை கொண்டுவந்தது.

இந்த மாற்றம் குறித்து, கல்முனை பிரதேச கட்சி ஆதரவாளர்களும், கல்முனை பள்ளிவாசல் சம்மேளனமும் சேர்ந்து சாய்ந்தமருதுக்கான பிரதேசசபை தனியாக வழங்கப்படுகின்றபோது முஸ்லிம்களுடைய ஆதிக்கம் பலவீனப்படுகின்ற ஒரு நிலவரம் ஏற்படப்போகும் என்ற புதியதொரு பிரச்சினை கொண்டுவரப்பட்டது.

இந்தப் பின்னணியில்தான், சாய்ந்தமருதுக்கு பிரதேச சபையை கொடுக்கின்ற விடயத்தை கைவிடாமல், கல்முனை மாநகர சபையையும் நான்காகப் பிரித்து அதன்மூலம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும் என்ற தீர்வு முன்வைக்கப்பட்டது. அவ்வாறு செய்கின்றபோது, மூன்று முஸ்லிம் பெரும்பான்மை உள்ளூராட்சி சபைகளும் ஒரு தமிழ் பெரும்பான்மை உள்ளூராட்சி சபைகளும் உருவாகக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. ஏனவே, அதை செய்வதுதான் சாலப்பொருத்தமாக இருக்கும் என்ற ஒரு விடயம் இப்போது களத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இது சம்பந்தமாக கடந்தவாரம் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுடைய அமைச்சில், நான் மற்றும் சகோதரர் றிஷாத் பதியுதீன், கல்முனை பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், சாய்ந்தமருது பள்ளிவாசல் சம்மேளன முக்கியஸ்தர்கள் மற்றும் கல்முனை பள்ளிவாசல் முக்கியஸ்தர்கள் மத்தியில் கொஞ்சம் காரசாரமான கலந்துரையாடலொன்று நடைபெற்றது. அந்த கலந்துரையாடலின் பின்னர் நாங்கள் நாங்கள் இது சம்பந்தமாக பிரதமரை அணுகினோம்.

1986ஆம் ஆண்டு நான்கு உள்ளுராட்சி சபைகள் இருந்தன. கரைவாகு வடக்கு, கரைவாகு மேற்கு, கரைவாகு தெற்கு அதேநேரம் கல்முனை நகரசபை என்றிருந்த அன்றைய நான்கு உள்ளூராட்சி சபைகளையும் மீண்டும் அதே எல்லைகளுக்கு திரும்பிபோக வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பாக பிரதமருடன் பேசி தீர்த்து தரவேண்டும். அப்படி இல்லையென்றால், சாய்ந்தமருதில் ஒரு பிரதேச சபையை பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கை பேசப்படுகின்றது.

ஆனால், சாய்ந்தமருதை தனியாக பிரித்துக்கொடுப்பதில் கல்முனை பிரதேசத்தில் பாரிய எதிர்ப்பு உருவாகியிருக்கிறது. இதன் பின்னணி எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஆனால், முன்னைய உள்ளூராட்சி சபையில் கரைவாகு வடக்கு, கரைவாகு மேற்கு என்றிருந்தபோது தாழவெட்டுவான் சந்தியிலிருந்துதான் அந்த பிரிப்பு இருந்ததென்பது மருதமுனை, கல்முனை மக்களுக்கு நன்குதெரியும்.

ஆனால், இவ்வாறான பிரிப்பு சம்பந்தமான பகிரங்கமான பிரேரணைகள் கோரப்படுகின்றபோது, கடற்கரை பள்ளிவாசல் வீதியை அடிப்படையாக வைத்து பிரிக்கப்பட வேண்டும் கல்முனை பிரதேச தமிழ் மக்கள் சில காலமாக சொல்லிவருகின்றனர். இதன்மூலம் கல்முனை நகரம் துண்டாடப்பட்டுவிடும். முஸ்லிம்களுடைய ஆதிக்கம் பாதிக்கப்படும் என்ற ஒரு பிரச்சினை உருவானால், பிரிப்பு என்பது சாத்தியமாகாது என்ற விடயத்தில் சாய்ந்தமருது மக்கள் இன்று முரண்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இது சம்பந்தமாக நாங்கள் பிரதமருடன் கதைத்தபோது, இதற்கென ஒரு குழுவை நியமித்து இதை அவசரமாக தீர்த்து தருவதற்கான முயற்சிகளை செய்யுமாறும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார். இதுகுறித்து நான் விமான நிலையத்தில் வைத்து உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவோடும், அவருடைய செயலாளர் கமல் பத்மசிறியோடும் கதைத்து இதற்கான ஒரு விசேட குழுவை நியமிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதற்கான ஒரு தீர்வை நாங்கள் விரைவில் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் எந்த பிரச்சினையும் கிடையாது. இருந்தாலும், இதை அடிப்படையாக வைத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பலவீனப்படுத்துவதற்கான முயற்சியில் ஒருசில சக்திகள் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த சிக்கல் தீர்ந்துவிடக் கூடாது. அப்படித் தீர்ந்தால், அது கட்சிக்கு நன்மையாகிவிடும் என்ற அடிப்படையில் இந்த விடயம் பார்க்கப்படுகின்றது.

இப்பிரச்சினையை கட்சி வேண்டுமென்றே புறந்தள்ளி வருவதாக பார்க்கப்படுகிறது. என்னைப் பொறுத்தமட்டில், இது கட்சிக்குள் உருவாகியிருக்கின்ற பிரச்சினை மாத்திரமல்ல, இரண்டு பிரதான ஊர்களுக்கிடையிலே உருவாகிவரும் பூதாகரமான ஒரு பிரச்சினையாகும்.

இதை மாற்றுவது என்பது ஒரு ஆபத்தான விடயம். எனவே, இதை மிகவும் பொறுப்புணர்ச்சியோடு நாங்கள் கையாளவேண்டிய கடப்பாடும், தார்மீகப் பொறுப்பும் எங்களுக்கு இருக்கிறது. இதை மனதில் நிறுத்தியவர்களாகத்தான் இப்பிரச்சினைகளை அணுகவேண்டும். இது ஊர்சார்ந்த பிரச்சினையாக மாத்திரம் பார்க்கப்படுகின்றபோது உணர்ச்சிபூர்வமாக விடயமாக மாறிவிடுகிறது. இருந்தாலும், இதற்கான தீர்வை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுத்தரும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -