ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
நிந்தவூர் பிரதேச முன்பள்ளிப் பாடசாலைகளுக்கு பிரதியமைச்சர் அனோமா கமகேயின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ரூபாய் 05 இலட்சம் பெறுமதியான கற்றல் உபகரணங்களைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று நிந்தவூர் ஐக்கிய தேசியக் கட்சி இணைப்புக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
நிந்தவூர்ப் பிரதேச ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும், அமைச்சர் தயா கமகேயின் இணைப்புச் செயலாளருமான எம்.எம்.றிபாக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெற்றோலியம், பெற்றோலிய வள அபிவிருத்தி பிரதியமைச்சர் திருமதி. அனோமா கமகே பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, கற்றல், கற்பித்தல் உபகரணங்களைக் கையளித்தார்.
பிரதேச செயலக சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.ஜெமீலா புஹாது உள்ளிட்ட அதிகாரிகள், உள்ளுர் அரசியல் பிரமுகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதே வேளை சீ.ஆர்.சீ பாலர் பாடசாலைக்கு நேரடியாகச் சென்ற பிரதியமைச்சர் அனோமா கமகே பாடசாலையின் தேவைகளை ஆசிரியர்களிடம் கேட்டறிந்து கொண்டதுடன், பாடசாலையின் இடத்தட்டுப்பாட்டை நீக்குமுகமாக இரு மாடிக் கட்டிடம் ஒன்றையும் அமைத்துத் தருவதாக வாக்குறுதியளித்தார்.
மேலும், இம்முறை 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.புஹாதின் புதல்வர் எப்.அப்துல்லாஹ்விற்கு பிரதியமைச்சரால் நினைவுச் சின்னம், பரிசுப் பொருட்கள் என்பனவும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இறுதியாக பாலர் பாடசாலை ஆசிரியைகளால் பிரதியமைச்சர் திருமதி அனோமா கமகே பொன்னாடை போற்றிக் கௌரவிக்கப்பட்டார்.