மழை,வெயில், வெப்பம்,குளிரை வரையறுத்துக் கூற முடியாத நுவரெலியா காலநிலை போன்று காணப்படும் நம் நாட்டு அரசியல் சூழலில் அவ்வப்போது அரசியல் அரங்கம் சூடாவதும் பின்னர் சப்பென்று போவதும் இங்கு வாடிக்கை.
சில தமிழ் திரைப்படங்கள் வெளிவருவதற்கு முன்பே பிரமாண்டமாக செய்தி வரும். கதை அப்படி, கதாநாயகன் இப்படி,வில்லன் அதிரடி என காசு கொடுத்து செய்தி உலாவ விடப்படும். ரசிகர்கள் உசுப்பேற்றப்படுவார்கள். எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகன் படத்தைப் பார்த்ததும் தூ.. இவ்வளவு தானா என சப்புக் கொட்டுவான். என்னடா பெரிய கதையளக்கிரார் முபீன் என வாசகர் சப்புக் கொட்டுவது விளங்குகிறது. தற்போது கிழக்கு மாகாணத்தில் அதிகம் பேசப்படும் முஸ்லிம் கூட்டமைப்பிற்கு மேற்சொன்ன உவமானம் பொருந்தும்.
முஸ்லிம்களின் அரசியல் பலத்தை ஒன்று திரட்டி உரிமைகளையும் ஏனைய விடயங்களையும் சாதிக்க முடியும் என்ற விடயம் உண்மையானது. இது தொடர்பில் தொடர்ச்சியான கருத்துப் பரிமாறல்கள் தொடர்ந்து பரிமாறப்படுவது கவனிக்கத்தக்கது. இவ் முஸ்லிம் கூட்டமைப்பு தொடர்பில் வெளியிடப்படும் கருத்துகள் சிலபோது உண்மையாகவும் சிலபோது அரசியல் சுயநலம் சார்ந்தும் அமைந்து விடுகின்றது. இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதே இப்பத்தியின் நோக்கம்.
நான் பதவி வழியாக அமைச்சர் றவூப் ஹக்கீமுடன் நெருக்கமானவனாக இருந்தாலும் கட்சியின் ஆரம்ப கால பசைவாளிப் போராளி என்ற அடிப்படையில் இதை எழுத எனக்கு தகுதி உண்டு.
முஸ்லிம்களின் உரிமைகளை நிலை நிறுத்த நடப்பட்ட நமது மரம் மாபெரும் தலைவரின் மறைவின் பின் பதவிப் போட்டிகள்,சுயநல அரசியல்,அதிகார ஆசை போன்ற இன்னோரன்ன பிரச்சினைகளால் பலர் கட்சியை விட்டு பிரிந்ததும் தனிக்கட்சி அமைத்ததும் பின்னர் தமது பதவிகளை உறுதிபடுத்திக்கொண்டதும் வரலாறு.
தலைவரின் பின் கட்சியை பாரமெடுத்த தற்போதைய தலைவர் ஹக்கீமின் தலைமைத்துவத்தை கைப்பற்றுவதை குறிவைத்தே காய்கள் நகர்த்தப்பட்டன. தலைமையை கைப்பற்றி கட்சியை கைப்பற்றினால் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியை அடைந்து கொள்வதன் மூலம் தமது அதிகாரப் பசிக்கு தீனி போட முயன்றவர்கள் தமது போராட்டங்களின் போது மக்களின் மனதை வெல்ல சமூகம் சார்ந்த பல்வேறு கருத்துகளை முன்வைத்தாலும் உள்நோக்கம் அப்பட்டமான பதவி வெறியாக அமைந்திருந்தது.
தற்போது முன்னெடுக்கப்படுகின்ற முஸ்லிம் கூட்டமைப்பு தொடர்பில் முன்வைக்கப்படும் கோசங்களின் பின்னால் உள்ள அரசியல் நிலைப்பாடு தொடர்பில் எனது முன்னைய கட்டுரையொன்றில் சுருக்கமாக சொல்லியிருந்தேன். தற்போது இக் கூட்டமைப்பு தொடர்பில் தீவிர செயற்பாட்டில் உள்ள அரசியல் பிரமுகர்களின் கடந்த கால அரசியல் நிலைப்பாடுகள், செயற்பாடுகள் தொடர்பில் சில மீட்டல்களை செய்வதன் ஊடாக இக் கூட்டமைப்பின் யதார்த்தத்தை விளங்கிக்கொள்ள முடியும்.
இம் முஸ்லிம் கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர் முன்னாள் அமைச்சரும், முன்னாள் தவிசாளருமான பஷீர்சேகுதாவூத் எனது மிக நெருக்கமான நண்பர். முன்னாள் ஆயுதப் போராளியும் சிறுபான்மை உரிமைகளுக்காக சிறை சென்றவரும் கூட. ஆனால் பின்னைய நாட்களில் அவரின் அரசியல் நிலைப்பாடுகள் சிறுபான்மை சமூகங்களால் கேள்விக்குட்படுத்தப்படும் நிலைமையை அடைந்தன. தனது அரசியலின் இலக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியே என்று கூறுமளவுக்கு மாறியிருந்தது.
1994 ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பான மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளராக நிறுத்தப்பட்டது முதல், மர்ஹூம் தலைவர் அஷ்ரப் அவர்களின் ஆலோசனையின் பேரில் மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்ப போராளிகள் குழுமம் காத்தான்குடி மன்சூர் தலைமையில் பஷீரின் வெற்றிக்காக தீவிரமாக உழைத்தோம். எமது அரசியல் இலக்கு இஸ்லாமிய அரசியல் இலக்குகளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் நிலைப்படுத்தல் என்ற அடிநாதமாக இருந்தது.
இது தொடர்பில் பஷீருடன் பல பேச்சுவார்த்தைகள் நடத்தி இணக்கம் ஏற்பட்டதன் பின் பிரபல இஸ்லாமிய அறிஞர் ஒருவரின் ஆன்மீக வழி காட்டலில் எமது பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு மாவட்டத்தின் அதிகூடிய இரண்டாம் விருப்பு வாக்குகளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக பஷீரால் பெற்றுக்கொள்ள முடிந்தது. தற்போதைய நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹுமானும் எங்கள் குழுவில் முக்கியமானவர்.
தேர்தல் முடிந்த பின்பு எம்முடன் இணக்கம் கண்ட விடயங்கள் தொடர்பில் எந்த நடவடிக்கையும் பஷீர் முன்னெடுக்கவில்லை. நண்பர்கள் பலரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை விட்டுப் பிரிந்தனர். நான் மட்டும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை விட்டு வேற அரசியல் நிலைப்பாடு எடுக்கவில்லை.
தலைவரின் மரணத்தின் பின் ஏற்பட்ட தலைமைத்துவப் போட்டியில் தற்போதைய தலைவர் றவூப் ஹக்கீமை தலைவராக நிலைப்படுத்துவதில் பஷீரின் பணி மகத்தானது. பின்னர் கட்சிக்குள் அவரின் ஆதிக்கம் வலுவடைந்தது. இது கட்சியின் உச்சபீட உறுப்பினர்களிடையே முரண்பாட்டை தோற்றுவித்தது. தலைவருடன் முரண்பட்டு பலர் பிரிந்தனர். இப் பலரின் பிரிவிற்கு பஷீரின் ஆதிக்கமும் தலைவர் ஹக்கீம் பஷீரின் கட்டுக்குள் கிடக்கிறார் என்பதுமே பிரதான குற்றச்சாட்டாக சொல்லப்பட்டது.
2004 பாராளுமன்ற பொதுத் தேர்தலின் பின்பு மட்டக்களப்பில் வேறொருவருக்கே தேசியப் பட்டியல் கொடுக்க வேண்டும் அது பஷீர் தவிர்ந்த வேறொருவராக இருக்க வேண்டுமென உச்சபீடம் தீர்மானித்தது. பின்னர் எனது பெயரே (முபீன்) தேசிய பட்டியலுக்கு தீர்மானிக்கப்பட்டது. பின்னர் பஷீர் தலைவரை மிரட்டும் அரசியலை முன்னெடுத்து ஈற்றில் அத்தேசிய பட்டியலை தனதாக்கிக் கொண்டார்.
பின்னர் பஷீரின் காய்நகர்த்தல்களே மட்டக்களப்பில் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர்கள் கட்சியை விட்டுப் பிரிய காரணமாக அமைந்தது. அவரின் பிரித்தாளும் தந்திரமே காத்தான்குடி மற்றும் கல்குடாவில் கட்சி வீழ்ச்சியடைய காரணமாக அமைந்தது.
பின்னர் இவருடைய அரசியல் நிலைப்பாடு பெரும்பான்மை சார்பு நிலையை அடைந்தது. மஹிந்தவின் ஆட்சியில் உச்சத்திற்கே சென்றார். பிள்ளையானின் காலத்தைய கிழக்கு மாகாண சபையில் கொண்டுவரப்பட்ட சிறுபான்மையை மோசமாக பாதித்த நாடு நகர சட்ட மூலத்தை சாதகமாக நிறைவேற்றி மஹிந்தவை திருப்திப்படுத்த முயன்றார். அப்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்த நான் (கட்டுரையாளர்) இச்சட்ட மூலத்தை மாகாண சபையில் தோற்கடிக்க பெரும் பிரச்சாரம் செய்த நிலையில், என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொண்ட முன்னாள் தவிசாளர் சட்ட மூலத்தை சாதகமாக வெற்றி பெறச் செய்யுமாறும் பஸில் ராஜபக்ஷ மூலம் அபிவிருத்தி நிதியை பெற்று தருவதாகவும் கூறினார். நான் அதை முற்றாக மறுத்ததுடன், பின்னர் அச் சட்டமூலத்தை கிழக்கு மாகாண சபையில் தோற்கடித்தோம்.
அரசியல் அமைப்பின் 18வது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டவுடன் தலைவர் ஹக்கீமை தொடர்பு கொண்டு எனது கடுங்கண்டனத்தை வெளியிட்டேன். அதன் போது தலைவர் “கட்சியை காப்பாற்ற வேறு வழி தெரியவில்லை மஹிந்தவுடன் இணைந்து கட்சியை உடைக்க சதி நடந்துள்ளதாகவும் தான் கண்ணை திறந்துகொண்டு படுகுழியில் விழுந்து விட்டேன்” என்று என்னிடம் கூறியதுடன், முன்னாள் தவிசாளரே இதற்கு காரணம் என்றார்.
மேற்சொன்ன அரசியல் முரண்பாடு நிலைப்பாடுகளை கொண்ட முன்னாள் தவிசாளரால் எப்படி முஸ்லிம் உரிமையை வென்றெடுக்க முஸ்லிம் கூட்டமைப்பை ஸ்தாபிக்க முடியும்?
மற்ற முக்கிய பிரமுகர் முன்னால் செயலாளர் நாயகம் ஹஸன் அலி அவர்கள், முஸ்லிம் காங்கிரஸின் முதுசம் என அழைக்கப்படுபவர். மர்ஹூம் தலைவர் அஷ்ரப்புடன் இணைந்து கட்சியை வளப்படுத்தியவர். முஸ்லிம் சார்பு உரிமை நிலைப்பாடுகளில் விட்டுக் கொடுக்காத போக்குள்ளவர். ஆனால் கட்சிக்குள் இருக்கும் போது எப்போதும் மௌனமான போக்கை கடைப்பிடிப்பவராக காணப்பட்டார். இன்று தலைவர் றவூப் ஹக்கீமின் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் அவர் அக்குற்றச்சாட்டுகள் நடந்தபோது ஏன் தலைவர் றவூப் ஹக்கீமின் தவறுகளை எதிர்த்து தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவில்லை?
அரசியலமைப்பு ஏற்பாடுகளின்படி இனப்பிரச்சினை தீர்வின் ஒரு வடிவமாக உருவாக்கப்பட்ட மாகாண சபைக்காக 2008ம் ஆண்டு தனது பாராளுமன்ற பதவியை இராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட்;டு வெற்றி பெற்ற நிலையில் ஏன் மாகாண சபையில் இருந்து கொண்டே கிழக்கு மாகாண தழுவிய நிலையில் உரிமைப்போராட்டத்தை முன்னெடுக்கவில்லை? இன்று கிழக்கு மாகாண கோசத்திற்கு தலைமைத்துவம் கொடுக்க நினைக்கும் முன்னாள் செயலாளர் அப்போது ஏன் அதை செய்யவில்லை? எது எப்படியிருந்த போதும் ஹஸனலி அவர்கள் ஒரு உண்மைப் போராளி. அவர் மீண்டும் கட்சிக்குள் வர வேண்டும்.
மற்ற முக்கியஸ்தராக சொல்லப்படுபவர் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ். தனது தனித்துவ அரசியலை குதிரையில் வலம் வந்து குதூகலம் கண்ட குறுநில மன்னர். தனது ஆளுகைக்கு உட்பட்ட சிற்றரசு எல்லைக்குள் (அக்கரைப்பற்று) அரசாண்டவர். இப்பொழுது வன்னிக்குச் சென்று கொண்டு எப்படி முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்க முடியும் என நம்புகிறார். கிழக்குப் பிரிவினைக்கு கோஷம் வைத்தவர் தனது அபிவிருத்தி அரசியலை அக்கரைப்பற்றிற்கு வெளியே செய்யவில்லை.
இவர் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சராக மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் பதவி வகித்த போது மஹிந்தவை திருப்திப் படுத்தும் போக்கையே கடைபிடித்தார். இவரது பதவிக்காலத்திலேயே உள்ளுராட்சிமன்ற தேர்தல் தொடர்பிலான சட்ட ரீதியான பல விடயங்கள் நடந்தது. இதன்போது மலையக தமிழர்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டனர். மஹிந்த ராஜபக்ஷவை சார்ந்து நின்ற இவர் சிறுபான்மைக்கு நடந்த உள்ளுராட்சி தொடர்பிலான அநியாயங்களுக்கு எதிராக தனது பதவியை இராஜினாமா செய்திருந்தால் இவரால் முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்க முடியும். அப்படி ஏன் செய்யவில்லை? தனது சமூகத்தையும் சிறுபான்மையையும் காட்டிக்கொடுத்த இவரால் எப்படி முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்க முடியும்.
அடுத்த பிரமுகர் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன். வன்னியின் ராஜா, முஸ்லிம்களின் தேசிய ராஜாவாக ஆக முயலுபவர். தன்னை சத்திய தேசிய தலைவராக அழைத்துக்கொள்பவர்.
ஹக்கீமை தோற்கடிப்பதன் மூலம் தலைவராகலாம் என்று கனவு கண்டு அம்பாறையிலும் கண்டியிலும் அடிக்கடி சுற்றுபவர். இவரால் கீரைக்கடைக்கும் எதிர்க்கடை என்ற கிராமத்து உவமைக்கு ஏற்ப அரசியல் செய்யலாமே ஒழிய முஸ்லிம் கூட்டமைப்பை அமைத்து சத்திய தேசிய தலைவராக மாற முடியுமா? ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி நிலைப்பாட்டை கொண்ட அதாவுல்லாவும் - ஐக்கிய தேசிய கட்சி நிலைப்பாட்டை கொண்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் - மஹிந்தவின் விசுவாசியான பஷீரும் முஸ்லிம் உரிமையை மனதில் கொண்டுள்ள ஹஸனலியும் எப்படி ஒரு புள்ளியில் சந்திக்க முடியும்?
நல்லாட்சிக்கான தேசிய தேசிய முன்னணி முற்போக்கான கொள்கையை கொண்ட அரசியல் கட்சி. அவர்கள் சேற்றில் விழுந்து சகதியை பூசிக்கொள்வார்களா? இல்லை, ஆக குருடன் பார்த்த யானையாக - பகலில் கண்ட கனவாக - யானை திண்ட விளாங்காயாகவே இக் கூட்டமைப்பு அமைய முடியும்.
அப்படியென்றால் முஸ்லிம் கூட்டமைப்புக்கு சாத்தியமில்லையா? சாத்தியமுண்டு. தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் இல்லாத இதய சுத்தியுள்ள அல்லாஹ்வுக்கு மாத்திரம் அடிபணிகின்ற இஹ்லாசானவர்களால் (உளத்தூய்மை) மாத்திரமே முஸ்லிம்களுக்கான உண்மையான கூட்டமைப்பை உருவாக்க முடியும்.
அடுத்த பிரமுகர் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன். வன்னியின் ராஜா, முஸ்லிம்களின் தேசிய ராஜாவாக ஆக முயலுபவர். தன்னை சத்திய தேசிய தலைவராக அழைத்துக்கொள்பவர்.
ஹக்கீமை தோற்கடிப்பதன் மூலம் தலைவராகலாம் என்று கனவு கண்டு அம்பாறையிலும் கண்டியிலும் அடிக்கடி சுற்றுபவர். இவரால் கீரைக்கடைக்கும் எதிர்க்கடை என்ற கிராமத்து உவமைக்கு ஏற்ப அரசியல் செய்யலாமே ஒழிய முஸ்லிம் கூட்டமைப்பை அமைத்து சத்திய தேசிய தலைவராக மாற முடியுமா? ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி நிலைப்பாட்டை கொண்ட அதாவுல்லாவும் - ஐக்கிய தேசிய கட்சி நிலைப்பாட்டை கொண்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் - மஹிந்தவின் விசுவாசியான பஷீரும் முஸ்லிம் உரிமையை மனதில் கொண்டுள்ள ஹஸனலியும் எப்படி ஒரு புள்ளியில் சந்திக்க முடியும்?
நல்லாட்சிக்கான தேசிய தேசிய முன்னணி முற்போக்கான கொள்கையை கொண்ட அரசியல் கட்சி. அவர்கள் சேற்றில் விழுந்து சகதியை பூசிக்கொள்வார்களா? இல்லை, ஆக குருடன் பார்த்த யானையாக - பகலில் கண்ட கனவாக - யானை திண்ட விளாங்காயாகவே இக் கூட்டமைப்பு அமைய முடியும்.
அப்படியென்றால் முஸ்லிம் கூட்டமைப்புக்கு சாத்தியமில்லையா? சாத்தியமுண்டு. தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் இல்லாத இதய சுத்தியுள்ள அல்லாஹ்வுக்கு மாத்திரம் அடிபணிகின்ற இஹ்லாசானவர்களால் (உளத்தூய்மை) மாத்திரமே முஸ்லிம்களுக்கான உண்மையான கூட்டமைப்பை உருவாக்க முடியும்.