சுமார் 310 மில்லியன் ரூபா நிதியில் கிழக்கு மாகாணத்திலுள்ள 262 அரசாங்க பாடசாலைகளுக்கு தளபாடங்கள் வழங்கும் உத்தியோக பூர்வ நிகழ்வு மட்டக்களப்பு - ஏறாவூரில் நடைபெற்றது.
கடந்த பலவருட காலமாக கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவிய தளபாட பற்றாக்குறை இவ்வருட இறுதிக்குள் இத்திட்டத்தின்மூலம் முழுமையாக நிவர்த்திக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தளபாட கையளிப்பு ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஏறாவூர்- அல்- ஜுப்ரிய்யா வித்தியாலய மண்டபத்தில் பிரதிக்கல்விப்பணிப்பாளர் எம்ஜே. எப். றிப்கா தலைமையில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் , மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்ரீஎம் நிஸாம், வலயக் கல்விப்பணிப்பானளர் ஏஎஸ். இஸ்ஸதீன் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள 23 பாடசாலைகளுக்கு தளபாடங்கள் கையளிக்கப்பட்டன.
இத்திட்டத்திற்கென முதற்கட்டமாக ஒதுக்கப்பட்ட 110 மில்லியன் ரூபா நிதியில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 112 பாடசாலைகளுக்கும் அம்பாறை மாவட்டத்திலுள்ள 94 பாடசாலைகளுக்கும் திருகோணமலை மாவட்டத்திலுள்ள 56 பாடசாலைகளுக்கும் தளபாடங்கள் வழங்கப்பட்டதாக மாகாண திட்டமிடல் பிரதிக் கல்விப்பணிப்பாளர் எம்ஏஎம். உனைஸ் தெரிவித்தார்.
மேலும் ஒதுக்கப்படும் நிதியின்மூலம் 30 மில்லியன் ரூபாவினை செலவிட்டு 90 மில்லியன் ரூபா பெறுமதியான தளபாடங்களைத் திருத்தம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.