சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை சார்பில் போட்டியிட்டு வெற்றிபெறுபவர்களின் பதக்கங்கள் நாட்டிற்குரியவையாகும். அதற்கேற்ற வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். அப்போது பதக்கங்களை விற்பனை செய்வதை தடுக்க முடியும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
அரசாங்கம் என்ற வகையில் ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகாவிற்கு தேவையான அனைத்தையும் செய்துள்ளது. சுசந்திகா ஜயசிங்க ஒலிம்பிக் பதக்கத்தை ஏலத்தில் விட்டால் விளையாட்டுத்துறை அமைச்சு அதனை கொள்வனவு செய்யும் என அவர் குறிப்பிட்டார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,
அரசாங்கம் என்ற வகையில் சுசந்திகாவுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் செய்துள்ளது. அவரை சர்வதேச போட்டிகளுக்கு தயார்படுத்துவது முதல் இன்று வரை பல கோடி ரூபாவை செலவிட்டுள்ளது. சுசந்திகா ஜயசிங்க ஒலிம் பிக் பதக்கத்தை ஏலத்தில் விட்டால் விளையாட்டுத் துறை அமைச்சு அதனை கொள்வனவு செய்யும்.
ஆனால் இவ்வாறான செயற்பாடுகளை தடுப்பதற்காக புதிய சட்டம் ஒன்றின் தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை சார்பில் போட்டியிட்டு வெற்றிபெறுபவர்களின் பதக்கங்கள் நாட்டிற்கு உரித்தாகும் வகையில் அந்த சட்டம் அமையப்பெற வேண்டும். அதனூடாக பதக்கங்களை விற்பனை செய்வதை தடுக்க முடியும் என்றார்.