கட்டார் அரசுக்கு எதிராக எழுந்துள்ள நெருக்கடி நிலைமை இலங்கையில் நிச்சயமாக தாக்கம் செலுத்தும் என சுற்றுலாத் துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு அது தாக்கம் செலுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கட்டார் நாட்டுக்கான விமான சேவையினால் இலங்கைக்கு பாரியளவு நிதி கிடைக்கப் பெற்றது. இலங்கைக்கு ஏற்படவுள்ள தாக்கத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அந்த நாட்டில் எழுந்துள்ள இந்த நெருக்கடி நிலைமை இன்னும் அதிகரிக்குமாயின், அந்நாட்டிலுள்ள இலங்கைத் தொழிலாளர்கள் திரும்பி விட வேண்டி ஏற்படும். இதனால், இலங்கையின் அந்நியச் செலாவணி வீழ்ச்சியைக் காட்டும்.
ஒரு லட்சத்து 40 ஆயிரம் இலங்கையர்கள் கட்டாரில் உள்ளனர். கடந்த 2 வருடங்களில் சவுதிக்கு அடுத்தபடியாக அதிகமான இலங்கையர்கள் தொழிலுக்காக கட்டாருக்கே சென்றுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.