பொதி செய்யப்பட்ட மூன்று வாழைப்பழத்திற்கும் தனக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. அதில் எனது படத்தை திட்டமிட்டு ஒட்டி போலியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்கள் அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்தும் கூறுகையில்,
வெள்ள அனர்த்தத்திற்குள் சில மோசமான நடவடிக்கைளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மூன்று வாழைப்பழத்திற்கும் எனக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. போலியான பிரசாரத்திற்காக எனது பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு உண்மையான நிலை தெரியும்.
எனவே தான் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கோரினேன். சம்மந்தப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்கத்தில் உள்ளவர்களை குறிவைத்து இவ்வாறான போலி பிரசாங்களை முன்னெடுப்பது அவர்களின் பணியாக உள்ளது. முக்கியமான குடும்பத்தின் புதல்வரே இதனை செய்துள்ளார்.
இதற்கென மத்திய நிலையம் ஒன்றும் வைத்துள்ளார். முகநூல் ஊடாகவும் ஏனைய சமூக வலைத்தளங்களுடாகவும் அமைச்சர்களுக்கு எதிராகவும் அரசாங்கத்திற்கு எதிராகவும் போலி பிரசாரங்களை பரப்புவது இவர்களின் பணியாக உள்ளது. இது மிகவும் மோசமான நிலையாகும் எனவும் அவர் கூறினார்.