ஏறாவூர் நிருபர் ஏஎம் றிகாஸ்-
உள்ளுராட்சி மன்றத்தேர்தல் விரைவில் நடாத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்புடன் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் அரசியல் வாதிகள் மிகுந்த முஸ்தீபுடன் செயற்பட்டுவருகின்றனர்.
இதற்கமைவாக தற்போது அதிகாரத்திலுள்ள அரசியல்வாதிகள் அபிவிருத்திப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளதுடன் சமூக வலைத்தளங்களில் ஏட்டிக்குப்போட்டியாக தீவிர பிரசார நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதை அவதானிக்கமுடிகிறது.
சில அரசியல்வாதிகள் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தாம் வேட்பாளர்களாக நிறுத்த எண்ணியுள்ள பிரமுகர்களை அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்கச் செய்து அறிமுகம் செய்யும் பணியினையும் கச்சிதமாக மேற்கொண்டுவருகின்றனர்.
அதேநேரம் அரசியல்வாதிகளுக்குச் சார்பாக பதிவுகளை செய்வதற்கு ஏதுவாக இனந்தெரியாத வகையில் பல முக நூல்கள் தற்போதிருந்தே இயங்க ஆரம்பித்துள்ளன.குறிப்பாக ஏறாவூர் நகர சபைக்கு உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கான தேர்தலுக்காக இப்பிரதேசத்தில் பிரபலமான ஒரே கட்சிக்குளிருந்து கட்சி சார்பில் ஓர் அணியும் சுயேச்சையாக இன்னுமோர் அணியும் போட்டியிடும் வாய்ப்பு அதிகம் காணப்படுவதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதேவேளை இப்பிரதேசத்தில் பிரபல்யமான அரசியல்வாதியொருவர் கொந்துறாத்து ஒப்பந்தப் பணிகளைச் செய்யக்ககூடிய தனவந்த குடும்பத்து நபர் ஒருவரை ஏறாவூர் நகர சபைத் தவிசாளராக்கும் நோக்குடன் பொதுமக்கள் மத்தியில் அதிக பிரயத்துடன் அறிமுகம் செய்யும் பொறுப்பினை இப்போதிருந்தே ஏற்றுச் செயற்பட்டுவருகிறார். இதனை பொதுமக்கள் ஏளனமாகப் பார்ப்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
படித்த மற்றும் பண்புள்ளவர்களை அதிகம் கொண்டுள்ளதாக மார்தட்டிக்கொள்ளும் ஏறாவூர்ப் பிரதேசத்தை நிருவகிப்பதற்கு கட்டட ஒப்பந்தம் (கொந்துறாத்து) செய்யும் தனவந்தத்தனம் மாத்திரம் தகுதியாகுமா? என பொதுமக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.இதேவேளை ஏலவே தவிசாளர் மற்றும் உறுப்பினர் பதவிகளில் இருந்த பலருக்கு இம்முறை நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலி;ல் கல்தா (வெட்டு) செய்யப்படவுள்ளது. அவர்கள் தனது அரசியல் எதிரியுடன் கைகோர்த்துள்ளதாக அறியக்கிடைத்துள்ளதாம்.