என்.எம்.அப்துல்லாஹ்-
நேற்றையதினம் 06/06/2016 வடக்கு மாகாணசபையின் 94வது அமர்விலே வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான கௌரவ அய்யூப் அஸ்மின் மற்றும் கௌரவ ஜவாஹிர் ஆகியோரின் வேண்டுகோளுக்கு அமைவாக, கௌரவ எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களால் இலங்கையெங்கும் முஸ்லிம் மக்களை அச்சுறுத்தும்வகையில் இடம்பெறும் பள்ளிவாயல்கள் மீதான தாக்குதல்கள், முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள், சமூகவலைத்தளங்களில் பரப்படும் இனவிரோத பிரச்சாரங்கள் அனைத்தையும் உடனடியாக நிறுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா அவர்களும் நடவடிக்கையெடுக்கவேண்டும் என்பதோடு இந்த நாட்டில் சிறுபான்மை சமூகங்களுக்கான உரிய பாதுகாப்பையும் வழங்கவேண்டும் என இச்சபை பகிரங்கமாக அவசரக்கோரிக்கையொன்றினை முன்வைக்கின்றது என்று பிரஸ்தாபித்தாபித்தார். இப்பிரேரணையினை வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சி.தவராஜா அவர்களும் கௌரவ ஜெயதிலகா அவர்களும் வழிமொழிந்தார்கள்.
மேலும் அங்கு கருத்துவெளியிட்ட உறுப்பினர் எம்.ககே.சிவாஜிலிங்கம் அவர்கள்; 2014ம் ஆண்டு அளுத்கமவில் இடம்பெற்ற கலவரத்தோடு தொடர்புடையவர்களை சட்டரீதியாக தண்டிக்காமல் விட்டமையே இவ்வாறு முஸ்லிம் மக்கள் மீதான அதிகரித்த தாக்குதல்களுக்கு வழிசமைத்திருக்கின்றது என்றும் குறிப்பிட்டார், முன்னைய மஹிந்தவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று சிறுபான்மை மக்கள் தீர்மானித்தார்கள், இதற்கு காரணமாக இனவாத தாக்குதல்களே காணப்பட்டன, அதேபோன்று இப்போதைய நல்லாட்சி அரசாங்கமும் தன்னுடைய ஆட்சியை தக்கவைக்க வேண்டுமாக இருந்தால் சிறுபான்மை மக்கள் மீதான வன்முறைத் தாக்குதல்களை உடனடியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும். இன்று அதிகாலையில் கூட கொழும்பிலே நுகோகொட பிரதேசத்திலே முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான கடைக்கு தீ வைக்கப்பட்டிருக்கின்றது, இவற்றை நாம் தொடர்ந்தும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
முன்னைய காலங்களிலே தமிழ் மக்களின் மீது எவ்வாறு திட்டமிட்டு இனஅழிப்புத் தாக்குதல்கள் இடம்பெற்றனவோ அதேபோன்ற அமைப்பிலே இப்போது முஸ்லிம் மக்கள் இலக்கு வைக்கப்படுகின்றார்கள். இது இந்த நாட்டில் முஸ்லிம் இன அழிப்புக்கு வழிசெய்யுமே தவிர வேறு எவ்விதமான நன்மைகளையும் பெற்றுத்தராது. சிரேஷ்ட அமைச்சர்கள் இதுவிடயமாக ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்த சந்தர்ப்பத்திலும் எவ்விதமான காத்திரமான நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. நீதிமன்ற அவமதிப்பு தொடர்பிலும் காத்திரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. எனவே இவை அனைத்தையும் உடனடியாக கருத்திலெடுத்து இவற்றை தடுப்பதற்குரிய உடனடி நடவடிக்கைகளை சட்டம் ஒழுங்கு மற்றும் நீதித்துறையூடாக முன்னெடுக்கவேண்டும் என இந்த சபை கோரி நிற்கின்றது.
மேற்படி பிரேரணை ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டதோடு, இவை உரிய தரப்பினரின் அவசர கவனத்திற்குக் கொண்டுவரப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.