![]() |
ரவுப் ஹக்கீம் |
முஸ்லிம் சமூகத்தினரின் வர்த்தக நிலையங்கள் தீயிடப்படும்போது, காப்புறுதி தொகையைப் பெறுவதற்காக உரிமையாளர்களே தீ வைத்துக் கொள்கின்றனர் என சட்டத்தை நிலைநாட்டும் அதிகாரிகள் கூறுகின்றனர். முஸ்லிம்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை முறையிட்டபோதும் செவிடன் காதில் ஊதிய சங்குபோன்றே நிலைமை உள்ளது என அமைச்சர் ரவுப் ஹக்கீம் சபையில் குற்றஞ்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்ற செவ்வாய்க்கிழமை ஜெனீவா தீர்மானம் குறித்த சபை ஒத்துழைப்பு வேளை பிரேரணை மீதான விவாவத்தில் கலந்து கொண்ட உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒரு வருடமும் ஒன்பது மாதங்களும் நிறைவடைந்துள்ளன. இக்காலப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விடயங்கள் குறித்து நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும். நடைமுறைப்படுத்துவதில் அரசு எதிர்கொண்ட சவால்கள் பற்றியும், கடந்துவந்த பாதை பற்றியும் ஆய்வுசெய்ய வேண்டும்.
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கையில் நல்லிணக்கத்தை ஊக்கப்படுத்துவது, பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவது என்ற தொனிப்பொருளிலேயே ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனவே, இவ்விடயத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுதியாக இருக்கின்றது.
இங்குள்ள சகல தீர்மானங்களுக்கும் ஒரே தலைப்புத்தான் வழங்கப்பட்டுள்ளன. நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் ஆகிய தலைப்புக்களே காணப்படுகின்றன. இந்த விடயங்கள் தொடர்பில் தான் சில அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன.
சிலர் சட்டங்களில் இருந்து வதிவிலக்கினைப் பெற்றுக்கொள்கின்றார்கள். அதற்கு இடமளிக்ககூடாது அடுத்து எவ்வாறு முன்னோக்கிச் செல்லப்போகின்றோம் என்று சிந்திக்க வேண்டும். சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற்றுக்கொண்டு எப்படி பயணிக்கப் போகின்றோம் என்று சிந்திக்க வேண்டும்
அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் இடம்பெற்றுவரும் சுழ்நிலையில், மத ரீதியான சகிப்புத் தன்மைகளை உறுதிப்படுத்துவதற்கான விடயங்களும் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டும். நாட்டில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் தரப்பினர்களுக்கு எதிராக அரசாங்கமும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுப்பது அவசியம்.
சில சக்திகள் நாட்டில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. இந்த சக்திகள் தற்பொழுது வெறுக்கத்தக்க பேச்சுக்களை பரப்பி வருகின்றன. இதனுடன் தொடர்புபட்ட குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகின்றனர். இன்று வெ ளியாகியுள்ள (நேற்று) வீரகேசரி பத்திரிகையின் தலைப்புச்செய்தியில் மூன்று பௌத்த அமைப்புக்கள் மதத்தின் பெயரால் வெறுப்பை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை வௌியிட்டிருக்கின்றது. இவ்வாறான வெறுப்பை ஏற்படுத்தும் பேச்சுக்களை கட்டுப்படுத்துவதற்கான சட்டங்கள் அமுல்படுத்தப்படவேண்டும்.
நுகேகொட விஜயராம பகுதியில் முஸ்லிம் ஒருவரின் வர்த்தக நிலையம் தீயிடப்பட்டுள்ளது. சைக்கிள் ஒன்றில் வந்த நபர் ஒருவர் தீயிட்டுவிட்டு ஓடிச் செல்வது சீ.சி.ரி.வி கமராக்களில் பதிவாகியுள்ளன. இவ்வாறிருக்கையில் உரிமையாளர் காப்புறுதியைப் பெறுவதற்காக தனது கடைக்கு தீயிட்டுக் கொண்டதாக சட்டத்தை நிலைநாட்டும் அதிகாரிகள் கூறுவது வேடிக்கையானது
ஏத்தனையோ சம்பவங்கள் தொடர்பில் நாங்கள் சுட்டிக்காட்டுகின்றபோதும் சட்டரீதியான நடவடிக்கையை எடுக்காமலிருப்பதானது, செவிடன் காதில் ஊதிய சங்காக காணப்படுகின்றது என்றார்.
கேசரி