பதிலளிக்கப்படும்' என்ற எனது பதிவுக்கு அமைய ' அப்பதில்' -1 -வை.எல்.எஸ்

படத்தனத்திற்கும் எல்லை இருக்கின்றது' என்ற தலைப்பிலான எனது பதிவு சம்மந்தப்பட்டவரை மிகக் கடுமையாக பாதித்திருக்கின்றது; என்பது தனது மொத்த கைக்கூலிகளையும் வசைபாட ஏவி விட்டதிலிருந்து புரிகிறது. உண்மை சில நேரங்களில் கடுமையாக சுடத்தான் செய்யும். அந்த சந்தர்ப்பத்திலும் கைக்கூலிகளை முடுக்கி விடாவிட்டால் மாதமொன்றுக்கு இலட்சக் கணக்கில் கூலி கொடுப்பதில் அர்த்தமில்லையே!

உண்மை வெளிவந்ததனால் ஏற்பட்ட வேக்காட்டின் எல்லை, ஒரு முஸ்லிமின் அகீதாவை கேவலப்படுத்து
கின்ற அளவுக்கும் புனித ரமளான் நோன்பையே எள்ளிநகையாடுகின்ற அளவுக்கும் சம்பந்தப் பட்டவரை கொண்டுபோய் விட்டிருக்கின்றது.

நான் முதலாவதாக உங்களிடம் எழுப்ப விரும்புகின்ற கேள்வி, எல்லா அமைச்சர்களுக்கும் உத்தியோகபூர்வமாக ஒரு ஊடகக் குழு அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. அதற்கு மேலதிகமாக இத்தனை பெருந்தொகையானவர்களை இலட்சக் கணக்கில் சம்பளம் கொடுத்து வைத்திருக்க வேண்டியதன் அவசியமென்ன? செய்கின்ற களவுகளுக்கும் நடிப்புக்கும் உறைபோடுவதற்காகவா? உங்களைப் பற்றிய உண்மைகளைக் கூறுகின்றவர்களை வசைபாடுவதற்காகவா?

உங்களைப்பற்றிய உண்மைகள் வெளிவருகின்றபோது எப்போதாவது அங்கு முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களுக்கு நேரடியான பதில்கள் வழங்கப்பட்டிருக்கின்றனவா? அல்லது மாறாக வசைபாடுதல்களே இடம்பெறுகின்றனவா? கூலியாட்கள் மூலம் 'வசை' எனும் அஸ்திரத்தை கையில் எடுத்து உண்மைக்கு நிரந்தரமாக உறைபோடலாமென நினைக்கிறீர்களா?

உங்களின் சுயநலனைப் பாதுகாக்க பணம்கொடுத்து ஒரு இளைஞர் சமுதாயத்தை சீரழித்துக் கொண்டிருக்கின்றீர்கள்; என்பது உங்களுக்கு புரிகின்றதா? முக நூல்களில் உங்கள் கூலிப்பட்டாள இளைஞர்கள் பாவிக்கின்ற வார்த்தைப் பிரயோகங்களைப் பார்தீர்களா? வசை பாடுதலும் அம்மண வார்த்தைகளும். இன்றைய ஒழுக்கம் சிதைக்கக்பட்ட, இளைஞர் கூட்டம் நாளை இந்த சமுதாயத்தைப் பொறுப்பெடுக்கின்றபோது எப்படிப்பட்ட கலாச்சார, ஒழுக்க விழுமியங்கள் சீரழிக்கப்பட்ட ஒரு சமுதாயமாக இந்த சமுதாயம் மாறப்போகின்றது! நீங்கள் வாழுவதற்காக ஒரு சமூகமே சீரழிகின்றதே!! இது நியாயமா? உங்களுக்கு மனச்சாட்சி மரத்துவிட்டதா? ' குடிகாரர்களுக்கு என்னிடம் இடம் இல்லை' என்று மேடைகளில் வசனம் பேசிக்கொண்டு ஒரு குடிகாரக் கூட்டத்தையே கூடவைத்துக்கொண்டிருக்கின்ற உங்களுக்கு மனச்சாட்சி எங்கே இருக்கப்போகின்றது.

எனவே, அரசியல் நாகரீகத்தை சற்றுப் படியுங்கள். கருத்துக்களுக்கு கருத்துக்களால் பதிலளியுங்கள். சமுதாயத்தை சீரழிக்காதீர்கள்.

தேசியப்பட்டியலா காரணம்?
--------------------------
நீங்கள் சமுதாயத்தை ஏமாற்றுகின்ற விடயங்களை நான் வெளிக்கொணரும்போதெல்லாம், ' தேசியப்பட்டியல் பிரச்சினை காரணமாகத்தான்' இப்படிக் கூறுகின்றார்; என்று ஒரு சாயத்தை பூசிவிட்டால் உங்களப் பற்றிய உண்மைகள் மறைந்துவிடுமா? தேசிப்பட்டியல் விடயத்தில் அநாகரீகமாக நடந்தது நீங்கள். அது நான் சத்தியத்தைக் கூறுவதற்கு ஒரு தகமையீனமாகிவிடுமா? உங்களிடம் உண்மை இருந்தால் என் கூற்றுக்கள் பிழை என்பதை நிறுவி விட்டு அதன்பின் ' எனவே உண்மையில்லாத இவ்விடயத்தை தேசியப்பட்டியல் பிரச்சினை காரணமா இவ்வாறு கூறுகின்றார்'; என்று கூறினால் நியாயம். முடியுமா? அவ்வாறு கூறுவதற்கு.

தேசியப்பட்டியல் பிரச்சினை தொடர்பாக எனது முழுமையான கட்டுரையின் இரு பாகங்களை ஏற்கனவே வெளியிட்டிருக்கின்றேன். ஏனையவற்றை இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் வெளியிடுவேன். ஆனால் நான் உங்களிடம் கேட்க விரும்புவது, தேசியப்பட்டியல் விடயத்தில் நீங்கள் அநாகரீகமாக நடந்தீர்கள் என்பதற்காக, நான் ஏதாவது அறிக்கை விட்டேனா? அல்லது கட்சியில் இருந்து வெளியேறினேனா? அல்லது ஊர் ஊராய் மேடைபோட்டு முறைப்பாடு சொன்னேனா? அல்லது நீங்கள் சிலரிடம் ' நீங்கள் என்றால் தேசியப்பட்டியலுக்காக யார் காலில் வேண்டுமானாலும் வீழ்ந்திருப்பீர்கள்' என்று கூறியதுபோல் உங்கள் காலில் வந்து வீழ்ந்தேனா? நீங்கள்தான் போலி முகநூலில் பொய்ச்செய்தி போட்டு என்னை ' கட்சியை விட்டு வெளியேற்றியதாக அறிவித்தீர்கள். ( உங்களால் அவ்வாறு விலக்க முடியாது என்பது வேறுவிடயம்). அவ்வாறு நீங்கள் செய்தும் நான் ஒரு அறிக்கையாவது விட்டேனா? எத்தனை ஊடகங்கள் என்னைப் பேட்டிகாண விழைந்தார்கள். அவ்வாறிருந்தும் நான் எதுவும் கூறவில்லயே! ஏன்? ஏனெனில் ஒரு தேசியப்பட்டியலுக்காக வை எல் எஸ் ஹமீட் கூவித்திரிகின்றார், என்று எலும்பில்லாத நாக்குகள் பேசக்கூடாது என்பதற்காக. உங்களுக்கு நடந்த அநியாயங்களை நீங்கள் பொதுமக்களுக்கு கூறத்தானே வேண்டும், என்று எத்தனையோபேர் என்னிடம் கூறியும் பொறுமை காத்தேன்.

போதாக்குறைக்கு இதே எடுபிடிகளை வைத்து பத்து வேட்பாளர்களின் பெயரில் மொத்தமாக பொய்கள் புனைந்து என்னை அவமானப்படுத்தியபோதும் மௌனம் காத்தேனே! ( இன்ஷா அல்லாஹ், எனது தொடர்கட்டுரையில் அந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்திற்கும் முழுமையான பதில் தருவேன், எதிர்பாருங்கள்) தேசியப்பட்டியல் தொடர்பாக அல்லது பாராளுமன்றம் செல்கின்ற விடயத்தில் என் உள்ளத்தில் என்ன இருக்கின்றது, என்பதை என்னைப் படைத்தவன் அறிவான். இன்றிருக்கின்ற பேனாதான் அன்றும் என்னிடமிருந்தது. ஆனால் தேசியப்பட்டியலுக்காக நான் எழுதவில்லை.
நான் உங்களுக்கெதிராக முதலாவது அறிக்கை விட்டது எப்போது? ஏன்?
-----------------------------------------------
இவ்வாறு நான் மௌனம் காத்தபோதும் தொலைக்காட்சிகளிலும் வேறு சூழல்களிலும் என்னைப்பற்றி அவ்வப்போது நீங்கள் தெரிவித்த சில கருத்துக்களுக்கு சுருக்கமான பதில்களைத்தர நிர்ப்பந்திக்கப்பட்டேன். ஆனாலும் நானாக எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை. இந்நிலையில் நீங்கள் தொடர்ச்சியாக முசலி மக்களை ஏமாற்றி வந்தபோது இனியும் பொறுக்க முடியாது என்ற ஒரு கட்டத்தில்தான் உங்களுக்கு எதிரான எனது முதலாவது அரசியல் அறிக்கை வெளியானது. அதே நேரம் அதற்கு சில மாதங்களுக்கு முன் உங்களைக் குறிப்பிடாமல் முசலி மக்களின் அவலநிலை தொடர்பாகவும் அவசர நடிவடிக்கையின் அவசியம் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். எனவே உங்களுக்கெதிரான எனது அரசியல் அறிக்கை என்பது முழுக்க முழுக்க சமூகம் சார்ந்தது; என்பதை நீங்கள் திரிவுபடுத்த முயன்றாலும் சிந்திக்கத் தெரிந்தவர்கள் புரிந்திருப்பார்கள்.

நீங்கள் சமூகத்திற்காகத்தான் எல்லாவற்றையும் செய்கிறீர்கள், ஆனால் உங்களை விமர்சிப்பவர்கள்தான் தேசிப்பட்டியல் பிரச்சினை காரணமா, அல்லது வேறு காரணங்களுக்காக உங்களை விமர்சிக்கின்றார்கள்; என்றால் எனது பின்வரும் கேள்விகளுக்கு வசைபாடி உங்கள் தரத்தை மீண்டும் நிருபிக்காமல் பதில்தாருங்கள்.

1) Shopping bag உடன் வந்த உங்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பி அழகு பார்த்தவர்கள் உங்களைப் போன்று அகதிகளாக வெளியேறிய அந்த ஏழை மக்கள். அவர்களுக்குத் துரோகம் செய்ய உங்களுக்கு எப்படி மனசு வந்தது? நீங்கள் துரோகம் செய்யவில்லை என்றால் மறிச்சுக்கட்டிப் பிரச்சினை தொடர்பாக நீங்கள் ஜனாதிபதியிடம் இரண்டரை ஆண்டுகளாக பேசாமல் விட்டது ஏன்? இது துரோகமில்லையா?

2) சில மாதங்களுக்கு முன் புத்தளத்தில் வைத்து ' ஆடையைக் கழட்டிவீசுவதுபோல் சமூகத்திற்காக பதவியைத் தூக்கி வீசுவேன்; எனக் கூறினீர்கள். அடுத்த ஒரு சில தினங்களில் ' வில்பத்தை விஸ்தரிக்கப் போவதாக' ஜனாதிபதி அறிவித்தார். உடனே, ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடப்போவதாகவும் ஜெனீவாவிற்குப் போகப்போவதாகவும் அறிவித்தீர்கள். அதன்பின் ஒரு லட்சம் ஏக்கர் காணிகளை வனபரிபாலனத் திணைக்களத்தின் கீழ் ஜனாதிபதி கொண்டுவந்தார். ஆனால் நீங்கள் ஜனாதிபதி மாளிகையை ஏன் முற்றுகையிடவில்லை. ஏன் ஜனீவாவிற்குப் போகவில்லை. டிக்கட் கிடைக்கவில்லையா? ஏன் பதவியைத் தூக்கி வீசவில்லை. சேட்டின் பட்டன் களட்ட முடியாமல் இறுகிவிட்டதா?

எனவே, உங்களது இந்த வீரப்பேச்சுக்கள் மக்களை ஏமாற்றுவதற்கான நாடகமில்லையா? உங்களது கைக்கூலிகள் நீங்கள் ' போராடுகிறீர்கள்' என்கிறார்களே, இதுதான் உங்கள் போராட்டமா? இதை நாங்கள் பேசினால் அது ' தேசியப்பட்டியல் காரணமாகவா?' ஜனாதிபதியைச் நீங்கள் சந்திப்பதற்குக்கூட, சில சிவில் சமூக அமைப்புகளும் தனிப்பட்ட அரசியல் பிரமுகர்களும் தான் உங்களுக்கு நேரம் பெற்றுத்தரவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருக்கின்ற சக்திவாய்ந்த அமைச்சர்தானே, நீங்கள். அப்படியிருந்தும் செயலாளரைச் சந்திக்கத்தானே உங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப் படுகின்றது. இதற்கும் உங்கள் விளம்பரமோகத்தால் ஜனாதிபதியை சினமூட்டியதுதான் காரணம் என்பது உங்களுக்குத் தெரியாத்தில்லையே! ( இலகுவாக ஜனாதிதிபதியுடன் பேசித்தீர்க்க வேண்டிய பிரச்சினை அது. விளம்பரமோகத்தால் கெடுத்துவிட்டீர்கள். பலியானது முசலிமக்கள்)

அடுத்த கட்சித்தலைவர் முசலிப் பிரச்சினையை பார்க்கின்றார் இல்லை. என்று குறைகூறிய நீங்கள் அவர் முசலிப் பிரச்சினையைப் பார்ப்பதற்கு அரச உயர் அதிகாரிகளை அழைத்துவந்தபோது ( மீடியாவை விளம்பரத்திற்காக அடிக்கடி வன்னிக்கு அழைத்துச்செல்லத் தெரிந்த உங்களுக்கு ஒரு தடவையாவது உயர் அதிகாரிகளை அழைத்துச் செல்லத் தெரியவில்லை) அந்த அமைச்சரின் கூட்டத்தையும் குழப்பி அந்த அதிகாரிகளையும் சம்பந்தப்பட்ட காணிகளைப் பார்க்க விடாமல் தடுத்தீர்களே! ஏன்? இன்றுவரை காரணம் கூறியிருக்கின்றீர்களா? செய்யவும் மாட்டீர்கள், செய்யவிடவும் மாட்டீர்களா? இது உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு செய்கின்ற துரோகம் இல்லையா? இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதில்தர முடியுமா?

இவை எல்லாவற்றிற்குமேலாக, அன்று அந்தக்கட்சித்தலவர் அவ்வுயர் அதிகாரிகளுடன் வந்தபோது உங்கள் இணைப்பாளரின் தலைமையில் அவர்களுக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்ததுமில்லாமல் அந்த அமைச்சரை ' நாசமாய்ப் போ'! என்று சாபமிட்டு கோசமெழுப்ப வைத்தீர்களே, இது ஒரு முஸ்லிம் செய்யும் வேலையா? ' சாபம்' சாபமிடுகின்றவரையே திருப்பித்தாக்குகின்ற விசயத்தை கேள்விப்பட்டதில்லையா? முசலி அபலை மக்களுக்கு நீங்களும் தீர்வு பெற்றுக்கொடுக்க மாட்டீர்கள், மற்றவர்களும் தீர்வுபெற்றுக் கொடுத்துவிடக்கூடாது; என்பதற்காகவா அவ்வாறு சாபமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தீர்கள்.

உங்களைப் பற்றி யாராவது உண்மைகளை எழுதினால் ஒரு புறம் வசைபாடிக் கொண்டும் அம்மணம் அதப்பியம் எழுதிக்கொண்டும் மறுபுறம் இன்னும் சிலரை வைத்து, ' புறம் கழுவாதீர்கள், இறைச்சியை உண்ணாதீர்கள், அல்லாஹ்வைப் பயந்துகொள்ளுங்கள்' என்று எழுதுகின்றீர்களே! , அவ்வாறு நீங்கள் செய்வதற்கு அல்லாஹ்விடம் இருந்து உங்களுக்கு விசேட லைசன்ஸ் கிடைத்திருக்கின்றதா?

இறுதியாக, முசலியில் நடந்த ஆர்ப்பாட்டத்தை இந்தியப் பிரதமரின் வருகையையொட்டி எவ்வளவு கனகச்சிதமாக முடிவுக்குக் கொண்டுவந்தீர்ரகள். எங்கே அந்த மக்களுக்குரிய தீர்வு? ஓ! சிலவேளை 22 லட்சம் முஸ்லிம்களும் வாக்களித்தால்தான் தீர்வைப்பெற்றுக் கொடுப்பீர்களோ? இலங்கை முஸ்லிம்கள் 22லட்சம்தான். ஆனால் 18 வயதிற்கு கீழ்பட்டவர்களுக்கு வாக்கில்லையே! என்ன செய்வது.

உங்கள் விளம்பர மோகமும் சமுதாயப் பாதிப்பும்
-------------------------------------------------
உங்களின் விளம்பர அரசியலால் முசலி மக்களின் எதிர்காலத்தையே இருளுக்குள் தள்ளிவிட்ட நீங்கள் இப்பொழுது மொத்த முஸ்லிம்களது எதிர்காலத்தோடும் விளையாட ஆரம்பித்துள்ளீர்கள். 'யாருக்கு என்ன நடந்தாலும் சரி, எனக்கு விளம்பரம் கிடைத்தால் சரி' என்கின்ற ஒரு பயங்கர வியாதி உங்களை ஆட்கொண்டிருக்கின்றது. பல சம்பவங்களை இங்கு சுட்டிக் காட்டலாம் . ஆனாலும் உதாரணத்திற்கு, இன்றைய இனவாதப்பிரச்சினையை இந்த அரசு நினைத்திருந்தால் மிகவும் இலகுவாக முளையிலே கிள்ளி எறிந்திருக்கலாம். அரசாங்கம் ஆட்சியேற்ற ஆரம்பத்தில் ஞானசார, அஞ்சி நடுங்கிப்போய் இருந்தார். இந்த வீரம்பேசும் ராஜாக்கள் இதைக்கூட செய்யவைக்க முடியாத ஜால்ராக்களாக இருந்ததன் விளைவு நிலைமை இன்று கட்டுமீறிப் போய் இருக்கின்றது. குறிப்பாக அஸ்கிரிய மகாநாயக்க பீடத்தின் அறிக்கை இந்தப் பிரச்சினையை இன்னும் ஒரு கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றது. வாய்மூடி இருந்த இனவாத அமைச்சர்கள்கூட இன்று தைரியமாக வாய்திறக்க ஆரம்பித்திருக்கின்றார்கள்.

இந்த நிலைக்குக் காரணம் அரசாங்கத்தின் அசமந்தப்போக்கு. அதே நேரம் இந்த விளம்பர மோகமும் அதற்குப் பங்களிப்புச் செய்திருக்கின்றது. உண்மையில் இனவாதப் பிரச்சினை என்பது சரி பிழைகளுக்கப்பால் ஒவ்வொரு சமூகத்தினதும் உணர்வுகளோடு சம்பந்தப்பட்டது. எனவே இது முடிந்தளவு சலசலப்பின்றி சாணக்கியமாக அணுகப்பட வேண்டியது. இங்குதான் பலயீனமான இன்றைய அரசாங்கத்தில் நமது 21 பாராளுமன்ற உறுப்பினர் பலம், என்பது மையப்புள்ளிக்கு வருகின்றது. இதில் சமூகத்திற்காக ஒரு முஸ்லிம்கட்சி அரசுடன் முரண்பட்டாலும் ஏனைய கட்சிகளும் அதே வழியில் செல்ல நிர்பந்திக்கப்படும்; என்பது அரசுக்குத் தெரியும். உண்மையில் இன்று எம்மில் தங்கியிருக்கின்ற இந்த ஆட்சியில் வேண்டியதை எங்களால் சாதிக்கலாம். முடியாமல் இருப்பதற்கான காரணம் நாம் தெரிவு செய்தவர்களின் பலயீனமே! இந்த ஆட்சியில் சாதிக்க முடியாவிட்டால் நாம் சாதிப்பதற்கு இன்னொரு தடவை பலயீனமான, நம்மில் தங்கியிருக்கின்ற ஒரு ஆட்சி எப்போது வரும்; என்று கூறமுடியாது . குறிப்பாக தேர்தல் மாற்றம் வந்தால் சிலவேளை இனிமேல் வரலாற்றிலேயே இவ்வாறான ஒரு சந்தர்ப்பம் வருமா? என்று கூறமுடியாது. அவ்வளவு பொன்னான சந்தர்ப்பம் நமக்கு கிடைத்திருக்கின்றது. கடந்தகாலங்களில் என்னென்ன குறைபாடுகள் நமக்கு இருந்தனவோ அவை அனைத்தையும் தீர்க்கக் கூடிய இச்சந்தர்ப்பத்தில் நமது கையாலாகத்தனம் காரணமாக எதுவும் செய்யமுடியாத ஒரு துரதிஷ்ட சமூகமாக இருக்கின்றோம்.

இந்த லட்சணத்தில் அடுத்த தேர்தலில் 22லம்சம் முஸ்லிம்களும் வாக்குப்போடட்டாம்; பிரச்சினைகளைத் தீர்த்துத் தருகின்றாராம்; என்றால் ஒன்றில் பேசியவன், ' பேயன், பைத்தியக்காரனாக' இருக்கவேண்டும். அல்லது அதைக் கேட்டுக் கொண்டு சரிகாண்பவர்கள் அப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும். உண்மையில் இதனை எழுதிக் கொண்டிருக்கும்போது என் உணர்வு நாளங்கள் கொதிக்கின்றன. இன்று முஸ்லிம்கள் வெந்தணல் புழுவாய் வெதும்பிக் கொண்டிருக்கும்போது, இரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும்போது ஒன்றும் செய்ய வக்கில்லாமல் இருப்பது ஒன்று. அந்த லட்சணத்தில் அடுத்த தேர்தலுக்கு வோட்டுப் போடட்டாம்; என்று ஒருவன் கேட்கின்றானாம்; என்றால் அதன்பின்பும் அமைதியாக இருக்க முடியுமா? ரமளான் கட்டுப்பாட்டைக் கூட மீறவேண்டிய நிலைக்கு மனித உணர்வுகள் செல்லாதா?

இன்று மகாநாயக்கர்களும் இனவாத அமைச்சர்களும் வெளிப்படையாகவே களத்தில் மஹிந்த காலத்தில்கூட இல்லாத அளவு குதித்திருக்கின்ற நிலையில் இறைவன் பாதுகாக்க வேண்டும், அடுத்த தேர்தலில் இந்நாட்டு முஸ்லிம்கள் இங்கையில்தான் இருப்பார்களா? அல்லது தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக, ரோகிங்கியர்கள் பங்காள தேசத்திற்கும் வேறு நாடுகளுக்கும் அகதிகளாக கரையேறியதுபோன்ற நிலைமை வந்துவிடுமா? என்ற கவலையில் முஸ்லிம் சமூகம் இருக்கின்றது. ஆனால் அவருக்கு எதைப்பற்றியும் கவலையில்லை. அடுத்த தேர்தலில் வாக்குப் பெறுவதுதான் அவரது பிரச்சினை. எலிக்கு மரணம், பூனைக்கு விளையாட்டு.

அன்று ஐ வி சசியின் படத்தின் கருப்பொருள் போல் இருக்கின்றது; இன்றைய நிலைமை.
அப்படத்தின் கரு இதுதான்,

குழைந்தைக்கோ வயிற்றுப் பசி

மங்கைக்கோ மானப்பசி

காமுகனுக்கோ காமப்பசி

காலனுக்கோ மரணப்பசி

இந்த நான்கு பசிகளையும் வைத்துப் பின்னப்பட்டதுதான் ' பசி'

அதேபோன்றுதான். இன்று

இனவாதிகளுக்கோ துவேசப்பசி

ஆட்சியாளர்களுக்கோ பௌத்தர்களைத் திருப்திப்படுத்தும் பசி

முஸ்லிம்களுக்கோ தம் உயிர்களையும் உடமைகளையும் காக்கும் பசி

நம் ஜால்ராக்களுக்கோ அடுத்த தேர்தல் பசி.

இந்நிலையில் உண்மையைக் கூறுபவனுக்கு அடியாட்களை வைத்து வசை பாட்டு வேறு.

தொடரும் ( அடுத்த பாகத்தில் இவர்களது விளம்பரப் பசியின் பாதிப்புத் தொடர்பாக ஆராயலாம், இன்ஷா அல்லாஹ்)

வை எல் எஸ் ஹமீட்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -