முடிவுகள் எதுவும் முடிவல்ல..!

ரு பிரதேசத்தின் அடையாளங்கள் வரலாற்றில் பதியப்படவேண்டியன. அடையாளங்களாக அழிந்த அழிவடையாத கட்டடங்கள், சிதைந்த சிதைவடையாத பொருட்கள், உருமாறிய உருமாறாத சின்னங்கள், மறந்த மறக்கமுடியாத பதிவுகளும் தொகுப்புகளும் என்று பலவற்றைச் சொல்லலாம். அவ்வாறான வரலாற்று அடையாளங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அப்பிரதேசம் சார்ந்தவர்களையே சாரும்.

அந்த வகையில் சாய்ந்தமருது அரச வைத்தியசாலை அந்தப் பிரதேசத்தின் வரலாற்றுச் சொத்துக்களில் ஒன்று என்பதை யாரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது. 1950 ஆம் ஆண்டு மத்திய மருந்தகமாக ஆரம்பிக்கப்பட்டு அதன் வளர்ச்சிப்பாதையில் பல பரிமாணங்களைக் கண்டு கல்முனைப் பிராந்தியத்திலே சிறப்பான மருத்துவ சேவை வழங்கியது என்பதையும் யாரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது. ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலமாக அதாவது 2000 ஆம் ஆண்டுவரை அதன் சேவையை பொத்துவில் தொட்டு பெரியநீலாவணை வரையிலும் மத்திய முகாம், இறக்காமம் போன்ற பிரதேசங்கள் வரையிலுமான தமிழ் முஸ்லிம் நோயாளர்கள் பிள்ளைப்பேறு தொட்டு சிறப்பான மருத்துவ சேவையைப் பெற்றுள்ளார்கள்.

காலவோட்டத்தில் அதன் சேவையில் 2000ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஒரு தளர்ச்சி ஏற்பட்டது. அந்தத் தளர்ச்சியை உருவேற்றுவது போல 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிப் பேரலை வந்து மனித உயிர்களை காவுகொண்டது மட்டுமல்லாமல், இந்த வைத்தியசாலைக்கும் ஒரு பேரிடியைக் கொடுத்து விட்டுச் சென்றது. தளர்வு கண்ட வைத்தியசாலையானது சுனாமியின் பின்னர் இல்லாமலே போய்விடக்கூடிய ஒரு அபாயகரமான நிலைமையும் அந்தச் சந்தர்ப்பத்தில் ஏற்பட்டிருந்தது.

எனினும், அள்ளாஹ்வின் நாட்டத்தினால் அன்றைய காலப்பகுதியில் இருந்தவர்களின் கடின உழைப்பினால் அந்த வைத்தியசாலை மீண்டும் துளிர் விட்டது. இன்னும் துளிராகவே இருக்கின்றது. அன்று அவர்கள் மேற்கொண்ட அயராத கடின உழைப்பினால் துளிர்பெற்ற அந்த வைத்தியசாலை வேறொரு நிலத்தில் நாட்டப்பட்டது. அதுவும் ஒரு காரணம் அந்த வைத்தியசாலையை சாய்ந்தமருது மக்கள் முழுமையாக சுவைக்க முடியாமல் இருப்பதற்கு. சுனாமிக்கு முன்னர் அந்த வைத்தியசாலை அமையப்பெற்றிருந்த இடமானது சாய்ந்தமருதின் மத்திய பகுதியிலாகும். சாய்ந்தமருதின் எந்தப் பகுதியிலிருந்தும் கால்நடையாகவே அந்த வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள இயலுமாக இருந்தது. நோயாளர்களை கட்டிலோடு வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்று சிகிச்சை பெற்றுச்சென்ற வரலாறும் இருக்கின்றது. எனினும், தற்போதைய அதன் அமைவிடமானது அவ்வூரின் ஒரு எல்லைக்குச் சென்று விட்டதாலும், அதனைச் சுற்றியுள்ள குடிப்பரம்பல் தன்மை காரணமாகவும் அதன் முன்னைய சிறப்பு இப்போதில்லை.

இது ஒருபுறமிருக்க, கடந்த இரு தசாப்தங்களாக இவ்வூரில் இருந்த அரசியல் பிரமுகர்கள் இந்த வைத்தியசாலை தொடர்பில் காட்டிய பங்களிப்பு மிக மிகக் கம்மி என்பதை விடவும் இல்லை என்றே சொல்லலாம். இதயசுத்தியோடு சொல்வதாக இருந்தால், கல்முனையில் அன்றிருந்த ஒரேயொரு ஆதார வைத்தியசாலையான வடக்கு ஆதார வைத்தியசாலைக்குப் பிறிம்பாக இன்னுமொரு ஆதார வைத்தியசாலை வருவதாக இருந்திருந்தால் அது நிச்சயமாக சாய்ந்தமருது வைத்தியசாலையாகவே இருந்திருக்க வேண்டும். எனினும், அன்றிருந்த அரசியல் சூழ்நிலைகள், அன்றிருந்த அரசியல் பிரமுகர்களின் வஞ்சகத்தன்மைகள், இவ்வூர் அரசியல் பிரமுகர்களின் கையாலாகாத்தனம், பதவிகளுக்காக சோரம் போகும் தன்மை என்பவை காரணமாக அது நடைபெறவில்லை.

சுனாமிக்குப் பின்னர் பல வசதிகளும் கொண்ட ஒரு வைத்தியசாலையாக சர்வதேச தொண்டர் நிறுவனம் ஒன்றினால் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், அங்கே அமைக்கப்படவிருந்த சத்திரசிகிச்சை அறைக்குரிய உபகரணங்கள் திட்டமிட்டு கபளீகரம் செய்யப்பட்டதானது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக இருந்தது. இந்த துர்ப்பாக்கிய நிலையை வேறு பிரதேசத்து அரசியல் பிரமுகரின் காதுகளில் எட்ட வைத்து, ஒரு கட்டத்தில் புல்மோட்டை, நிந்தவூர் மற்றும் சாய்ந்தமருது வைத்தியசாலைகள் ஆதார வைத்தியசாலைகளாகத் தரமுயர்த்தப்படுவதற்கு அன்றிருந்த கிழக்கு மாகாண சபை அங்கீகாரம் வழங்கியிருந்தது. அதனடிப்படையில் புல்மோட்டையும் நிந்தவூரும் ஆதார வைத்தியசாலைகளாகத் தரமுயர்த்தப்பட, சாய்ந்தமருது வைத்தியசாலை மாத்திரம் அநாதையாய் கிடப்பில் கிடந்தது. 

இத்தனைக்கும் இவ்வூரின் அரசியல் பிரமுகர்கள் என்று சொல்லிக்கொண்டு அதிகாரமுள்ள கட்சிகளில் அக்காலப்பகுதியிலும் வலம் வந்தார்கள். ஆனால் இருந்தும் என்ன பயன்? ஊருக்குத் தேவையானவை எதுவும் நடக்கவில்லை. இவர்களின் கையாலாகாத் தனத்தினாலும், பொதுமக்களின் அசிரத்தையினாலும் இந்த வைத்தியசாலை தொடர்ந்தும் நாதியற்ற நிலையிலேயே கிடக்கிறது.

நடமாடித் திரிந்த உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் அவர்களுடைய சொந்த தனிப்பட்ட நலன்களை அடைந்து கொள்வதிலேயே குறியாய் இருந்தார்களே தவிர, இந்த ஊரின் எதிர்காலத் திட்டங்கள், எதிர்கால நலன்கள் பற்றி எதுவுமே அக்கறையில்லாதவர்களாகவே இருந்தார்கள். அது வரலாறு, என் கதையல்ல. 

அன்றைய நிலை தான் அப்படி என்றால், இன்றைய நிலை அதனை விடவும் மிக மோசமாக இருக்கின்றது. ஊருக்கென்று ஒரு அரசியல் அதிகாரமில்லை. ஊரைப் பற்றி எதிர்காலத் திட்டங்களை மேற்கொண்டு தன்னலம் பாராது செயற்படக்கூடியவர்களும் யாருமில்லை. குழுக்களாகச் சேர்ந்து கொண்டு காலத்துக்குக் காலம் சந்தர்ப்பவாத அரசியலைச் செய்து கொண்டு பிரிந்து நிற்கின்றார்கள். ஊர் சம்பந்தப்பட்ட எந்த விடயத்தையும் கட்சி மற்றும் அரசியல் சாயம் பூசிக்கொண்டு இருப்பதையும் இல்லாமலாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டமாம் என்பது போல, இவ்வூரினை முன்னேற விடாது தடுக்க நினைக்கின்றவர்களுக்கு இவர்கள் அல்வா கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

தன்னலமற்ற, தூர நோக்கோடு சிந்தித்து செயற்படக்கூடிய எந்தவொரு பலமான அரசியல் அதிகாரமும் இல்லாத நிலையில், எதனைச் செய்வதாக இருந்தாலும் பிறர்காலில் மண்டியிட வேண்டிய நிலையில் இந்த ஊர் இருக்கின்ற போது, இந்த வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக என்ன செய்யலாம் என்ற கேள்விக்கு விடையில்லாமலே வருடங்கள் உருண்டோடிக் கொண்டிருக்கின்றது. ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு நடைமுறைச் சாத்தியம் இல்லாத நிலையில், ஒரு விசேட பிரிவுள்ள வைத்தியசாலையாக மாற்றுவது மாத்திரமே அதனை முன்னேற்றுவதற்கு இருக்கின்ற ஒரேயொரு வாய்ப்பாகும். ஆனால், அதற்கு பலமான அரசியல் பக்கபலம் இருக்க வேண்டும். பறிக்கப்படுகின்ற ஒரு அலுவலகத்தையே தக்கவைத்துக் கொள்ள அரசியல் பலம் இந்த ஊருக்கென்று இல்லாதிருக்கின்ற நிலையில் அது எப்படி சாத்தியமாகும். மாகாண நிருவாகத்தின் கீழுள்ள வைத்திசாலை ஒன்றை மத்திய அரசின் கீழ் உள்வாங்கப்பட வைக்கவும் பலமான அரசியல் பக்கபலம் இருக்க வேண்டும்.

வசதிகள் இல்லை என்று நோயாளர்கள் அந்த வைத்தியசாலைக்குச் செல்லாதது ஒருபுறமும், நோயளர்கள் இல்லாத வைத்தியசாலைக்கு அபிவிருத்தி எதற்கு என்று ஒருபுறமுமாக தர்க்க ரீதியான போராட்டம் தொடர்கிறது. இவ்வாறானதொரு பின்னணியில் தான், அண்மையில் பிரதி சுகாதார அமைச்சரினால் ஒரு ஆலோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. குறித்த ஆலோசனை தொடக்கமல்ல. அதற்கு முன்னர் முன்வைக்கப்பட்ட ஆலோசனை கலந்துரையாடப்பட்டு, அது நிராகரிக்கப்பட்டுத் தான் தற்போதைய முடிவு எட்டப்பட்டது. பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டு அவை தெளிவுபடுத்தப்பட்டு, இந்தப் பிராந்தியத்தின் நன்மை கருதியே மிகவும் மனப்போராட்டத்தின் மத்தியில் அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

கடந்த காலத்தில் சாய்ந்தமருது வைத்தியசாலை வீதியின் பெயரை சிலர் மாற்றுவதற்கு முயற்சித்த போது, அதனைக் காட்டமாக எதிர்த்து நிறுத்தியிருந்தோம். ஒரு வீதியின் பெயரை மாற்றுவதற்கே எதிர்ப்பைக் காட்டியவர்களால், எப்படி ஒரு வைத்தியசாலையை இன்னுமொரு வைத்தியசாலையோடு இணைப்பதற்கு சம்மதம் தெரிவிக்கலாம் என்ற நியாயமான கேள்வி எழலாம். 

ஒரு வைத்தியசாலையை இன்னுமொரு வைத்தியசாலையோடு இணைப்பது என்பது சாதாரண விடயம். ஆனால், அது இந்த ஊரைப் பொறுத்தமட்டில் மிகவும் முக்கியமான வரலாற்றில் இடம்பெறக்கூடிய நிகழ்வு. அதற்குக் காரணம், அந்தவூர் அனுபவித்த கடந்த கால கசப்பான அனுபவங்கள், அதனோடு தொட்டு இன்னும் தொடர்கின்ற போராட்டங்கள். இத்தனையும் தெரிந்து கொண்டு இணைப்பதற்கான முடிவுக்கு வருவதென்பது அவ்வளவு இலேசான விடயமல்ல.

எந்த விடயத்திலும் சாதக பாதகங்கள் இருக்கின்றன. அதில் எது மிகத்து நிற்கின்றதோ அதற்கேற்ற முடிவை எடுக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகின்றது. 

இத்தகையதொரு கடினமான முடிவுக்கு ஒப்புதல் வழங்க வேண்டிய ச10ழ்நிலையை உருவாக்கியவர்கள் இருந்த, இருக்கின்ற அரசியல் பிரமுகர்களும், அவர்களின் பின்னால் அமைப்பு ரீதியாகவும் குழுக்களாகவும் பிரிந்து சேர்ந்து திரிகின்றவர்களும், எது நடந்தாலும் பரவாயில்லை பாராமுகமாக இருக்கும் பொதுமக்களும் தான். பின் துவாரத்தால் வெளியாகும் காற்றைக்கூட கட்சி ரீதியாகப் பார்க்கக்கூடிய ஒரு கட்டத்திலே இருந்து கொண்டீருக்கிறோம். அதன் காரணமாகத்தான் கிடைக்கவேண்டிய பலதை இழந்து கொண்டிருக்கின்றோம்.

இனிவரும் காலங்களிலாவது, குறைந்த பட்சம் ஊருக்குரிய விடயம் என்று வருகின்ற போதாவது குழு, அமைப்பு, கட்சி, தனிப்பட்ட பிரச்சினை என்ற எல்லாவிடயங்களையும் ஒருபுறமாக வைத்து விட்டு குறித்த விடயத்துக்காக ஒன்றுபட்டு செயற்படாத வரை வைத்தியசாலையும் அப்படியே தான் இருக்கும், பிரதேச செயலகமும் அப்படியே தான் இருக்கும், இந்த ஊரும் அப்படியே தான் இருக்கும். இப்படி சொல்வதை விட இந்தியாவிலே ஒரு கிராமமே இல்லாமல் போன கதையை திரைப்படத்தில் பார்த்திருக்கும் நாம் நிஜமாகப் பார்க்கக்கூட இல்லாமல் போய்விடுவோம் என்பேன்.

உள்ளூராட்சி சபைக்கான தாகத்தின் வெளிப்பாடு தான் வைத்தியசாலைகளின் இணைப்பிற்கான எதிர்வலை. உள்ளூராட்சி சபை தொடர்பில் ஏமாற்றுகின்ற சக்திகள் அனைத்தும் இதற்கு பொறுப்புதாரிகள். இந்த ஊரைப் பொறுத்தவரையில் இனிமேல் நடைபெறப்போகும் எல்லா செயற்பாடுகளிலும் இந்தத் தாக்கம் பிரதிபலிக்கும். இருந்த போதிலும், முடிவுகள் எதுவும் முடிவல்ல. மனிதர்களால் எடுக்கப்படும் தீர்மானங்கள் எதுவும் வேதவாக்குகள் அல்ல. கடந்த காலம் நிகழ்காலமும் அல்ல. எதிர்காலம் கடந்த காலத்தின் பிரதியீடும் அல்ல. முயற்சிக்காமல் முடியாதென்பது இயலாமை. முயற்சித்து முடியாமல் மறுபடி முயற்சிப்பது தான் வெற்றியின் ஆரம்பம்.
Dr. N. Ariff,
President / Bright Future Foundation.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -