எம்.வை.அமீர், அஸ்லம் எஸ்.மௌலானா-
கல்முனை மாநகரசபையின் முன்னாள் முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளருமான, சட்டமுதுமானி நிசாம் காரியப்பர் ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமணம் பெற்றுள்ளமயானது முழுக்க முழுக்க அவரது சொந்த திறமை மற்றும் முயற்சிக்குக் கிடைத்த பரிசு என்றும், இதில் அரசியல் செல்வாக்கு அறவேயில்லை என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அழுத்தமாக தெரிவித்தார்.
மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்களுக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தில் இருந்து ஜனாதிபதி சட்டத்தரணியாக சட்டமுதுமானி, நிசாம் காரியப்பர் நியமணம் பெற்றுள்ளமையினை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை முகைதீன் பெரிய பள்ளிவாசல் தலைவர், டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தலைமையில் 2017-05-20 ஆம் திகதி கல்முனை ஆஷாத் பிளாஸா வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கல்முனை மண்ணும் மக்களும் நிஸாம் காரியப்பரின் உயர்வை பெருமையுடன் கொண்டாடும் இவ்வேளையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒரு முக்கிய உறுப்பினரான நிஸாமை கட்சியின் சார்பிலும் தனிப்பட்ட முறையிலும் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
சிறந்த மொழியாற்றல் மற்றும் வாதத்திறமை கொண்ட நிஸாமை தொலைக்காட்சி உள்ளிட்ட ஏனைய முக்கிய நிகழ்வுகளுக்கு தனக்கு அடுத்தாற்போல் கட்சி சார்பாக செல்வதற்கு தான் எப்போதும் தெரிவு செய்வதாகவும் தெரிவித்தார்.
நிஸாம் காரியப்பருக்குக் கிடைத்துள்ள இந்த தேசிய அங்கீகாரம் அவரது தாய் தந்தை, குடும்பத்தினர் மற்றும் சமூகத்துக்கும் பெருமை என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவரும் மாகாண சபை உறுப்பினருமான ஆரிப் சம்சுதீன், கட்சியின் தவிசாளர் ஏ.எல்.அப்துல் மஜீத்,வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட பணிப்பாளர் ஏ.எல்.அப்துல் அஸீஸ், அமைச்சரின் இணைப்புச்செயலாளர் ரஹ்மத் மன்சூர், முன்னாள் கல்முனை மாநகர சபை எதிர் கட்சித் தலைவர் ஏகாம்பரம், முன்னாள் மாநகரசபை உறுப்பினர்கள் கட்சித் தொண்டர்கள், மக்கள் பிரதிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்






