பிரபல சட்டத்தரணியும், மனித உரிமைவாதியும் தமிழ் அரசியல்தலைவர்களில் ஒருவருமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களது மறைவினால் துயருற்றிருக்கும் அனைவருடனும் எமது ஆழ்ந்த துயரங்களை பகிர்ந்து கொள்கின்றோம்.
அன்பானவர், மிகவும் எளிமையானவர், முதிர்ந்த அரசியல்வாதி என்ற பண்புகளுக்கும் அப்பால் அவர் எமதினத்திற்கு ஆற்றிய கடினமான சேவைகளை இத்தருணத்தில் நெஞ்சில் நிறுத்திக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.
தமிழ்க் காங்கிரஸின் தலைவர் ஜி.ஜி பொன்னம்பலம் அவர்களினதும் அவரது புதல்வர் குமார் பொன்னம்பலம் அவர்களினதும் கொள்கைகளில் கொண்ட ஈடுபாடு காரணமாக இறுதிவரை காங்கிரசில் தொண்டனாக, செயற்பாட்டாளராக, தலைவராக மிளிர்ந்து செயலாற்றிய அமரர் அ.விநாயகமூர்த்தி அவர்கள், எத்தகைய சூழ்நிலையிலும் தான் வரிந்து கொண்ட கொள்கைகளில் சமரசம் செய்துகொள்ளாது தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தவராவார்.
பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலங்களில் மட்டுமன்றி அதற்கு முன்னும் பின்னும் சிறைகளில் வாடும் தமிழ் இளைஞர்களின் விடுதலைக்காக அயராது உழைத்தவர். கட்சி பேதங்களின்றி அனைத்து விடுதலை அமைப்புக்களினதும் போராளிகளது விடுதலைக்கான ஆலோசனைகளையும், உடல் உழைப்பையும் அள்ளித் தந்தவர்.
சிறைகளுக்குள் செல்லமுடியாத சூழலில் இருந்த பெற்றோர்களுக்காகவும், உறவினர்களுக்காகவும் சிறைச்சாலைகளுக்கு சென்று அவர்களது தேவைகளை பூர்த்தி செய்தவர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கோரமான பக்கங்களை தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வந்த அவர், மாற்றீடாக வரவிருந்த சட்டமூலத்தில் சிறுபான்மை இனங்களின் அடிப்படை உரிமைகளை அச்சுறுத்தும் விடயங்கள் இடம்பெறக்கூடாது என்பதற்காகவும் போராடி வந்தார்.
அடிப்படை மனித உரிமைகளுக்காகவும், கருத்துச் சுதந்திரத்திற்காகவும் போராடியவர்களின் குரல்வளைகள் இறுக்கப்பட்டுக் கொண்டிருந்த நீண்டதொரு காலகட்டத்தில் தனது மூப்பு, நோய்வாய்ப்பட்ட நிலைமைகளை எல்லாம் புறக்கணித்து செயற்பட்ட அவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட இரண்டு கால கட்டங்களிலும் அவசரகால சட்ட நீடிப்பை எதிர்ப்பதில் மிகவும் தீவிரமாக இருந்தார்.
காங்கிரஸ் தலைவராக இருந்து இணைந்து உருவாக்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு எனும் மாபெரும் தேசிய இயக்கம் பிளவுபட்டு விடக்கூடாது என்பதில் அவர் காட்டிய உறுதி, காங்கிரஸ் கட்சியானது கூட்டமைப்பினை விட்டு விலகிய போதும். தான் விலாகதிருந்த அவரது பண்பிலும், செயற்பாட்டிலும் வெளிப்பட்டு நின்றது.
காரணங்களின்றி சிறைகளில் வாடுகின்ற இளைஞர்களுக்காகவும், சொந்த நிலங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு இன்று காணிகளை கேட்டு நிற்கும் தமிழ் மக்களுக்காகவும், காணாமல் போனவர்களின் உறவுகளுக்காகவும், சிறுபான்மை இன மக்களின் அடிப்படை மனித உரிமைகளுக்காகவும் ஒலித்த குரல் ஓய்ந்து விட்டது.
தமிழ் மக்களின் அரசியல் பரப்பில் ஒரு தனித்துவமான மனிதனின் இடம் வெற்றிடமாகியுள்ளது.
அன்னாரிற்கு எமது இதயபூர்வமான அஞ்சலிகளை மீண்டும் காணிக்கையாக்குகின்றோம்.
த.சித்தார்த்தன் பா.உ
தலைவர்
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)
29.05.2017.