நடிகர் ரஜினிகாந்தின் இலங்கைக்கான விஜயம் தடைப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கருத்துக்களை வெளியிட்டுள்ளார். மேலும், ரஜினியின் இலங்கைக்கான விஜயம் தடைப்பட்டமையால் தமிழக அரசியல்வாதிகளின் செயற்பாடுகளுக்கு விசனம் வெளியிட்டுள்ளார்.
“டைம்ஸ் நவ்” என்ற இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கையில் நடைபெறும் செயற்பாடுகளுக்கு தமிழக அரசியல்வாதிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். எனினும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித உதவியும் செய்வதில்லை.
அதன்படி எந்தவொரு நடிகரும் இலங்கை வருவதில் தவறில்லை எனவும் நாமல் குறிப்பிட்டுள்ளார். பிரபல படத்தயாரிப்பு நிறுவனத்தினால் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட 150 வீடுகளை மக்களிடம் கையளிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் தமிழக அரசியல்வாதிகளின் அழுத்தம் காரணமாக, ரஜினிகாந்த் தனது விஜயத்தை ரத்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.