நவாஸ் சௌபி
‘தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள்’ எனும் ஒரு திருட்டுப் புத்தகம் தாருஸ்ஸலாம் மீட்பு முன்னணி என்ற பெயரில் காழ்ப்பின் உச்சத்தில் நின்று வெளிவந்திருந்தது.
கடந்த காலங்களில் எல்லோரும் அறிந்தும் தெரிந்தும் வைத்திருக்கும் சம்பவங்களை முன்னுக்குப் பின் முரணாக பொய்களால் சோடித்தும் ஊகங்களாக பல கதைகளைச் சொல்லியும் அரசியல் பழிதீர்க்கும் கீழ்தரமான ஒரு செயலை இத்தொகுப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். மக்கள் அறியாத உண்மைகளையும் மர்மங்களையும் வெளிச்சத்துக்கு கொண்டுவருவதாகச் சொல்பவர்கள் முதலில் தாங்கள் யார் என்ற முகத்தை வெளிச்சத்தில் காட்டியிருக்க வேண்டும்.
மர்மமான பொய்களால் எழுதப்பட்ட ஒருமொட்டைக் கடிதத்திற்கு புத்தக வடிவம் கொடுத்திருக்கிறார்கள். இப்படி ஊகங்களாலும் கற்பனை கலந்த பொய்யான கதைகளாலும் எழுதப்பட்ட ஒரு மொட்டைப் புத்தகமாக இது இருக்கிறது.
இது ஒரு அனாமேதயமான திருட்டுப் புத்தகம், இதற்கு எதற்குப் பதில் அளிக்க வேண்டும் என்று இதனைக் கருத்தில் எடுக்காதுவிட்டிருந்தால் இதிலுள்ள பொய்களும் ஊகங்களும் மக்கள் முன் உண்மையான தோற்றத்தைப் பெற்றுவிடுமோ என்ற காரணத்தினால், இதிலுள்ள உண்மைகளை தெளிவுபடுத்தி தாருஸ்ஸலாம் மீட்பு முன்னணிக்குள் ஒளிந்திருக்கும் புலித்தோல் போர்த்திய நரிகளை தோலிருப்பதற்காக ‘தாருஸ்ஸலாம் மறைக்கப்படாத உண்மைகள்’ எனும் பதில் புத்தகம் வெளியிடப்பட்டிருக்கிறது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாத் அவர்களினால் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்படுகின்ற இப்புத்தகம், தாருஸ்ஸலாம் பற்றிய தேடல்களின் பின்னணியில் இக்கட்டுரையாளரால் எழுதப்பட்டிருக்கிறது.
‘தாருஸ்ஸலாம் மறைக்கப்படாத உண்மைகள்’ புத்தகமானது பின்வருமாறு சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது.
தன் வறுமையை அழிக்க இயக்கமாகி
இயக்கத்தை அழிக்க உளவாளியாகி
உள்ளவர்களை அழிக்க மு.கா.போராளியாகி
மு.கா.வை அழிக்க கோடாரியாகி
வளமோடு வாழும்
சுயபேரத்தில் வலிமை கண்ட
வஷீருக்கு.....
‘தாருஸ்ஸலாம் மறைக்கப்படாத உண்மைகள்’ புத்தகத்தை பதிப்பாக்கம் செய்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாத் தனது பதிப்புரையில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
“….தாருஸ்ஸலாம் தாருஸ்ஸலாமாகவே நிமிர்ந்து நிற்கின்றது. அதில் ஒரு அங்குலம் கூட, ஒரு செங்கல் கூட எவரினாலும் சூறையாடப்படவும் இல்லை, விற்பனை செய்யப்படவும் இல்லை. மாறாக அது பாதுகாக்கப்பட்டிருக்கிறது.
இது விடயத்தில் இத்தனையும் வெளிப்படையாக இருந்தபோதும் ஏன் இப்படி ஒரு திருட்டுப் புத்தகத்தை பிரசுரித்தார்கள்? இது சமூகத்தின் மீது கொண்ட அக்கறையா? அல்லது கட்சி மீது கொண்ட அக்கறையா? இல்லையேல், தன் சுயத்திற்கு தீனியாக தேவைப்படும் பதவி, பட்டங்கள் மீது கொண்ட அக்கறையா? அல்லது கட்சிப் போராளிகளைத் திசைதிருப்பி கட்சியைத் துண்டாடுவதற்கான சதி முயற்சியா?
சமூகத்தின்பால் அக்கறை கொண்ட ஒருவன், தான் சார்ந்த கட்சியின் தலைமை முரண்படும்போது அதனால் ஏற்படும் உரிமைகள் வெல்லப் படாமை பற்றி, அதனால் ஏற்பட்ட இழப்புகள் பற்றி, அதற்கான மீள் நடவடிக்கைகள் பற்றி தர்க்கிப்பதும், விவாதிப்பதும் ஏற்புடையதாகும்.
ஆனால், தன் சுயத்திற்கு தீனி இல்லை என்றபோது, மிரட்டி பேரம்பேசவும், மிரட்டி பேரம்பேசும் சாதுரியம் ஏற்கப்படவில்லை என்றதும் அதற்காக கட்சியை அழிக்க முற்படுதலும் ஏற்புடையதல்ல. ” ‘தாருஸ்ஸலாம் மறைக்கப்படாத உண்மைகள்’ புத்தகத்தின் உள்ளடக்கமானது பின்வரும் தலைப்புக்களின் கீழ் எழுதப்பட்டிருக்கிறது.
• தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் ஒரு காழ்ப்பின் பிறப்பு
• உயர் பீடத்தில் பகிரங்கமாக கேள்வி எழுப்பியவர் பஷீர் சேகுதாவூத்
• தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் திருட்டுப் புத்தகத்தின் நோக்கம்
• தாருஸ்ஸலாம், லோட்டஸ் நம்பிக்கை நிதியம், புனிட்டி பில்டர்ஸ் கம்பனி
• லோட்டஸ் நம்பிக்கை நிதியத்திற்கும் யுனிட்டி பில்ட்ர்ஸ் கம்பனிக்கும் என்ன நடந்தது
• சொத்துக்களும் வருமானங்களும்
• ஹாபீஸ் நஸீர் அஹமட் மீது தலைவர் மர்ஹ{ம் அஷ்ரஃப் கொண்டிருந்த நம்பிக்கை
• பணிப்பாளர் சபை மாற்றம்
• யுனிட்டி பில்டர்ஸ் கம்பனியில் தலைவர் ரவூப் ஹக்கீம், எம்.எச்.எம். சல்மான் பணிப்பாளர்களாவதன் அவசியம்.
• முடிவுரை
மேற்படி தலைப்புக்களில் தாருஸ்ஸலாம் பற்றிய மறைக்கப்படாத உண்மைகள் மக்களின் தெளிவான வாசிப்புக்கு புத்தகமாக்கப்பட்டிருக்கிறது.
‘தாருஸ்ஸலாம் மறைக்க்பட்ட மர்மங்கள்’ புத்தகத்தில் அபாண்டமாக சுமத்தப்பட்டிருந்த குற்றமானது அதன் முன்னுரையில் இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
• “முஸ்லிம் காங்கிரஸைக் காப்பாற்றுவதற்கும், செழுமைப்படுத்துவதற்கும் கட்சியை நடத்திச் செல்வதற்கான வருமானத்தைத் தரும் நிதி மூலமாகவும் உருவாக்கப்பட்ட நம்பிக்கை நிதியத்திற்கும், கம்பனிக்கும் என்ன நடந்தது என்பதை ஓரிருவரைத் தவிர வேறு எவரும் அறியவில்லை. இவ்விடத்தில்தான் தாருஸ்ஸலாம் பற்றிய கேள்விகள் இணைந்துகொள்கின்றன...”
இதன்படி முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை மையப்படுத்தியதாக தாருஸ்ஸலாம், லோட்டஸ் நம்பிக்கை நிதியம், யுனிட்டி பில்டர்ஸ் கம்பனி ஆகிய மூன்றினையும் மோசடிகள் செய்யப்பட்ட ஒரு இடமாகவும் அவை இன்று கட்சிக்கு இல்லாத நிலையில் குழறுபடிகள் நிறைந்திருப்பதாகவும் திரிவுபடுத்திய கதைகளை பூதாகரமாக்கி இருக்கிறார்கள்.
இவை மூன்றினதும் இன்றைய நிலையை ‘தாருஸ்ஸலாம் மறைக்கப்படாத உண்மைகள்’ புத்தகத்தில் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. உண்மையாகவே தாருஸ்ஸலாம் குழறுபடிகள் என்று மக்களை குழப்பி இருக்கிறார்கள். தெரியாதவற்றை வைத்துக்கொண்டு தெரிந்ததுபோல் கதைகளைச் சொல்லி மக்களை ஏமாற்ற முனைந்திருக்கிறார்கள்.
ஆனால் இன்று தாருஸ்ஸலாம் கட்டிடம் கட்சிக் காரியாலயமாக இயங்குவது வெளிப்படையான சான்றாக இருக்கிறது. அதன் அருகிலுள்ள நிலம் கட்சிக்கு சொந்தமாக்கப்பட்டிருக்கும் ஆதாரமும் கண்முன் இருக்கிறது. தற்போது யுனிட்டி பில்டர்ஸ் கம்பனியினுள் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் எம்.எச்.எம்.சல்மான் எம்.பி ஆகிய இருவரும் பணிப்பாளர் சபைக்குள் இருக்கிறார்கள்.
கட்சியின் தலைவர் என்றவகையில் இவ்விரு பணிப்பாளர் சபைக்குள்ளும் மறைந்த தலைவர் அஷ்ரஃப் அவர்கள் இருந்தது போன்று இப்போது தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களும் யுனிட்டி பில்டர்ஸ் பணிப்பாளர் சபையினுள் வந்திருப்பது கட்சியின் கூட்டுப் பெறுப்பினை வெளிப்படுத்தும் பலமான ஒருவிடயமாகும்.
மேலும் யுனிட்டி பில்டர்ஸ் கம்பினி லோட்டஸ் நம்பிக்கை நிதியத்தின் எந்தவகையான சொத்துக்களையும் உரிமைகொள்ள முடியாது அதற்கான இயலுமை அந்தக் கம்பனிக்கு இல்லை என்பதும் இதன்மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதுவிடயத்தில் எந்தவிதமான சந்தேகங்களும் குழப்பங்களும் இனி எழாது என்பதற்கு இது மிகப் பெரும் சான்றாக இருக்கின்றது.
அவ்வாறே எதிர்காலத்திலும் நம்பிக்கை நிதியம் மற்றும் யுனிட்டி பில்டர்ஸ் கம்பனி ஆகிய இரண்டுக்குமிடையிலான கட்சியின் நிலைப்பாட்டை உறுதியாக வைத்திருக்க வேண்டுமானால் நிச்சயமாக இவ்விரு பணிப்பாளர் சபையினுள்ளும் கட்சித் தலைவர் என்றவகையில் ரவூப் ஹக்கீம் அங்கம் வகிக்க வேண்டும்.
தற்போது தலைவர் ரவூப் ஹக்கீம் இதனுள் இருப்பது கட்சி இருப்பதற்கு சமமான ஒரு நிலைப்பாடாகும். அத்தோடு யுனிட்டி பில்டர்ஸின் செயற்பாடுகளும் கட்சிக்காக இருக்கும் என்பதற்கும் இது ஒரு உத்தரவாதமாகும்.
எல்லாமே இவ்வாறு வெட்ட வெளிச்சமாக இருக்க கட்சியை விட்டு இவற்றை எப்படி, யாரால் உரிமை கொள்ள முடியும்? இந்த உண்மை ஒருபுறமிருக்க எதற்குமே வக்கில்லாதவர்களாக தாருஸ்ஸலாம் கொள்ளை அடிக்கப்படுவதாக கண்ணைப் பொத்திக்கொண்டு மனச்சாட்சி இல்லாமல் கட்டுக்கதைகளை சொல்லி இருக்கிறார்கள்.
கொள்ளை என்றால் என்ன? தாருஸ்ஸலாத்திலிருந்து ஏதாவது ஒரு செங்கல் அல்லது ஒரு துண்டு நிலம் இதுவரையும் எங்காவது எப்போதாவது போய் இருக்கிறதா? அல்லது யாருக்காவது விற்கப்பட்டிருக்கிறதா? எதுவுமே இல்லையே, எல்லாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சொத்தாகவே இருக்கிறதே.
இவர்கள் இவ்வளவு வாதாடுவது கட்சியின் சொத்துக்கள் கட்சிக்கே இருக்க வேண்டும் என்பதை வெளிச்சமிடத்தான் என்றால், இப்பவும் சொத்துக்கள் யாவும் கட்சிக்குத்தானே இருக்கிறது. அப்படி இருந்தும் சுமுகமான நிலையில் இருக்கும் கட்சிக்குள் முரண்பாடுகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்த சதிவலை பின்னுகிறார்கள். இப்படியெல்லாம் பல சோடித்த கதைகளைச் சொல்லி மக்களை நம்ப வைத்து தாங்கள் நினைத்ததைச் சாதிக்கத் துடிக்கிறார்கள்.
இவற்றையெல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்லி ‘தாருஸ்ஸலாம் மறைக்கப்படாத உண்மைகள்’ புத்தகம் வெளிவந்திருக்கிறது. இதனை படிப்பவர்கள் உண்மையின் பின்புலங்களையும் இதிலுள்ள யதார்த்தங்களையும் நம்பிக்கையோடு ஏற்றுக்கொள்வார்கள்.
