கல்முனை- கொழும்பு தனியார் பஸ்கள் பகிஷ்கரிப்பு; ஆரிப் சம்சுதீன் தலையீட்டினால் தீர்வு!

அஸ்லம் எஸ்.மௌலானா-
பாதை அனுமதிப் பத்திரமின்றி கல்முனையில் இருந்து மட்டக்களப்பு ஊடாக கொழும்புக்கு போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற தனியார் பஸ்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெறுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார்.

இந்த இணக்கப்பாட்டின் பிரகாரமே அனுமதிப் பத்திரத்தைக் கொண்டிருக்கின்ற பஸ்களின் உரிமையாளர்கள் மேற்கொண்ட பகிஷ்கரிப்பு நடவடிக்கை முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கல்முனையில் இருந்து மட்டக்களப்பு ஊடாக பாதை அனுமதிப் பத்திரத்துடன் கொழும்புக்கு போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற தனியார் பஸ்களின் உரிமையாளர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதுடன் காரைதீவு கண்ணகி அம்மன் கோவில் முன்பாக அனைத்து பஸ்களையும் கொண்டு வந்து நிறுத்தி, கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

இதன்போது அங்கு விரைந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், தொலைபேசி மூலம் பொலிஸ் உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, அவ்விடத்திற்கு வரவழைத்து, குறித்த பாதை அனுமதிப் பத்திரம் பெற்றுள்ள பஸ்களின் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

பாதை அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாக போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற பஸ்களின் உரிமையாளர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, இன்று அவர்களது பஸ்கள் சேவையில் ஈடுபடாமல் தடுக்கப்பட வேண்டும் என இதன்போது பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் வலியுறுத்திய தனியார் பஸ்களின் உரிமையாளர்கள், இல்லா விட்டால் தாம் இன்று சேவையில் ஈடுமடாமல் பகிஸ்கரிப்பை தொடருவோம் என்று தெரிவித்தனர்.

இதற்குப் பதிலளித்த பொலிஸ் உயர் அதிகாரிகள், உரிய நடவடிக்கைக்கு கால அவகாசம் கோரியதுடன் திங்கட்கிழமை (27) அல்லது அடுத்த ஒரு சில தினங்களுக்குள் சட்டவிரோதமாக சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் தடையுத்தரவை பெற்று, தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து பகிஷ்காரிப்பு முடிவுக்கு வந்தது.

கல்முனைப் பிராந்தியத்தில் இருந்து தினசரி இரவு 8.00 மணிக்கு புறப்படுகின்ற கொழும்புக்கான பஸ்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை இந்த பகிஷ்கரிப்பு நடவடிக்கை காரணமாக இரவு 10.30 மணிக்கு பின்னரே புறப்பட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை பாதை அனுமதிப் பத்திரமின்றி கல்முனையில் இருந்து மட்டக்களப்பு ஊடாக கொழும்புக்கு போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற தனியார் பஸ்களை சேவையில் இருந்து தடுப்பதற்கான நீதிமன்ற தடையுத்தரவைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை கல்முனைப் பொலிஸார் இன்று திங்கட்கிழமை ஆரம்பித்துள்ளனர் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார்.

பகிஷ்கரிப்பு நடவடிக்கை மேற்கொண்ட தென்கிழக்கு சமூகநல பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசகரும் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.தில்ஷாத் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;

இப்பிரச்சினை கடந்த ஒன்றரை வருட காலமாக இருந்து வருகின்றது. அனுமதிப்பத்திரமின்றி சில பஸ்கள் சேவையில் ஈடுபடுவதனால் வருடாந்தம் சுமார் மூன்று இலட்சம் ரூபா செலுத்தி அனுமதிப்பத்திரம் பெற்றிருக்கின்ற பஸ்களின் உரிமையாளர்கள் பெரும் நஷ்டமடைகின்றனர்.

இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல தடவைகள் எழுத்து மூலம் முறையிட்டும் நியாயம் கிடைக்கவில்லை. அதனால் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் குதித்தோம். தற்போது எமக்கு பொலிஸ் உயர் அதிகாரிகள் தந்திருக்கும் வாக்குறுதியை ஏற்றுக்கொண்டு பகிஸ்கரிப்பை முடிவுக்கு கொண்டு வருகின்றோம்.

போலீசார் கூறியபடி நீதிமன்ற நடவடிக்கையின் பிரகாரம் அடுத்த ஒரு சில தினங்களில் சட்ட விரோதமாக சேவையில் ஈடுபடும் பஸ்கள் தடுக்கப்பட விட்டால் போராட்டம் மீண்டும் தொடரும்" என்றார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -