களுத்துறை வடக்கு சிறைச்சாலையில் இருந்து கடுவலை நீதிவான் நீதிமன்றுக்கு பாதாள உலகக் கோஷ்டி சந்தேக நபர்களை ஏற்றி வந்த சிறைச்சாலை பஸ் வண்டி மீது நேற்றுக் காலை களுத்துறை, மல்வத்த - எத்தனமடல பகுதியில் வைத்து சரமாரியான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது அறிந்ததே..
இதன்போது அந்த பஸ் வண்டியில் இருந்த பிரபல பாதாள உலகக் கோஷ்டியின் தலைவனான 'ரணாலே சமயா' அல்லது சமயங் என அறியப்படும் எம்.பி. அருண தமித் உதயங்க பத்திரண உள்ளிட்ட 5 கைதிகளும் இரண்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் நான்கு சிறைச்சாலை அதிகாரிகள் படு காயமடைந்த நிலையில் களுத்துறை - நாகொட வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து களுத்துறைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜி.கே.பெரேராவின் நேரடி கட்டுப்பாட்டில் 3 குழுக்களும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் மீரிஹான விசேட குற்றவியல் பிரிவு ஆகியனவும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார். சம்பவம் குறித்து அனைத்து விசாரணைகளும் மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரும் குற்றவியல், போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நந்தன முனசிங்கவின் நேரடி மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதனைவிட சிறைச்சாலை மட்டத்திலும் சிறப்பு விசாரணைகள் இடம்பெறுவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துஷார உபுல் தெனிய தெரிவித்தார்.
கடுவலை - நவகமுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்றிருந்த மூன்று கொலைகள் மற்றும் ரீ 56 ரக துப்பக்கியொன்றினை அருகில் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் சமயங் மற்றும் அவரது சகாக்கள் நால்வர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் களுத்துறை வடக்கு சிறைச்சாலையிலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் அது தொடர்பிலான வழக்கு நேற்று கடுவலை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.
அந்த வழக்கில் ஆஜர் செய்வதற்காக பதாள உலகக் கோஷ்டி சந்தேக நபர்களை ஏற்றிக் கொண்டு களுத்துறையிலிருந்து கடுவலை நீதிமன்றத்திற்கு என்.ஏ.8447 எனும் இலக்கத்தை உடைய சிறைச்சாலை பஸ் வண்டி பயணித்துள்ளது. இதன்போது 5 கைதிகள் அந்த பஸ்ஸில் இருந்துள்ளதுடன் அவர்களின் பாதுகாப்புக்கென 6 சிறைச்சாலை அதிகாரிகளும் பயணித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை 8.00 மணிக்கும் 8.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் களுத்துறை வடக்கு சிறைச்சாலையில் இருந்து கைதிகளை ஏற்றிய பஸ் வண்டியானது கடுவலை நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது. சிறைச்சாலையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றருக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மல்வத்த - எத்தனமடல என்ற இடத்தில் வைத்து சிறைச்சாலை பஸ் வண்டியை கெப் ரக வாகனம் ஒன்று குறுக்காக மறித்து நிறுத்தியுள்ளது.
அந்த இடம் மண் அகழ்வுகள் இடம்பெறும் மண் மேடுகளுடன் கூடிய பகுதியாகும். பஸ் நிறுத்தப்பட்டதை அடுத்து குறுக்காக நிறுத்தப்பட்ட கெப் ரக வாகனத்தில் இருந்து பொலிஸாரின் உத்தியோகபூர்வ உடையை ஒத்த உடையில் இருந்த துப்பககி தாரிகள் சிறைச்சாலை பஸ் வண்டி மீது திடீரென சரமரியான துப்பாக்கிச் சூட்டினை நடத்தியுள்ளனர். இதன் போது பாதுகபபுக்கு இருந்த சிறைச்சாலை அதிகாரிகள் பதில் தககுதல் நடத்தௌம் போது அருகில் இருந்த மண் மேடுகளில் இருந்தும் பஸ் வண்டியை நோக்கி துப்பககிப் பிரயோகம் நடத்தப்ப்ட்டுள்ளது.
சிறைச்சாலை பஸ் வண்டியின் மீது நாலா புறமும் நடத்தப்ப்ட்ட துப்பககிச் சூடு காரணமாக பஸில் இருந்த கைதிகளும் சிறை அதிகாரிகளும் திக்குமுக்காடி போயுள்ளனர். இந்த நிலையில் ஒரு கட்டத்தில் பஸ்ஸ{க்குள்ளும் ஏறிச் சென்று துப்பாக்கிதாரி ஒருவர் தககுதல் நடத்தியுள்ளமைக்கான தடயங்களையும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர். சமயங் உள்ளிட்ட பாதாள உலக கோஷ்டியினர் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்படும் வரை அப்பாதையில் காத்திருந்து மிகத் திட்டமிட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டிக்காடினார்.
குறித்த பகுதியில் தாக்குதல்தாரிகள் மறைந்திருந்தமைக்கான தடயங்களை பொலிஸார் கண்டறிந்துள்ளனர். குறித்த மண் மேடு பகுதியில் ஏற்கனவே வெள்ளை வேன், கெப் ரக வாகனங்களில் வந்து தாக்குதல்தல் நடத்தியோர் பதுங்கி இருந்துள்ளனர். இந் நிலையிலேயே பஸ் வண்டி அப்பகுதியை அடைந்த போது வழி மறித்தும் ஒழிந்திருந்தும் சரமரியான தககுதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த துப்பாக்கிப் சமரில் சுமார் 12 முதல் 16 பேர் வரை பங்கேற்றுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் உறுதிச் செய்யப்ப்ட்டுள்ளது. சந்தேக நபர்கள் வெளியே தெரியாதவாறு கறுப்புக் கண்ணாடிகளைக் கொண்ட இந்த பஸ் வண்டியில் இவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதலானது மிகத் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக சிறைச்சாலை பஸ்ஸில் பயணித்த ஐந்து கைதிகளும் ஸ்தலத்திலேயே உயிரிந்தனர். சமயங் எனப்படும் அருண தமித் உதயங்க பத்தினரன, சன்னக சலன திலக் மல்லிகாகே,கோரலகே அமில பிரசன்ன சம்பத், வாதுவ பத்திரணகே கெலும் பிரியங்கர, லிந்தமுலகே சுரங்க பிரசன்ன குமார ஆகியோர் அவ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
இதனைவிட பஸ் வண்டில் கைதுகளுக்கு பொறுப்பாக பயணித்த சிறைச்சாலை மேற்பார்வையாளர் எஸ். சன்னிகம் படுகாயமடைந்த நிலையில் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். எனினும் ஸ்தலத்திலேயே சிறைச்சாலை பாதுகாவலரான எஸ்.ஆர். விஜேரத்ன உயிரிழந்திருந்தார். இதனிடையே துப்பாக்கி சூடு காரணமாக படுகாயமடைந்த மேலும் 4 சிறைச்சாலை அதிகாரிகள் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் ஏனைய இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. இதில் ஒருவர் மேலதிக சிகிட்ச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் சுட்டிக்காட்டின. இந்த தாக்குதலுக்கு துப்பாக்கிதாரிகள் வருகைதந்ததாக நம்பப்படும் வெள்ளை நிற வேன் ஒன்று ஸ்தலத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் தககுதலுக்கு வந்ததாக நம்பப்படும் கெப் வாகனத்தையும் பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர். இந்த கெப் வண்டியானது கைவிடப்பட்டிருந்த நிலையில் பிறிதொரு இடத்திலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ள நிலையில், அதன் உரிமையாளர் கண்டறியப்பட்டு அதனூடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் போது கெப் வண்டியானது சொந்தக் காரரிடமிருந்து கொள்ளையிடப்பட்டது என்பது தெரியவந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன. சம்பவத்தையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த களுத்துறை பிரதான நீதிவான் விசாரணை முன்னெடுத்திருந்தார். சடலங்களை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிட்ட அவர் சந்தேக நபர்களை உடன் கைது செய்யுமாறும் அறிவுறுத்தினார். இந்த துப்பாக்கிப் பிரயோகத்துக்கு ரீ 56 ரக துப்பாக்கிகளும் 9 மில்லி மீற்றர் ரக துப்பாக்கிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
சிறைச்சாலை பஸ் வண்டியின் மீது தாக்குதல் நடத்திய 7 பேரின் உயிரைப் பறிந்த சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சமயங் குழுவுக்கு எதிரான பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் எனவும் பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவிக்கின்றார். இந் நிலையில் அவர்களை கைது செய்ய சிறப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் கால காலமாக நிலவிய பகையே இந்த துப்பககிச் சூட்டுக்கு காரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே விசாரணைகளின் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுக்கள் கொழும்பு, களுத்துறை, நுகேகொடை, அத்துருகிரிய ஆகிய பகுதிகளில் நேற்று இது தொடர்பில் சிறப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தனர். விஷேடமாக கொலைகாரர்கள் பாதையில் நின்றிருந்த இடங்கள், அவர்களுக்கு உதவியவர்கள், சிறைச்சாலை பஸ் வரும் பாதை தொடர்பில் விசாரணையில் கூடிய அவதானம் செலுத்தியுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளான சிறைச்சாலை பஸ் வண்டியானது களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு காரணமாக அந்த பஸ் வண்டியின் நாலா புறமும் துளைகள் விழுந்திருப்பதை அவதானிக்க முடிந்ததுடன் பஸ் வண்டி முழுவ்தும் இரத்தக் கறைகள் படிந்துள்ளன.
கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் திகதியும் இதே வழக்கு தொடர்பில் சமயங் கடுவலை நீதிமன்றுக்கு பொலிசாரால் அழைத்து வரப்பட்ட போது நீதிமன்ற வளாகத்தில் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டிருந்தது. இதில் அவர் படு காயமடைந்திருந்த நிலையில், அதன் பின்னர் வழக்கு விசாரணைக்கு அவரை அழைத்து வரும் போது கடும் பாதுகாப்பினை வழங்க கடுவலை நீதிமன்றம் உத்தர்விட்டிருந்தது. இப்படியான பின்னணியிலேயே நேற்றைய தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன் அவரும் அவருடன் இருந்த மேலும் நான்கு கைதிகள், சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெறுகின்றன.
