பிரபாகரனைப் போன்று பிரச்சினைகளை அணுக முடியாது...

தான் நினைத்தது மட்டும்தான் நடக்க வேண்டும் என்ற பிடிவாதம் அழிவுகளையும் இழப்புக்களையுமே ஏற்படுத்துமேயன்றி தீர்வுகளைப் பெற்றுத்தராது என்பதை அனுபவரீதியாக கண்டிருக்கிறோம். இப்போது தமிழ் சமூகம் கூட அதனைத் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளது எனக் கூறினார் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் விவகார மற்றும் தொழில் வாய்ப்பு இணைப்பாளருமான ஏ.எல்.தவம்.

நேற்று அக்கரைப்பற்று மீராநகரில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் கருத்துத் தெரிவித்தார். அவர் மேலும் கருத்துக் கூறுகையில்,

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னர், எந்த முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்பதிலும், எல்லை நிர்ணயம் தொடர்பான சிக்கல்களுக்கும் தீர்வுகள் காணப்பட வேண்டுமென, சிறுபான்மைக் கட்சிகள் மற்றும் சிறு கட்சிகள் கூட்டாகச் சேர்ந்து கோரிக்கைகளை வைத்திருக்கின்றன. குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மேல் மாகாண மக்கள் முன்னணி என்பவற்றோடு இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் இக்கோரிக்கைகளுக்கு தனது சாதகமான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியிருக்கிறார். அதனால் இன்று வரை இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பிற்போடப்பட்டுள்ளது. இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளமை பிரச்சினைக்குரிய தீர்வாகாது. மொத்தமாக அரசாங்கம் இவ்வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெற்று, எல்லை நிர்ணயத்திலுள்ள சிக்கல்கள் மற்றும் குளறுபடிகளுக்குத் தீர்வு கண்டால் மட்டுமே அது நிரந்தரத் தீர்வாக அமையும். இந்த நிரந்தரத் தீர்வைப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்தீர்வினை அடைவதில் முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமல்ல ஏனைய சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளும் வெவ்வேறு வழிகளிலும் தமது முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதற்காக உடனடியாக தீர்வு கிடைத்துவிட வேண்டுமெனவும், தாம் விரும்பிய தீர்வு மட்டுமே கிடைக்க வேண்டுமெனவும் ஒற்றைக்காலில் நிற்க முடியாது. ஜனநாயகத்தில் நெகிழ்வுத் தன்மையற்ற அரசியல் எப்போதும் தோல்வியையே சந்திப்பதுண்டு.

அதற்கு பிரபாகரனுடையே நிலைப்பாடே மிகச்சிறந்த உதாரணம். தான் நினைத்தது மட்டும்தான் நடக்க வேண்டும் என்ற அவருடைய பிடிவாதம் அழிவுகளையும் இழப்புக்களையுமே ஏற்படுத்தியது. மாறாக, தீர்வினைப் பெற்றுத்தரவில்லை. இப்போது தமிழ் சமூகம் கூட அதனைத் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளது. அந்தவகையில், றஊப் ஹக்கீமும் இன்னொரு பிரபாகரனாக மாற முடியாது என்பதை எல்லோருமே புரிந்து கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -