எஸ்.ஹமீத்-
2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் திகதியன்று, ஊடகவியலாளர் பிரகித் எகனலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பான வழக்கு ஹோமாகம நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் முலம், கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சாட்டி ஹோமாகம மாஜிஸ்ட்ரேட் நீதிபதி ரங்க திசநாயக்க புகாரொன்றை சமர்பித்திருந்தார். இதன் விளைவாக சட்ட மா அதிபரினால் ஞானசார தேரருக்கு எதிராக இன்று மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்ட பின்னர் தான் நிரபராதி என்று ஞானசார தேரர் நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து, விசாரணை எதிர்வரும் மே மாதம் 16-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த ஞானசார தேரர், இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் எந்தக் காரணமின்றி விளக்க மறியலில் வைக்கப்பட்டதை எதிர்த்தே தான் அன்று நீதிமன்றம் முன் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், நீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கம் தமக்கு இருக்கவில்லையென்றும் தெரிவித்தார்.
