4500 பட்டதாரிகளுக்கும் மிக விரைவில் தீர்வு கிடைக்கும் - ஆளுநர் சந்திப்பில் தெரிவிப்பு

அபு அலா -
கிழக்கு மாகாணத்தில் 2012 ஆம் ஆண்டு முதல் 2016 ஆண்டு வரையான காலப்பகுதியில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்துவிட்டு 4,500 பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்றி கஷ்டப்பட்டு வரும் பட்டதாரிகளின் ஒன்றியத்துக்கும் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்ணான்டோவுக்கும் இடையிலான சந்திப்பில் குறித்த பட்டதாரிகள் தொடர்பில் பல்வேறு தீர்மானங்களை மேற்கொண்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் இன்று (26) தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பு நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாகவும், இதில் கிழக்கு மாகாண பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட 45 பேர் இதில் பங்கேற்று தங்களின் பிரச்சினைகளை கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்ணான்டோவிடம் முன்வைத்தனர்.

இதில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.எல்.டி.எம். அசங்க அபேயவர்த்தன, மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.நிசாம் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

பட்டதாரிகளுக்கு நியாயமானதாகவும் நிரந்தரமானாதான தீர்வொன்றை பெற்றுக் கொடுப்பதற்கான சகல வழிவகைகளையும் இச்சந்திப்பின்போது ஆராயப்பட்டதாகவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

தங்களின் பட்டங்களை நிறைவு செய்து வெளியாகின்ற பட்டதாரிகளுக்கு உரிய வருடத்தில் அவர்களுக்குரிய நியமனங்களை வழங்கியிருந்தால் இவ்வாறான பிரச்சினைகள் இன்று எமக்கு ஏற்பட்டிரிக்காது. அது மாத்திரமல்லாமல் தற்போது பட்டதாரிகளை உள்ளீர்த்தல் பொறிமுறையில் ஏற்பட்டுள்ள 40 வயதாகவுள்ள வயதெல்லையை 45 வயதுவரை மாற்றம் செய்ய வேண்டிய பிரச்சினைகளும் ஏற்பட்டிரிக்காது என்பது தொடர்பான விடயங்களையும் சுகாதார அமைச்சர் நஸிரினால் ஆளுனரிடம் சுட்டிக்காட்டியதாகவும் கூறினார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் காணப்படுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களுக்கு இந்த பட்டதாரிகளை உள்ளீர்த்துக் கொள்வதன் மூலம் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் இதேவேளை இந்த வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கும் ஒரு முற்றுப்புள்ளியையும் வைக்கலாம் என்றும் அதற்கான செயற்பாட்டை மிக விரைவில் முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்தையும் ஆளுனரிடம் தான் சுட்டிக்காட்டி பேசியதாகவும் கூறினார்.

தங்களுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்காவிட்டாலும் கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற வேறு ஏதாவது பதவிகளுக்கான நியமனங்களை தங்களுக்கு வழங்குமாறு கிழக்கு மாகாணப் பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் எம்.ஜெஸீர் இதன்போது சுட்டிக்காட்டி இயிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதற்கான சகல நடவடிக்கைகளையும் தான் முன்னடுத்து மிக விரைவில் இதற்கான தீர்வினை வழங்கி வைக்கவுள்ளதாகவும் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்ணான்டோ இதன்போது தெரிவித்திருந்தாகவும் குறிப்பிட்டார்.

இதேளை, 2012-2016 ஆண்டு காலப்பகுதியில் பட்டங்களை நிறைவு செய்துவிட்டு இரிக்கின்ற சகல பட்டதாரிகளின் முழு விபரங்களை அடங்கிய தகவல்களை 2 வார காலப்பகுதியில் தனக்கு ஒப்படைக்குமாறு கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.நிசாம் கிழக்கு மாகாணப் பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் எம்.ஜெஸீருக்கு பணிப்புரை விடுத்தார்.

மேலும் 3 பேர் கொண்ட குழுவிரை 3 மாவட்டங்களுக்கும் நியமித்து குறித்த மாவட்டங்களில் காணப்படுகின்ற சகல பட்டதாரிகளின் தகவல்களை ஒருவர் கூட விடுபடாமல் தனக்கு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -