ஜுனைட்.எம்.பஹ்த்-
கடந்த 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் காலவரையறையற்ற சத்தியக்கிரக போராட்டம் 05 ஆவது நாளாக இன்றும் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் தொடர்கிறது.
கிழக்கு மாகாணத்தில் 31.03.2012 இற்கு பின்னர் பட்டம் பெற்ற 4500 இற்கு மேற்பட்ட பட்டதாரிகள் வேலை வாய்ப்பின்றி உள்ளபோதும் இவர்களுக்கான எந்த ஒரு தீர்வையும் மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்கள் பெற்றுத்தராத நிலையில் இந்த காலவரையறையற்ற சத்தியக்கிரக போராட்டத்தை நடாத்த வேண்டிய சூழ்நிலைக்கு பட்டதாரிகள் தள்ளப்பட்டுள்ளதாக அப் பட்டதாரிகள் தெறிவிக்கின்றனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள பட்டதாரிகள் பல கோரிக்கையை முன்வைத்து இப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
பட்டதாரிகளின் திறமைகளை ஒரு குறிப்பிட்ட போட்டிப் பரீட்சை மூலம் அறிந்துகொள்ள முடியாது.ஆகையால் நேர்முகப் பரீட்சைகள் மூலம் பட்டதாரி நியமனங்கள் பயிற்சி அடிப்படையிலேனும் வழங்கபட வேண்டும். இதற்குரிய நிதியை நிதி அமைச்சு ஒதுக்க வேண்டும்.
பட்டதாரி நியமனங்கள் அவர்கள் பட்டம் பெற்ற ஆண்டின் அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுப்பதுடன் பட்டதாரிகளை நியமனத்திற்கு உள்ளீர்க்கும் வயதெல்லை 45 ஆக அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பட்டதாரி நியமனங்களுக்கு விண்ணப்பம் கோரப்படுகையில் ஏற்கனவே அரச சேவையில் இருப்பவர்கள் விண்ணப்பிக்காதவாறு சுற்று நிருபம் அமைய வேண்டும்.
கோட்டா முறையில் நியமனங்கள் வழங்கப்படும் செயற்பாடுகள் முற்றிலும் தடை செய்யப்படல் வேண்டும்.
இறுதியாக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட ஆசிரியர் ஆளணி சுற்று நிருபத்தின் (சுற்று நிருப இலக்கம் 01/2016) அடிப்படையில் தயாரிக்கப்பட்டு முகாமைத்துவ சேவைத் திணைக்களத்தின் அனுமதி பெறப்பட்டு கிழக்கு மாகாண ஆசிரியர் வெற்றிடத்தை வெளியிட வேண்டும் அத்துடன் அதற்குரிய நிதி ஒதுக்கீட்டினை மேற்கொள்ள வேண்டும்.
விண்ணப்பம் கோரப்படுகின்ற போது மாற்றுத்திறனாளிகளை விசேட கவனத்திற் கொள்ள வேண்டும்.
பட்டதாரிகளுடைய பிரச்சினைக்கு ஒரு தீர்வினைப் பெற்றுத்தராதவாறு வேடிக்கை பார்த்துக் கொண்டு அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் செயற்படுவது எமக்கு மிகுந்த வேதனையளிக்கிறது.
போன்ற மேற்படி கோரிக்கையை பட்டதாரிகளின் பிரச்சினையாக மட்டும் கருத்தில் கொள்ளாமல் ஒரு சமூகத்தின் பிரச்சனையாக கொண்டு மிக விரைவாக தீர்வினை பெற்றுத்தருமாறு மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


