அளுத்கமையில் நடந்த சம்பவம் எம்மை மீறி நடந்த ஒரு செயல். இது குறித்து நாம் வருத்தமடைகிறோம். இனிவரும் காலங்களில் இப்படியான சம்பவங்கள் முஸ்லிம்களுக்கெதிராக நடப்பதற்கு ஒரு போதும் இடமளிக்கமாட்டோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதி தெரிவித்திருக்கிறார் என முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.
பொரளை என்.எம். பெரேரா மத்திய நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
27ஆம் திகதி வெள்ளியன்று நுகேகொடையில் நடைபெறவுள்ள மக்கள் பேரணி தொடர்பாக விளக்கமளிப்பதற்காக நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டிலே இவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் பெரும்பான்மை மக்களுக்கும் மிகவும் கசப்பாக மாறியுள்ள நல்லாட்சி என்னும் இந்தப் பொல்லாட்சியைத் தூர வீசி எறிவதற்கு முஸ்லிம்களும் தங்களுடைய பங்களிப்பை அளிப்பதற்கென இன்று (27)வெள்ளிக்கிழமை நுகேகொடையில் மக்கள் பேரணியில் கலந்து கொள்ளவிருக்கின்றனர். நாட்டின் நாலா புறங்களிலிருந்தும் வடக்கில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மன்னார்,கிளிநொச்சி, வவுனியா போன்ற பகுதிகளிலிருந்து தமிழ் அன்பர்களும் கிழக்கு மாகாணம் மற்றும் ஏனைய இடங்களிலிருந்து முஸ்லிம்களும் இதில் சமூகமளிக்கவிருக்கின்றனர். எனவே 27ஆம் திகதிக்குப் பிறகு இந்தப் பொல்லாட்சியை எல்லா சமயத்தவருக்கும் எதிரான இந்த ஆட்சியை, எல்லாப் பொதுமக்களும் வெறுக்கின்ற இந்த ஆட்சியை, தூர வீசி எறிவதற்கு அனைத்து முஸ்லிம்களும் தங்களது பூரண ஆதரவை வழங்க வேண்டுமென்று முஸ்லிம் முற்போக்கு முன்னணி சார்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்.
சென்ற பொதுத்தேர்தல்களின் போது முஸ்லிம்களுக்கு பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து உண்மைக்குப் புறம்பான விடயங்களைக் கூறித்தான் இந்த மைத்திரி - ரணில் அரசு பதவிக்கு வந்தது. எனினும் எமக்கு இது போதும் போதும் என்றாகிவிட்டது, முஸ்லிம்களின் உடைமைகளைப் பாதுகாப்பதற்கு, முஸ்லிம்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இந்த அரசாங்கம் முன் வருகுது இல்லை. எவ்வளவு கூறினாலும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலதான் இது இருக்கின்றது என்று இன்று அரசாங்கத்தில் உள்ளவர்களே சொல்லுகிறார்கள்.
எனவே இதற்கு ஒரே ஒரு தீர்வுதான் அரசாங்கத்தை அரசிலிருந்து விரட்டுவது. அதற்குரிய ஆரம்ப நடவடிக்கையாகத்தான் இன்று(27) வெள்ளிக்கிழமை இந்த மாபெரும் பேரணி நடத்தப்படுகின்றது. இன்று முஸ்லிம் அனைவர் மத்தியிலும் மஹிந்த ராஜபக்ஷவைத்தான் மீண்டும் கொண்டு வாருங்கள் என்ற கோஷம் நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பரவலாக எழுந்து எதிரொலிக்கின்றது.
அளுக்கமையில் நடந்த சம்பவங்கள் சம்பந்தமாக சமூக ஊடகங்கள் வாயிலாக ஒரு விசமத்தனமான செய்தி நான் கூறியதாகப் பரப்பப்பட்டு வருகின்றது. அளுத்கமை சம்பவத்தின் குற்றத்தை மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோதாபய ராஜபக்ஷ ஒப்புக்கொண்டுள்ளதாக நான் ஊடக சந்திப்பில் தெரிவித்தாக ஒரு புரளியைக் சொல்லுகிறார்கள். இது உண்மைக்குப் புறம்பானது.
மஹிந்த ராஜபக்ஷ நேரடியாகச் சொல்லியிருக்கின்றார், இது எங்களை மீறி நடந்த செயல். அதைப்பற்றி நாங்கள் வருத்தமடைகின்றோம். இனி வரும் காலங்களில் அப்படியான விடயங்கள் முஸ்லிம்களுக்கு நடைபெறுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று கூறியிருக்கின்றார் என்றுதான் அந்த ஊடக சந்திப்பில் நான் கூறினேன்.
கோத்தாபய ராஜபக்ஷ பேருவளையில் முஸ்லிம்கள் மத்தியிலே நடந்த கூட்டத்திலும், மேல் மாகாண உறுப்பினர் சபாஉல்லாவுடைய வீட்டில் நடந்த நிகழ்வில் மற்றும் நீர் கொழும்பு கூட்டத்திலும் இதனைத் தெளிவாகச் சொல்லியுள்ளார் .
அளுத்கமையைத் தாக்கி அழித்தவர்களின் பின்னணிலே நின்று அதனை செயற்படுத்தியவர்தான் அமைச்சர் சம்பிக ரணவக்க. அவர் இந்த ஆட்சியிலே அமர்ந்து கொண்டு தாலாட்டப்பட்டுக் கொண்டு இருக்கின்றார். மந்திரி சபையிலே பொதுபலசேனாவை தடை செய்ய வேண்டும் என்று நான் கூறிய போது, அதற்கு எதிராக குரல் எழுப்பி மகா சங்கங்களும் ஏனையவர்களும், பாதையிலே இறங்குவார்கள் என்று கூறினார். இதன் போது அமைச்சர் ராஜிதவும் அவரோடு இணைந்து பேசினார். ஆனால் இன்று நிலைமை மாறி ராஜித நல்லதாகப் பேசுவதை எண்ணி நாம் மகிழ்ச்சியடைகின்றோம். அது முஸ்லிம் வாக்குகளுக்கு மாத்திரமா? அல்லாவிட்டால் அன்று நீங்களும் பொது பலசேனாவை தடை செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி கூறிய போது அதற்கு எதிராக ஏன் நின்றீர்கள்? என்று இன்று முஸ்லிம் சமுதாயம் கேட்கின்றது - என்றும் தெரிவித்தார்.
