காணாமல் போன மீனவர்களின் நிலை தொடர்பில் அமைச்சர் ஹக்கீமின் விளக்கம்..!

டந்த டிசம்பர் 24ம் திகதி இரண்டு இயந்திரப் படகுகளில் ஆழ் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று காணாமல் போயுள்ள கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் பற்றி பலவாறான தகவல்கள் வெளிவந்த வண்ணமுள்ளன. படகுகள் இரண்டும் அவற்றில் பயணித்த 6 மீனவர்களும் மாலை தீவு கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர் என்ற ஆதாரபூர்வமற்றதும், ஊர்ஜிதமற்றதுமான செய்தியொன்றும் பரப்பப்பட்டுள்ளது. 

ஆனால் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டிஆராய்ச்சியுடனும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர சீ விஜேகுணரத்தினவுடனும் இது நடந்த தினத்திலிருந்து தொடர்ச்சியாக தொடர்பிலிருந்து வரும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வௌளிக்கிழமை (6) காலையும் அவர்களைத் தொடர்பு கொண்டு கதைத்தார். 

அத்துடன், மாலைத்தீவு குடியரசில் உள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் டபிள்யு. ஜி.என்.எச். டயஸ் மற்றும் இங்குள்ள மாலைதீவு உயர்ஸ்தானிகர் திருமதி. ஸாஹியா ஸரீப் ஆகியோருடனும் அமைச்சர் ஹக்கீம் கதைத்துள்ளார். 

அமைச்சர் ஹக்கீமிடம் அவர்கள் தெரிவித்துள்ள தகவல்களின்படி, மாலைதீவு கடற்படையினரால் ஒரு படகொன்றில் அதில் பயணித்த மீனவர்கள் இருவர் மட்டுமே மீட்கப்பட்டு தற்போது மாலைத்தீவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர். மற்றைய படகும் அதில் பயணித்த மீனவர்கள் நாள்வரும் வௌளிக்கிழமை முற்பகல் வரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆயினும் மாலைத்தீவு, இலங்கை ஆகியவற்றின் கடற்படையினரும், விமானப்படையினரும் தொடர்ச்சியாக தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 

ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளை ஏற்று இலங்கை, மாலைத்தீவு, தேடுதல் ஏற்பாடுகளுக்கு மேலதிகமாக, இந்திய கடற்படையினரையும், விமானப்படையினரையும் அவர்களின் கடற்பரப்பிலும் தேடுதல்களை நடாத்த பாதுகாப்பு செயலாளரும் கடற்படை தளபதியும் முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். 

கடற்படை தளபதி அமைச்சர் ஹக்கீமுக்கு ​வழங்கியுள்ள தகவலின்படி இம்மீனவர்கள் உரிய தகவல் தொடர்பு சாதனங்கள் இன்றி ஆழ்கடலுக்கு சென்றதனாலேயே பிரச்சினை உருவாகியுள்ளது. இலங்கை, மாலைத்தீவு கடற்பரப்புகளிலும் அதற்கு அப்பாலும் பயணித்துக்கொண்டிருக்கின்ற கப்பல்கள், வான் எல்லையில் பறந்துகொண்டிருக்கும் விமானங்கள் என்பனவற்றுக்கு இது சம்பந்தமான அவசர (SOS) கட்டளையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத் துறை பிரதியமைச்சரும்​ கல்முனைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸை உடனடியாக மாலைத்தீவுக்கு புறப்பட்டுச் செல்லுமாறு அமைச்சர் ஹக்கீம் பணித்துள்ளதுடன் மீனவர்களின் படகை இலங்கைக்கு எடுத்து வருவதற்காக சிலாபத்தைச் சேர்ந்த மாலைத்தீவு - இலங்கை கடற்பாதையில் நன்கு அனுபவம் மிக்க மாலுமி ஒருவரும் அமைச்சர் ஹரீசுடன் அங்கு பயணிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் தேடிக் கண்டு பிடித்து தருமாறு தொடர்ச்சியாகவே காணாமற் போயுள்ள மீனவர்களின் குடும்பத்தினர் நேரடியாகவும் அமைச்சர் ஹரீஸ் ஊடாகவும் ரவூப் ஹக்கீமிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். மாலைத்தீவிலுள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகரின் அபிப்பிராயப்படி ஆழ்கடலில் படகு கண்டுபிடிக்கப்பட்டால் அதனைத் துரிதமாக கரைக்கு கொண்டு வருவது இலகுவானதாக இருக்காது என்றும் முடிந்தவரை மீனவர்களை மீட்டுத் தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 

இந்த மீனவர்கள் காணாமல் போய் ஏறத்தாழ 2 வாரங்களை அண்டிய நிலையில், முழுமையான தேடுதல் முயற்சியில் பல்வேறு தரப்பினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளபடியால் அவர்களை பாதுகாப்பாக மீட்டெடுப்பது இயலுமாகுமென அமைச்சர் ரவூப் ஹக்கீம் நம்பிக்கை தெரிவித்தார். 

கல்முனை கடற்கரையில் இருந்து இந்த மீனவர் ஆறுபேரும் கடந்த மாதம் 24 ஆம் திகதி 0019 சீஎச்டபிள்யு மற்றும் 00139 பிசீஓ ஆகிய பதிவிலக்கங்களை கொண்ட இயந்திரப் படகுகளில் புறப்பட்டுச் சென்ற பின்னர் இறுதியாக கடந்த 26ஆம் திகதி அன்று கடலில் இருந்து தொடர்பை ஏற்படுத்தியிருந்தனர் என்றுதெரிவித்த அமைச்சர் ஹக்கீம், முன்னதாக தாம் இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபன தலைவர் அமரானந்த அபேகுசேகர மற்றும் இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபன கல்முனை பிரதிப் பணிப்பாளர் ஆகியோருக்கும் இதுபற்றிய ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எழுத்து மூலம் அறிவித்ததாகவும் கூறினார். அத்துடன், தமது இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூரை இந்த விடயத்தை உரிய முறையில் கையாள்வது தொடர்பில் அவர் அறிவுறுத்தியிருந்ததாகவும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -