பாறுக் ஷிஹான்-
தமிழ்-முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த மத்திய அரசு வரத்தேவையில்லை. வடக்கு மாகாண சபை நினைத்தால் ஒரு மணித்தியாலத்திற்குள் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும். முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடன் வாழ்வதற்கான சூழலை வடக்கு மாகாண சபையால் ஏற்படுத்த முடியும் என வடக்கு மாகாண சபையில் முஸ்லிம் மக்களை பிரதிநித்துவப்படுத்தும் உறுப்பினர் ஜவாஹிர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையில் எழுபதாவது அமர்வு நேற்றைய தினம்(20) நடைபெற்றது. இதன் போது முதலமைச்சர் அமைச்சின் வரவு செலவு திட்டத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் உரையாற்றும் போதே அவர் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று வருடங்களில் தமிழ்- முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கு வடக்கு மாகாண சபை என்ன நடவடிக்கை எடுத்தது?
வடக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் சபையின் ஆரம்ப காலங்களில் சிறந்த முறையில் ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டியிருந்தார். எனினும் தற்போது ஆளுங்கட்சியின் தவறுகளை மூடி மறைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார். இது எமக்கு ஆச்சரியமாக உள்ளது. எனினும் தவறுகளை நேரடியாக சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சிக்கு உண்டு. முன்னாள் புகழ்ந்துவிட்டு பின்னால் இகழ்வது அல்ல எதிர்க்கட்சியின் பொறுப்பு.
இந்த நிலையில் வடக்கு மாகாண சபை முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் துரிதமான நடவடிக்கைளை எடுக்கவில்லை. கடந்த கால கசப்பான சம்பவங்களை பற்றி கதைத்து கொண்டிராது. அவற்றை மறப்பதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும். தமிழ் – முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த தற்போது ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதனை நாம் சரிவர பயன்படுத்த வேண்டும்.
தமிழ் – முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமையா ஏற்படுத்த யாரும் இடையில் வர தேவையில்லை. அதனை நாமே ஏற்படுத்தலாம். வடக்கில் காணி அற்ற மக்களுக்கு காணிகளை வழங்க வடக்கு மாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டும். வடக்கில் இராணுவம் மேற்கொள்ளும் காணி அபகரிப்புக்கு எதிராக நாங்களும் உங்களுடன் சேர்ந்து போராடுவோம். முஸ்லிம் மக்கள் மீள்குடியேறுவதற்கான வசதிகளை செய்து கொடுங்கள்.
முல்லைத்தீவு உட்பட ஏனைய மாவட்டங்களில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு காணிகள் இருக்கின்ற போதிலும் அவர்களுக்கு சட்டரீதியான ஆவணங்கள் இன்மையால் வீட்டு திட்டம் உட்பட பல அடிப்படை வசதிகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. முஸ்லிம் மக்களின் மனங்களில் உள்ள கசப்பான சம்பவங்களை நீக்கி தமிழ் மக்களுடன் ஒற்றுமையாக செயற்பட வைப்பதற்கான சந்தர்ப்பம் தற்போது உருவாகியுள்ளது. அதனை வடக்கு மாகாண சபை சரிவர பயன்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
