க.கிஷாந்தன்-
புலம் பெயர் தொழிலாளர்கள் என்று பேசும் போது நாம் அனேகமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டு பணிப்பெண்களாக செல்பவர்களை பற்றி மட்டுமே சிந்திகின்றோம்.
ஆனால் மத்திய கிழக்கு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, கொரியா உட்பட பல நாடுகளில் இலட்சக்கணக்கான ஆண்களும், பெண்களும் கட்டிடத்தொழில், நோயாளர்களை பராமரித்தல், மருத்துவ தாதிகள் என பல்வேறுப்பட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு வருடத்தில் மட்டும் அவர்கள் சுமார் 6 பில்லியன் டொலர் பணத்தை நமது நாட்டுக்கு அனுப்புகிறார்கள்.
அவர்கள் தங்கள் குடும்பங்களுக்காக மட்டுமே உழைக்கிறார்கள் என நாம் நினைக்கிறோம். ஆனால் அவர்கள் தமது நாட்டுக்கு அனுப்பும் பணம் நாட்டின் அபிவிருத்திக்கு பயன்படுகிறது. குறிப்பாக கல்வி, சுகாதாரம் உட்பட அனைத்து அபிவிருத்தி விடயத்திற்கும் அவர்கள் அனுப்பும் பணம் பங்களிப்பு செய்கிறது.
சுமார் 20 இலட்சம் பேர் இப்படி வெளிநாட்டில் தொழில் வாய்ப்பை பெற்றிருக்கின்றனர்.
இவ்வளவு வேலை வாய்ப்பை உள்ளுரில் நாம் எற்படுத்தி கொடுக்க முடியூமா? இவர்கள் வெளிநாடு செல்லாமல் இங்கே இருந்தால் நமது நாட்டில் வேலையில்லாத பிரச்சனை பாரதூரமாக இருக்கும்.
இவர்கள் வெளிநாடு சென்றதால் தான் எங்களுக்கும் எங்கள் பிள்ளைகளுக்கும் ஏதோ ஒரு வகையில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த பின்னனியில் அவர்கள் சொல்லொன்னா கஷ்டங்களுக்கு மத்தியில் நாட்டின் அபிவிருத்திக்கு மற்ற எந்த துறையில் இருப்பவர்களை விட பங்களிப்பு செய்கிறார்கள் என்பதினை யாரும் சிந்திப்பதில்லை.
ஆனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு அவர்கள் செய்யும் பங்களிப்பை நாம் அங்கிகரித்து கௌரவிப்பதில்லை. இதே வேளையில் அவர்கள் எந்ந வெளிநாட்டில் வேலை செய்கிறார்களோ அந்த வெளிநாட்டின் அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பை செய்கிறார்கள்.
அவர்களுடைய பங்களிப்பு இல்லாவிட்டால் அந்த நாடுகளின் அபிவிருத்திக்கு பாதிப்பு ஏற்டும். ஆனால் அந்த நாடுகளும் புலம் பெயர் தொழிலாளரை அபிவிருத்தி பங்காளராக அங்கீகரித்து கௌரவிப்பதில்லை. மதிக்கப்படுவதுமில்லை.
இந்த பின்னனியில் புலம் பெயர் தொழிலாளர்கள் இனி “புலம்பெயர்” அபிவிருத்திப் பங்காளர்” என்றே அழைக்கப்பட வேண்டும் என பிரிடோ நிறுவனம் தீர்மானித்துள்ளதுடன் இந்த கருத்தை சமூகத்திலும், அரசு மட்டத்திலும் வலியுறுத்த பரிந்துரைகளை மேற்கொள்ளவும் தீர்மானித்துள்ளதாக இவர் தெரிவித்தார்.
