இலங்கையில் கடந்த எந்த அரசாங்கமும் செய்யாத இன நல்லிணக்க வேலைத்திட்டத்தினை நல்லாட்சி அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களாக செய்து வருகின்றது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க மட்டக்களப்பில் வைத்து தெரிவித்தார்.
மாணவர்களின் தேசிய நல்லிணக்க செயற்திட்டமான 'சகோதர பாசல' எனும் செயற்திட்ட முகாம் மட்டக்களப்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற போது அதன் நிறைவு வைபவத்தில் கலந்துரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மட்டக்களப்பு சத்துருக் கொண்டான் சர்வோதய நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் தொடர்ந்துரையாற்றிய அவர்,
தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடையே நல்லிணக்கம் இல்லாததன் காரணம் தான் கடந்த முப்பது வருட யுத்தமாகும் என்பதை நாம் அடையாளம் கண்டோம். யுத்தத்திற்கு முகம் கொடுத்தவர் அந்த பிரச்சினைகளுடன் வாழ்ந்தவர் என்ற வகையில் பல் வேறு சவால்களுக்கு முகம் கொடுத்தவர் என்ற ரீதியில் இந்த இன ரீதியான பிரச்சினைக்கான காரணத்தை அறிந்து அதற்கு தீர்வு காணவேண்டுமென நினைத்தேன்.
இலங்கை சுதந்திர மடைந்தது முதல் எனக்கு தெரிந்த வகையில் இலங்கையில் ஆட்சி செய்த ஒரு அரசாங்கமும் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை செய்யவில்லை. ஆனால் தற்போதைய அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களாக இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வேலைகளை செய்வது போன்று தெரிகின்றது.
நீங்கள் என்னிடம், 11 வருடங்கள் நீங்கள் ஜனாதிபதியாக இருந்தீர்கள் தானே நீங்கள் என்ன செய்தீர்கள் என கேட்கலாம்.
நான் அதிகாரத்திற்கு வந்தவுடனயே நான் சமாதனத்திற்கான வேலைத்திட்டத்தினையும் நல்லிணக்கத்திற்கான கருத்தினையும் பேசினேன் அப்போது சில சிரேஷ்ட அமைச்சர்கள் அவ்வாறு இன நல்லிணக்கத்தைப்பற்றி பேச வேண்டாம் உங்களுக்கு வாக்கு குறைந்து விடும் என்று கூறினார்கள். ஆனால் நான் வடக்கிலிருந்து தெற்கு, கிழக்கிலிருந்து மேற்கு வரைக்கும் இன நல்லிணக்கத்தையும் சமாதனாத்தையுமே பேசினேன். மக்கள் எனக்கு அதன் மூலம் பெருமலவிளாள ஆதரவினை தந்தார்கள்.
சமாதானம் சம்பந்தமான கருத்தினை இலங்கை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்ற கருத்து பொய் என்பதை எனக்கு கிடைத்த வாக்குகளை வைத்து நான் நிரூபித்தேன்.
சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் எனக்கு அதிகமாக வாக்களித்தார்கள். வடக்கில் அன்றைய சூழ் நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வாக்களிப்பதை தடுத்திருந்தார். எனினும் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் முஸ்லிம் மக்கள் 85 வீதம் எனக்கு வாக்களித்தார்கள்.
எனது அரசாங்கம் 1994 ஆம் ஆண்டு ஆட்சியமைத்த பிறகு வெண்தாமரை எனும் இயக்கத்தை ஆரம்பித்து நான் சமாதானம் நல்லிணக்க வேலைத்திட்டத்தினை மேற் கொண்டதுடன் பல் வேறு சமாதான செயற்திட்டங்களையும் மேற் கொண்டேன்.
அப்போது விடுதலைப்புலிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம். என்றாலும் அவர்கள் கேட்கவில்லை. இருந்தாலும் தமிழ் மக்கள் மத்தியில் மாற்றத்தினை கொண்டு வரவேண்டுமென நான் முயற்சி செய்து அதற்கான நடவடிக்கை எடுத்த போது அதற்கு பயந்து என்னை கொலை செய்ய புலிகள் எத்தனித்தார்கள். சில இன வாதிகளும் என்னை விமர்சித்தார்கள்.
சமாதானம் மற்றும் நல்லினக்கத்துக்காக அன்றும் சிலர் உழைத்தார்கள், உழைப்பவர்கள் சிலர் இன்றும் இருக்கின்றார்கள். தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் இந்த நல்லிணக்க செயற்பாட்டை மேற் கொள்வதில் அக்கறையோடு செயற்படுகின்றனர். இந்த அரசாங்கத்தை கொண்டு வருவதற்கு நான் கணிசமான பங்களிப்பு செய்தவள் என்ற வகையில் பல்வேறு பதவிகளையும் எனக்கு தருவதற்கு முன்வந்தார்கள்.
ஆனால் அவைகளை நான் பொறுப்பெடுக்கவில்லை. எனினும் இந்த நாட்டில் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்காக நல்லிணக்கம் தொடர்பான ஒரு பொறுப்பை எடுத்தேன். அந்த வகையில் தேசிய நல்லிணக்க செயலகத்தின் மூலம் இந்த நல்லிணக்க வேலைத்திட்டங்களை மேற் கொண்டு வருகின்றோம். இன்று ஜனாதிபதியும் பிரத மந்திரியும் பொதுவான அடிப்படையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென ஒரே நோக்கத்தின் அடிப்படையில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
ஒருவர் இன்னொருவருக்கு உதவி செய்து கொண்டு பொதுவான சிந்தனை அடிப்படையில் நாட்டைக் கொண்டு செல்கின்றார்கள். விஷேடமாக நல்லிணக்கம் என்ற ரீதியில் இவ்விருவரும் ஒரே கருத்துடன் இந்த நாட்டை ஆட்சி செய்கின்றார்கள். எதிர் காலத்தில் இவ்வாறான மாணவர்களின் மூலம் இந்த நாட்டில் இளம் பராயத்திலிருந்தே நல்லிணக்கம், புரிந்துணர்வு என்பவற்றை ஏற்படுத்துவதற்கு இவ்வாறான நல்லிணக்க செயற்திட்டங்கள் வெற்றியளிக்கும் என நம்புகின்றேன்.
எமது நாடு சிறிய நாடாக இருந்த போதும் மிகப்பெரிய வரலாற்றினைக் கொண்ட நாடு நாகரீகம் வளர்ந்த நாடு 2000 வருடங்கள் தொடர்பான நாகரீக வரலாற்றினை கொண்ட நாடாகும். அந்த 2000 வருடங்கள் சிங்களம் பௌத்தம் என்று சொன்னாலும் சிங்கள பௌத்த கலாசாரத்திற்கு உயிரோட்டம் கொடுப்பவர்களாக அல்லது அதை போசிப்பதற்கு தமிழ் முஸ்லிம் பறங்கியர்கள் போன்ற மூவின மக்களும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள்.
இப்போது இந்த நாட்டில் நூற்றுக்கு இருபது வீதமான சிறுவர்கள் சரியான உணவு இல்லாமல் மந்த போசனைக்குட்பட்ட சிறுவர்களாக இருக்கின்றனர். அரச நிர்வாக சீர்கேடு காரணமாக 97 வீதமான மாணவர்கள் சாதாரண தரம் வகுப்புவரை முழுமையாக நிறைவு செய்வதில்லை. நிதி ஒழுங்காக வழங்காததாலும் கொள்கைகள் இல்லாததாலும் முட்டாள் கல்வியமைச்சர்களும் நியமிக்கப்பட்டதாலும் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
இதனை நிவர்த்தி செய்வதற்கு நமது நாட்டின் பொருளாதாரம் நிவர்த்தி செய்யப்படல் வேண்டும். அதை நாங்கள் நிவர்த்தி செய்ய வேண்டுமாக இருந்தால் இனங்களுக்கிடையில் நல்லுறவும் நல்லிணக்கமும் புரிந்துணர்வும் ஏற்பட வேண்டும். இன்றும் நமது நாட்டில் நல்லிணக்கம் என்ற மழை தூறல்கள் கூட இல்லை. எனவே எதிர் காலத்தில் நமது நாட்டில் நல்லிணக்கம் என்ற மழை பெய்ய வேண்டும் அதன் மூலம் நாட்டில் இன நல்லுறவும் சமாதானமும் ஐக்கியமும் ஏற்பட வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்று பட்டு உழைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். நன்றி விடிவெள்ளி.
