சட்டத்துக்கு முரணான வகையிலேயே இறக்காமம் பிரதேசத்தில் நேற்று (29) புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டதாக தமண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிமல் சந்திரசிறி தெரிவித்தார்.
இதேவேளை, மேற்படி சிலையினை குறித்த இடத்தில் வைப்பதைத் தடுக்கும் நீதிமன்ற உத்தரவொன்றை, சிலையினை அங்கு நிறுவிய பௌத்த மதகுருமாரிடம், நேற்றைய தினம் தான் ஒப்படைத்ததாகவும் அவர் கூறினார்.
இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு பகுதியில், நேற்றைய தினம் புத்தர் சிலையொன்று புதிதாக நிறுவப்பட்டது. இந்நிலையில், அந்த இடத்துக்குச் சென்ற தமண பொலிஸார், குறித்த சிலையினை அங்கு நிறுவக்கூடாது எனத் தெரிவிக்கும் நீதிமன்ற உத்தரவினை, சிலையினை நிறுவிய பௌத்த குருமாரிடம் ஒப்படைத்தனர் என தமண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
சிலையினை குறித்த இடத்தில் வைப்பதற்கு முன்னதாகவே, நீதிமன்ற உத்தரவினை தான் ஒப்படைத்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். சிலையினை அந்த இடத்தில் நிறுவியவர்களுக்கு நாம் பாதுகாப்பு வழங்குவதற்காக அங்கு செல்லவில்லை. சட்டத்தினை நிலைநாட்டுவதற்காகவே சென்றோம் என்றும் தமண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நீதிமன்ற உத்தரவினை மீறி – அங்கு சிலை வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்று (30) அமைச்சர் ரவூப் ஹக்கீம் உடபட பல முக்கிய பிரமுகர்களுடம் இது தொடர்பில் உரிய இடத்திற்கு சென்றதும் குறிப்பிடத்தக்கது