சிறுபான்மை மக்களுக்கு அநியாயம் செய்வதற்காகவே தேர்தல் திருத்தத்தை கொண்டு இரு பெரும் கட்சிகளும் கொண்டு வர முயற்சிக்கின்றன என்று கூறும் பிரதி அமைச்சர் ஹரீஸ் இந்த அநியாயத்தை எதிர்க்குமுகமாக பாராளுமன்றத்தின் எதிர்த்தரப்பிற்கு செல்ல வேண்டும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்தார்.
தேர்தல் திருத்தம் சம்பந்தமாக பிரதி அமைச்சர் ஹரீசின் உரை சம்பந்தமாக கேட்ட போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
இன்று நாடு பல பிரச்சினைகளை எதிர் நோக்கியுள்ள நிலையில் தேர்தல் சீர்திருத்தம் என்பது அவசியமற்றதாகும் என்பதே உலமா கட்சியின் தெளிவான நிலைப்பாடாகும். கடந்த மஹிந்த ஆட்சியின் போது இனவாத கட்சியான ஹெல உறுமயவின் கட்டாயத்தின் பேரில் தேர்தல் திருத்தம் முன்னாள் அமைச்சர் அதாவுள்ளாவினால் பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட போது அரசுக்கு ஆதரவு என்ற நிலையிலும் உலமா கட்சி அதனை கண்டித்தது. இதன் காரணமாக மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இதனை கிடப்பில் போட்டார். ஆனாலும் இதனை நாம் ஏற்கவில்லை என கூறிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பணமும் பதவியையும் பெற்றுக்கொண்டு இத்திருத்தத்துக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் கை உயர்த்தினார்கள்.
தற்போதும் இதனை ஆதரிக்க மாட்டோம் எனக்கூறும் மு கா மேலும் சிலவற்றை பெற்றுக்கொண்டு ஆதரவளித்து விட்டு வழமை போல் நாம் முட்டாளாகி விட்டோம் என அதன் தலைவர் நூறாவது தடவையாக சொல்வார் என்பதே உண்மை.
தற்போது மீண்டும் இத்திருத்தம் பற்றி பேரின கட்சிகள் முயற்சிக்கும் இன்றைய நிலையில் இதற்கெதிராக பாராளுமன்றத்தில் நடவடிக்கை எடுக்காமல் பொது மக்கள் மத்தியில் வந்து வீறாப்பு பேசியுள்ளார் எமது பிரதி அமைச்சர் ஹரீஸ்.
நமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் நிலை இப்படித்தான் உள்ளது. அதாவது பாராளுமன்றத்தில் பூனை போன்று தூங்குவது,வெளியே வந்ததும் பயில்வான் இலேகியம் திண்டவன் போல் வீறாப்பு பேசுவது.
ஆகவே பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்கள் மேற்படி தேர்தல் திருத்த நடவடிக்கைகளை எதிர்க்கும் வகையில் இந்த பொல்லாட்சி அரசை எதிர்த்து எதிர் தரப்பில் உட்கார வேண்டும் என்பதை கடந்த பொது தேர்தலில் ஹரீசின் வெற்றிக்காக உழைத்தவர்கள் என்ற வகையில் உலமா கட்சி உரிமையுடன் சொல்வதுடன் இவ்வாறு செய்வதன் மூலம் இது ஒரு வரலாற்று ரீதியிலான எதிர்ப்பாக அமையும் என சொல்கிறோம். ஜே ஆர் காலத்தில் தேர்தலை நடத்தாமல் அரசாங்கத்தை கொண்டு செல்ல முயன்ற சர்வாதிகாரத்துக்கெதிராக தமிழர் விடுதலைக்கூட்டணி தலைவர் ஆனந்த சங்கரி தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியையே அன்று இராஜினாமா செய்து வரலாறு எழுதினார். அந்தளவுக்கு சமூக பற்றை காட்டும்படி நாம் ஹரீசிடம் சொல்லவில்லை. மாறாக பாராளுமன்றத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தரப்பில் அமர்ந்து தனது எதிர்ப்பை காட்டும்படி கோரிக்கை விடுகின்றோம்.