இனவாதிகளின் பேசு பொருளாகியுள்ள "அரிசிமலை" விவகாரம்..!

ண்மைக்காலமாக மீண்டும் இனவாதத்தின் குரல் நாட்டின் பல பாகங்களிலும் ஒலிக்க ஆரம்பித்துள்ளமையானது மிகவும் வேதனை அளிக்கக்கூடிய ஒன்றாக அமைந்துள்ளதோடு சமாதானத்தை நேசிக்கும் மக்கள் மத்தியிலே பெரும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான இனவாத நடவடிக்கைகளின் ஓர் அங்கமாகவே திருகோணமலை புல்மோட்டை கிராமத்தின் "அரிசிமலை" பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இடம்பெற்ற ஒரு அசம்பாவித நடவடிக்கையும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புல்மோட்டையின் அரிசிமலை பகுதியை அண்மித்த இடத்தில் சகோதரர் காலித் என்பவருக்கு சொந்தமான வீட்டை ஓர் பெளத்த பிக்குவும் அவரது அழைப்பின் பேரில் வெளி இடங்களில் இருந்து வருவிக்கப்பட்ட பேரினவாத குழுக்களும் ஒன்று சேர்ந்து தகர்த்தெறிந்துள்ள சம்பவமானது நாடளாவிய மக்கள் மத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதோடு குறித்த இச்சம்பவமானது இந்நாட்டில் நிலைபெற்றுள்ள நல்லாட்சிக்கு பங்கம் விளைவித்து இனவாத சாயம் பூசும் ஒரு செயலாகவும் அமைந்துள்ளமை மிகவும் மனவேதனை அளிக்கின்றது.

ஓர் அராஜக ஆட்சி மக்கள் ஆணை மூலம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு சீரான முறையில் சென்றுகொண்டிருக்கும் இந் நல்லாட்சியிலும் மக்கள் மத்தியில் பிணக்குளையும் குழப்பங்களையும் இனவாதத்தின் மூலமாக தூண்டி நாட்டைத்துண்டாட நினைக்கும் பேரினவாத கும்பல்களின் நோக்கத்தை பொதுமக்களாகிய நாம் நன்கு புரிந்து செயற்பட வேண்டியது காலத்தின் கடமையாக உள்ளது. அது மட்டுமல்லாமல் நல்லாட்சியின் பெயரில் மக்களின் அபிமானத்தோடு நாடாளுமன்றம் சென்ற சகல தரப்பினரும் கட்சி பேதம் துறந்து குறித்த இவ்விடயங்கள் தொடர்பாக உரிய உயர்மட்ட தரப்பினர்களுடன் கலந்தாலோசித்து தக்க தீர்மானங்களை மேற்கொள்ளவும் முன்வர வேண்டும் என்பதே ஐக்கிய இலங்கையை விரும்பும் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் எம் அனைவரினதும் தலையாய எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நாட்டில் மீண்டும் ஒரு கொடிய யுத்தம் ஒன்றை தோற்றுவிக்கும் நோக்கில் சில பேரினவாத குழுக்கள் கடந்த சில வருடங்களாக முயற்சியில் ஈடுபட்டுள்ளமையானது வெளிப்படையாக நாம அனைவரும் அறிந்துள்ள ஒன்றே. அதிலும் குறிப்பாக அவர்களது இலக்காக இலங்கைவாழ் முஸ்லிம்களே கருத்துக்கொள்ளப்பட்டுள்ளனர் என்பதும் வெளிப்படையான உண்மை. அதற்கான சிறந்த உதாரணங்களாக கடந்த ஆட்சியில் தம்புள்ளை தொடக்கம் தர்கா நகர் வரையில் காடையர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாத செயற்படுகள் காணப்படுகின்றன அதன் தொடர்ச்சியாக தற்போது குறித்த புல்மோட்டை அரிசிமலை விவகாரமும் இடம்பெற்றுள்ளமை வேதனைக்குரிய ஒன்றாகும்.

குறித்த இவ்விடயம் பேரினவாத சக்திகளால் திரிபுபடுத்தப்பட்டு பெரும்பான்மை மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதாவது புல்மோட்டை வாழ் மக்கள் ஒன்று சூழ்ந்து குறித்த அரிசிமலை விகாரைக்கு பொறுப்பாக இருக்கின்ற அந்த பிக்குவிற்கு அடிக்க முயன்றதாகவும் கைகலப்பு நேர்ந்ததாகவும் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதில் எந்த வித உண்மைகளும் இல்லை இது வெறுமனே இட்டுக்கட்டப்பட்டுள்ள பொய் இது தொடர்பான விளம்பரப்படுத்தல்கள் கடந்த சில நாட்களாக இனவாதிகளினால் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. அதுமட்டுமல்லாமல் கடந்த 15 ம் திகதி இனவாதத்தை எதிர்த்து கொழும்பு பெளத்தா லோக மாவத்தையில் "வெவ்வேறு ஆனாலும் சமம்" (Different Yet Equal ) என்ற அமைப்பினால் இனவாதத்திற்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட அமைதிப்பேரணியின் போது அதற்கு கலகம் விளைவிக்க முயன்ற "சிங்ஹ லே" என்ற இனவாத குழுக்களும் குறித்த இந்த அரிசிமலை விவகாரத்தை திரிபு படுத்தி ஓர் பூதாகர விடயமாக முன்வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னும் ஒரு தடவை குறித்த அந்த அரிசிமலை விகாரைக்கு பொறுப்பாக இருக்கின்ற பிக்குவினால் புல்மோட்டை வாழ் மக்களின் காணிகள் புனித பூமி என்ற போர்வையில் காவுகொள்ளப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் அது எமது மக்களின் வீதிப்போராட்டங்கள் மூலம் முறியடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மத குரு என்ற போர்வையில் இனவாத செயற்பாடுகளுக்கு மக்களை ஆயத்தம் செய்யும் இவ்வாறானவர்களின் செயற்பாடுகள் மிகவும் கண்டிக்கத்தக்கது. இவ்விடயம் தொடர்பாக மேலான நல்லாட்சியின் உயர் அரசியற்பதவிகளில் உள்ள கெளரவ ஜனாதிபதி மற்றும் பிரதமர், அமைச்சரவை அங்கத்தவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் கூட்டு முயற்சியொன்றை மேற்கொண்டு இந்த இனவாதத்தை கூண்டோடு அழித்தொழிக்க வேண்டும் என்பதே எம் அனைவரினதும் எதிர்பார்ப்பாக உள்ளது. கடந்த ஆட்ச்சிமாற்றத்தில் பங்கு கொண்டவர்கள் என்ற அடிப்படையிலும் நல்லாட்சியின் பங்குதாரர்கள் என்ற வகையிலும் இந்நாட்டில் ஒரு சுமூகமானதும், சமாதானதுமான ஓர் வாழ்வினையே நாம் அனைவரும் எதிர்பார்க்கிறோம் இது தொடர்பான விடயங்கள் அரசால் கரிசனை கொள்ளப்படும் என்ற தொடரான நம்பிக்கையோடு.

புல்மோட்டை யாசீர் எம். அனீபா-
சமூகப்பணி இளமாணிக்கற்கை,
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் - கொழும்பு.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -