என்.எம்.அப்துல்லாஹ்-
இன்று (20) அன்று யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றப் பதிவுகளுக்கான விஷேட நடமாடும் சேவையில் 1024 குடும்பங்களுக்கான சேவைகள் யாழ்ப்பாணம் பிரதேச செயலக அதிகாரிகளினாலும் 61 குடும்பங்களுக்கான சேவைகள் சாவகச்சேரி பிரதேச செயலக அதிகாரிகளினாலும் மக்களுக்கு வழங்கப்பட்டன. யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் பெருந்திரளாக திரண்டுவந்து இந்த நடமாடும் சேவையில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். மேற்படி நடமாடும் சேவை குறித்து கருத்து தெரிவிக்கையில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் அவர்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அல்ஹாஜ் அமீன் அவர்களும் இந்நிகழ்வின் வெற்றிக்கு பங்களிப்பு செய்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்தனர். மேலும் அவர்கள் குறிப்பிடும்போது,
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் விஷேட வேண்டுகோலுக்கு அமைவாக யாழ்ப்பாணம் பிரதேச செயலகம் மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலகம் மற்றும் யாழ் மாநகரசபை என்பன இந்த நடமாடும் சேவையினை ஒழுங்கமைத்திருந்தன. பிரதேச செயலர்களின் தலைமையில் 224 அரச அதிகாரிகளும், யாழ் முஸ்லிம் சிவில் சமூகத்தின் 30 பிரதிநிதிகளும் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களுக்கான மீள்குடியேற்றப் பதிவுகள், காணிப் பதிவுகள், வீட்டுத்திட்டப் பதிவுகள், வாழ்வாதாரப் பதிவுகள் என்பவற்றையும் யாழ் மாநகர சபையின் அதிகாரிகள் சோலைவரி சார்ந்த விவகாரங்கள் மற்றும் காணி அளவுத்திட்ட ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் எவ்விதமான அரசியல் மற்றும் சமூகப் பேதங்களுமின்றி யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைவர்களும் சமூகத் தலைவர்களும் முழுமையான பங்களிப்புகளையும் ஒத்துழைப்பினையும் இந்நிகழ்விற்கு வழங்கியிருந்தார்கள். அவர்கள் அனைவரையும் முதற்கண் நினைவுபடுத்திக்கொள்கின்றேன்; யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்திற்கான தமது நிறைவான பங்களிப்பை இவர்கள் அனைவரும் வழங்கியமை இங்கு குறிப்பிடத்தக்கது. அடுத்து யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுக்கும், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் உட்பட பிரதேச செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும், சாவகச்சேரி பிரதேச செயலகத்தின் அதிகாரிகளுக்கும், யாழ் மாநகரசபையின் மாநகர ஆணையாளர் உடபட அதிகாரிகள், ஊழியர்களுக்கும், பொலிஸ் அதிகாரிகளுக்கும் எமது விஷேடமான நன்றிகளை நாம் தெரிவிக்கவேண்டும்.
அத்தோடு இந்நிகழ்விற்கு வருகை தந்த மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆலோசனைகளையும் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளையும் பகிர்ந்துகொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களுள் ஒருவருமாகிய பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ மாவை சேனாதிராஜா அவர்களுக்கும், வடக்கு மாகாணசபையின் யாழ்ப்பாணம் தொகுதியின் பிரதிநிதியாகிய கௌரவ இம்மானுவேல் ஆர்னோல்ட் (வ.மா.ச.உறுப்பினர்) அவர்களுக்கும் யாழ்ப்பாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களுள் ஒருவருமாகிய கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களுக்கும், மற்றும் இராஜாங்க அமைச்சர் கௌரவ விஜயகலா மகேஸ்வரன் சார்பில் கலந்துகொண்ட சிறீ அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.
இம்மீள்குடியேற்ற நடமாடும் சேவையின் அழைப்பை ஏற்று இங்கே பெருந்திரளாக வருகை தந்த அனைத்து யாழ்ப்பாண முஸ்லிம் உறவுகளுக்கும், அவர்களை ஊக்குவித்த அனைத்து யாழ் முஸ்லிம் உறவுகளுக்கும், இதன் வெற்றிக்கு அர்ப்பணிப்போடு உழைத்த அனைவருக்கும் நான் ஒரு செய்தியை முன்வைக்க விரும்புகின்றோம்; வடக்கு முஸ்லிம்களின் மிகப்பிரதானமான கடமையாக பொறுப்பாக அவர்களது “சொந்த பிரதேசங்களில் மீளக்குடியேறுதல்” என்ற செயற்பாடே அமைந்திருக்கின்றது. இதனை நாம் எமது பிரதானமான கடமையாக எடுத்து நிறைவேற்றும்போதும், எவ்விதமான பாகுபாடுகளுக்கும் இடம்கொடுக்காது முன்னோக்கி நகர்கின்றபோது அல்லாஹ்வின் உதவியும் ஒத்துழைப்பும் எப்போதும் எமது மக்களுக்கும், எமது ஊருக்கும் இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்தல் அவசியமாகின்றது.