1972 நவம்பர் மாதம் 27 ஆம் திகதி பிறந்த றிசாத் பதியுதீன் மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவராவார். அவரது பிறப்பிடம் மன்னார் தாரா புறம். 1990 ஆண்டு எல்.டீ.டீ.ஈ யினால் முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்ட போது அவருக்கு 18 வயதாகும். அவர் தனது பெற்றோருடன் புத்தளத்துக்கு வந்து ஓர் அகதி முகாமில் வாழ்ந்து வந்தார்.
கல்வி கற்பதில் பலவித இடையூறுகளைச் சந்தித்தாலும், தனது விடாமுயற்சியால் தனது கல்வியை முடித்துக் கொண்டதன் பின் அரசியலில் ஒரு செயற்பாட்டாளராக நுழைந்து 2001 ஆண்டு டிசம்பர் மாதம் வன்னி மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 2004 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களிலும் அதே மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2009 ஆம் ஆண்டு யுத்தத்தின் கடைசி நாட்களில் 280,000 தமிழ் மக்கள் எல்.டீ.டீ.ஈ யின் ஆக்கிரமிப்பில் சிறைபட்டிருந்த வேளை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்தார். யுத்தத்தினால் வெளியேறிய மக்களை 03 புனர்வாழ்வு முகாம்களில் தங்கவைப்பதில் முன்னிலை வகித்தார். தற்போது கூட வட பகுதியில் அகதிகளை மீள்குடியேற்றுவதில் பெரும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்.
அக்கால கட்டத்தில் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் நெருங்கிய நண்பராக அவர் இருந்ததோடு 2009 மற்றும் 2010 தேர்தல்களில் தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க ஜனாதிபதி மஹிந்த பதியுதீனை நியமித்தார். 2012 மார்ச் மாதம் சுவிட்சர்லாந்தில் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் மாநாட்டில் பல முஸ்லிம் நாடுளின் ஒத்துழைப்பை இலங்கைக்கு பெற்றுக் கொடுப்பதிலும் றிசாத் பதியுதீன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சியின் அபேட்சகரான தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வெற்றிக்கு முன்னின்று சேவையாற்றிய முதற் குழுவில் ஓர் அங்கத்தவராக இருந்த அவர், அத்தேர்தலில் முஸ்லிம் மக்களை ஒன்று திரட்டி மஹிந்தவை தோற்கடிப்பதில் பெரும் பங்கு வகித்தார். தற்போது கூட அவர் முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவராக, சொல்வதைச் செய்யும் செய்வதைச் சொல்லும் ஒரு தலைவராக திகழ்கின்றார்.
வில்பத்து தேசிய பூங்காவனத்துக்கருகில் குடியேறியிருந்த பாரம்பரிய கிராமங்களை சொந்தமாகக் கொண்ட ஏறக்குறைய 25000 சிங்கள, முஸ்லிம் மக்கள், 1990 ஆண்டு எல்.டீ.டீ.ஈ யினால் பலாத்காரமாக துரத்தியடிக்கப்பட்டார்கள். யுத்தத்தின் பின்னர் 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நியமிக்கப்பட்ட விஷேட ஜனாதிபதி செயலணி மூலம் மீள்குடியேற்றங்களை ஆரம்பித்து, இதுவரை அந்த குடும்பங்களின் 30 வீதத்தினரை அவர்கள் ஆரம்பத்தில் குடியேறியிருந்த இடங்களிலேயே மீள் குடியேற்றங்களை அமைத்துக் கொடுத்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் கூறுகையில்,
அவர்களின் காணிப்பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள பாரம்பரிய காணிகளைத் தவிர, வில்பத்து தேசிய பூங்காவனத்துக்குரிய ஒரு பர்ச்சஸ் காணி கூட அபகரிக்கப்படவில்லை எனக் குறிப்பிடுகிறார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் 2012 ஆம் ஆண்டில் நியமிக்கப்படட நல்லிணக்க ஆணைக்குழு மூலம் 1990களில் எல்.டீ.டீ.ஈ யினால் விரட்டியடிக்கப்பட்ட சகல சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்களையும் மீண்டும் அவர்களது வாழ்விடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.
ஆரம்ப காலங்களில் இங்கு குடியேறியிருந்த மக்களைப் பற்றிய விடயங்கள் 1990 ஆம் ஆண்டு தேர்தல் இடாப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதோடு, அவர்களது உரித்துகளைப் பெற்றுக்கொடுப்பது எமது கடமையென்றும் அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
எல்.டீ.டீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்காமையால், முஸ்லிம்கள் தாம் அணிந்திருந்த உடைகளோடு, தமது பாரம்பரிய காணிகளிலிருந்து அவர்கள் விரட்டியடிக்கப்பட்டதால், பெரும் துயரங்களுக்கு முகங்கொடுத்த வண்ணம், சுமார் 25 வருடகாலகாலமாக பெரும்பாலானோர் அகதி முகாம்களில் வாழ்வதாகவும், கூடிய விரைவில் அவர்களை இந்நிலைமையிலிருந்து மீட்டெடுப்பது எமது கடமை என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
மீள்குடியேறும் போது எச்சந்தர்ப்பத்திலும் எந்த ஒரு குடும்பத்துக்கும் அரை ஏக்கருக்கு மேல் காணி வழங்க வில்லையென்றும், அமைச்சர் என்ற வகையில் தனக்குக் காணிகளைப் பங்கிட எந்த உரிமையில்லை என்றும், முழுமையான உரிமையும், அதிகாரமும் இருப்பது பிரதேச செயலாளருக்கே என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
எனவே இது தொடர்பாக கையொப்பங்களை எடுப்பது, ஆர்ப்பாட்டங்களை நடாத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட முன், அக்காணிகளின் உரித்து தொடர்பான ஆவணங்களை அதற்குரிய திணைக்களங்களினூடாகப் பரீட்சித்துப் பார்த்து உண்மை நிலையைப் புரிந்து கொள்ளும்படியும் இன,மத பேதங்கள், கட்சிப் பேதங்களின்றி சகல மக்களுக்கும் சேவை செய்வதே தனது நோக்கமெனவும் அமைச்சர் எடுத்துக் கூறினார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சினூடாக நாட்டின் அபிவிருத்தியை இலக்காகக்கொண்டு செயற்படவும், கைத்தொழிற் துறையை மேம்படுத்தவும் முக்கிய பொறுப்பை ஏற்றிருப்பதாக அவர் கூறுகிறார். கைத்தொழில் தொடர்பான நவீன கொள்கைகளை வகுப்பதோடு, இன்னும் பல பிரிவுகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தியுள்ளார்.
மேற்கூறியவாறு ஒன்று சேர்த்த பலதரப்பட்ட மதிப்பீடுகளைக் கொண்ட கைத்தொழில் துறையை வளர்த்தல், பொருளாதார வளர்ச்சி - தொழில் வாய்ப்புகளை உருவாக்கல், தொடர்ச்சியான கைத்தொழில் வளர்ச்சி, பிரதேச கைத்தொழில் வளர்ச்சி, தொழில்நுட்ப ஏற்றுமதியை ஊக்குவித்தல். என்பன அவற்றுள் சிலவாகும்.
கைத்தொழிற்றுறையில் செயற்பாட்டுத் திறனை வளர்ச்சியடையச் செய்வது தொடர்பாக இவ்வமைச்சிடம் பல விஷேட பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கைத்தொழிற்றுறை கொள்கைகளுக்கு அமைய அத்துறையில் திட்டமிடல், ஒருங்கிணைத்தல் மற்றும் திட்டங்களைச் செயற்படுத்தல், கைத்தொழிற்றுறைக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் என்பன இவற்றுள் சிலவாகும். அது தொடர்பாக பல விஷேட நிகழ்ச்சித் திட்டங்களும் செயற்றிட்டங்களும் அமைச்சினால் செயற்படுத்தப்படுகின்றன.
• தொழிற்பேட்டை நிகழ்ச்சித் திட்டங்கள்
• கிராமங்களுக்கு கைத்தொழில் நிகழ்ச்சித் திட்டங்கள்.
• விஷேட கைத்தொழில் மேம்பாட்டுத் திட்டங்கள்
• விளைச்சல்களை மேம்படுத்தும் நிகழ்ச்சித் திட்டங்கள்
• இரசாயன உபகரண ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தல்
• ஆரோக்கியமான கைத்தொழில் உற்பத்திகளை ஊக்குவித்தல்
• ஆடைத் தொழிற்சாலை மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டங்கள்.
அமைச்சின் நோக்கு என்னவெனில் பலமிக்க வர்த்தகத்தின் அடிப்படையில், சர்வதேசத்தோடு போட்டிமிக்க ஓர் உள்நாட்டு கைத்தொழில் பிரிவொன்றை இலங்கைக்குள் ஏற்படுத்துவதாகும்.
“குடும்பங்களைப் பலப்படுத்துவதன் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்தல்” என்ற கருப்பொருளினூடாக இலங்கையின் சகல பிரதேசங்களிலும் வாழும் குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நாட்டில் காணப்படும் 14000 கிராம சேவகர் பிரிவுகளுக்குள்ளும், இந்நிகழ்ச்சித் திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன. குடிசைக் கைத்தொழில்களாக கைத்தறி, நெசவுக் கைத்தொழில், பாதணிகள் மற்றும் தோற்பொருள் கைத்தொழில், தும்புக் கைத்தொழில், நன்னீர் மீன் வளர்ப்பு (ஏற்றுமதி), விளையாட்டுப் பொருட்களுக்கான கைத்தொழில், மட்பாண்டங்கள் தயாரிப்பு, கித்துல், பனை தொடர்பான தயாரிப்புக்கள், தயாரிக்கப்பட்ட உணவுகள், பானங்கள், கயிறு திரிக்கும் கைத்தொழில் என்பன தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்த வகையில் குடிசைக் கைத்தொழில் தொடர்பாக கிராமிய மக்களை ஊக்கப்படுத்துவதால் குடும்பத்துக்கு, மேலதிக ஒரு வருமானம் பெற்றுக்கொள்ள முடிவதோடு கிராமிய பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்வதில் அது அத்திவாரமாக அமைகின்றது என்பது அமைச்சின் நம்பிக்கையாகும்.
கொழும்பு மற்றும் ஏனைய பிரதேசங்களுக்குமிடையில் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதில் பாரபட்சங்கள் இருப்பதால், நாட்டில் கைத்தொழில் வளர்ச்சிக்கு அது ஒரு பெரும் தடையாக இருக்கின்றது. பிரதேச கைத்தொழில் வளர்ச்சிக்கு அமைச்சு மூலம், பிரதேச கைத்தொழில் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேல்மாகாணத்தில் ஒன்றிணைக்கப்பட்ட 26 கைத்தொழில்கள் கிராமிய பிரதேசங்களுக்கு பரவலாக்க இதன் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது.
கிராமிய பிரதேசங்களில தெருக்கள், மின்சாரம் மற்றும் நீர் வசதியுள்ள காணிகளை தேர்ந்தெடுத்து அவற்றை அபிவிருத்தி செய்து, கைத்தொழிலாளருக்கு அவர்களது கைத்தொழில்களை ஆரம்பிக்கத் தேவையான சூழலை உருவாக்கிக் கொடுப்பதோடு, தற்போதைக்கு 277 கைத்தொழில்கள் வர்த்தக உற்பத்திப் பொருட்களை ஆரம்பித்துள்ளதோடு மேலும் 100 க்கும் அதிகமான கைத்தொழில்களை நிறுவுவதில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது.
மேல் மாகாணத்தின் மத்துகம தொழிற்பேட்டையில் அபிவிருத்திப் பணிகள் முடிவடைந்திருப்பதோடு, திருகோணமலை கைத்தொழிற் பேட்டையில் ஒரு கட்டங்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் முடிவடைந்துள்ளன. அதே போல் மட்டக்களப்பு, வவுனியா போன்ற மாவட்டங்களிலும் புதிய கைத்தொழில் பேட்டைகள் நிறுவப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, செழிப்பான ஓர் இலங்கை நாட்டை உருவாக்கும் விஷேட பொறுப்பும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உணவுகளைப் பேணுவது தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு இலங்கைத் தரச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள, நிதி உதவிகளைப் பெற்றுக் கொடுத்து அவர்களின் தயாரிப்புகளின் தரத்தை மேம்படுத்தல் என்பது அமைச்சு மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள மற்றுமொரு செயற்பாடாகும். இராணுவம், பொலீஸ் மற்றும் அரச நிறுவனங்களுக்குத் தேவையான துணி வகைகளை, உள்நாட்டு தயாரிப்புகளை அதிகமாக விநியோகிக்கவும் மின்சாரம், மின்சார உபகரணங்கள், பீங்கான் வகைகள், தோற் பொருட்கள் மற்றும் பாதணிகள் தொடர்பாக சர்வதேச தரத்தைப் பெற்றுக் கொடுக்கத் தேவையான வசதிகளும் ஒழுங்கமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
தற்போதைக்கு சிறிய மற்றும் மத்திய தர விவசாயக் கொள்கை அமைப்பொன்றை அமைப்பதினூடாக, அமைச்சு மற்றுமொரு புதிய படிமுறையை ஆரம்பித்துள்ளது. எதிர்வரும் 5 வருட கால இறுதியில் இலங்கையானது கைத்தொழில் துறையில் மிக உன்னதமான சாதனைகளை பெற்றுக் கொடுக்கும் ஒரு நாடாகத் திகழும் அறிகுறிகளை தற்போது வழங்கிக்கொண்டு இருக்கின்றது.
நாடு முழுவதிலும் உள்ள மக்களுக்கு மானிய விலையில் அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களை வழங்குவதில் பெரும் செயலாற்றும் சதொச கிளைகளின் எண்ணிக்கை இவ்வருட இறுதிக்குள் 500 ஆக அதிகரிக்கப்பட்டு, மக்களோடு மென்மேலும் நெருக்கமான இணைப்பை ஏற்படுத்துவதில் அமைச்சர் றிசாத் பதியுதீன் முயற்சி செய்து வருகின்றார்.
தமிழில் நிஷா ஆப்தீன்.

