கிழக்கு மாகாண காணி மீட்பு வலையமைப்பினர், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு கடந்த மே 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் இருநாள் கள விஜயமொன்றை மேற்கொண்டனர். இந்த விஜயம் காணி அபகரிப்புகள் மற்றும் காணி மீட்பு நடவடிக்கைகள் தொடர்பான அனுபவப் பகிர்வு மற்றும் கலந்துரையாடல்களை மையப்படுத்தியதாக அமைந்தது.
இவ்விஜயத்தின் போது, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இடம்பெற்று வரும் காணி அபகரிப்பு சம்பவங்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட காணி மீட்பு நடவடிக்கைகள் குறித்து வடக்கு மாகாண மக்களுடன் விரிவான விளக்கங்கள் பகிரப்பட்டன.
அதேவேளை, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் தற்போது நிலவி வரும் காணி அபகரிப்பு பிரச்சினைகள் தொடர்பாகவும், வடக்கு மாகாண மக்களும் கிழக்கு மாகாண காணி மீட்பு வலையமைப்பின் பிரதிநிதிகளும் இணைந்து கலந்துரையாடினர்.
இந்த சந்திப்புகளின் போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் காணி பிரச்சினைகளுக்கு ஒருங்கிணைந்த முறையில் எதிர்கொள்ள வேண்டிய அவசியத்தை மக்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து, காணி மீட்பிற்காக வடக்கு–கிழக்கை இணைக்கும் புதிய வலையமைப்பொன்றும் உருவாக்கப்பட்டது.
வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் காணிகள் தொடர்ச்சியாக பல்வேறு வடிவங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. குறிப்பாக:
தொல்லியல் திணைக்களம்
மகாவலி திணைக்களம்
வனஜீவராசிகள் திணைக்களம்
வனவளத் திணைக்களம்
கிபுலோயா திட்டம்
சில பௌத்த துறவிகள் மற்றும் புத்தசாசன அமைச்சு
இராணுவ ஆக்கிரமிப்புகள்
போன்ற பல்வேறு திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் ஊடாக பொதுமக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக, மக்களின் வாழ்வாதாரம், தொழில்வாய்ப்புகள் மற்றும் பாரம்பரிய வாழ்விடங்கள் பாதிக்கப்படுவதுடன், இன விகிதாசார மாற்றங்களையும் ஏற்படுத்தும் முயற்சிகள் இடம்பெறுகின்றன எனக் கூறப்பட்டது. வடக்கு–கிழக்கில் பெரும்பான்மையாக வாழும் தமிழ் பேசும் மக்களை அரசியல் ரீதியாக சிறுபான்மையினராக மாற்றும் திட்டமிட்ட நடவடிக்கைகளாகவே இச்செயற்பாடுகள் பார்க்கப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.
எனவே, எதிர்காலத்தில் இடம்பெறக்கூடிய காணி அபகரிப்புகளைத் தடுக்க வடக்கு–கிழக்கு இணைந்த சிவில் சமூகங்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக காணி மீட்பு வலையமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.











0 comments :
Post a Comment