பாரிஸ் தாக்குதலின் சூத்திரதாரியும் பெல்ஜியத் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் தாக்குதலை மேற்கொண்டு தப்பித்த பயங்கரவாதியுமான மொகம்மட் அப்ரினி கைது செய்யப்பட்டுள்ளார். செவண்டம் விமான நிலையத் தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர் சிசிடிவியில் பதிவான மூன்று தாக்குதலாளிகளில் தொப்பி அணிந்திருந்த நபர் இவர் என நம்பப்படுகிறது.
ஐரோப்பிய காவல் துறையும் உளவுப் பிரிவினரும் வலைவீசித் தேடிய 30 வயதுடைய அப்ரினி பிரஸ்ஸல்ஸில் அண்டர்லெக்ற் மாவட்டத்தில் வைத்து கைதாகியிருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. பாரிஸ் மற்றும் பிரஸ்ஸல்ஸ் தாக்குதலில் ஈடுபட்ட பல சந்தேக நபர்களின் வாழ்விடமாக இம்மாவட்டம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
