அபிவிருத்தியென்பது அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் நோக்கப்பட வேண்டும்-பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

றிசாத் ஏ காதர்-
'மக்களுக்கான அபிவிருத்தியென்பது அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் நோக்கப்பட வேண்டியதாகும். எனவேதான் மக்கள் நலனை முதன்மைப்படுத்திய வகையில் பிரதேச அபிவிருத்திகளுக்கு நாம் எப்பொழுதும் பக்க பலமாகவே இருந்து வந்துள்ளோம். காத்தான்குடி அபிவிருத்தி பிரதான வீதி அபிவிருத்தி விடயம் இதற்கு நல்ல உதாராணமாகும் " என NFGG தவிசாளர் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதான வீதியில் அதிகரித்து வரும் வாகன விபத்துக்களை கட்டுப்படுத்தி நிரந்தரமான தீர்வொன்றை எவ்வாறு காணமுடியும் என்கின்ற திட்ட முன் மொழிவுகளை காத்தான்குடி பிரதான வீதி வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களின் ஆலோசனைகளுடன் ஆராயும் கலந்துரையாடலினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) நடாத்தியது. இந்நிகழ்வில் உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

"ஒரு அரசியல் தரப்பு முன்னெடுக்கும் மக்களுக்கான சிறந்த அபிவிருத்திகளையும் கூட, அரசியல் குரோதங்கள் காரணமாக அடுத்த தரப்பு தடுத்த நிறுத்த முயற்சிப்பதனை பரவலாக காண்கின்றோம். அல்லது, அபிவிருத்திபணிகள் தொடர்பில் மாற்று அரசியல் தரப்புகளினால் முன்வைக்கப்படும் சிறந்த ஆலோசனைகளைக்கூட தட்டிகழித்து விட்டு மக்களுக்கு பாதகமான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதனையும் காண்கின்றோம். 

இந்நிலையில் அபிவிருத்தியென்பது எவரால் மேற்கொள்ளப்பட்டாலும் அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் மக்கள் நலன் அடிப்படயிலேயே அவற்றை நாம் நோக்குகின்றோம். எனவேதான் மக்கள் நலனை முதன்மைப்படுத்திய வகையில் பிரதேச அபிவிருத்திகளுக்கு பக்க பலமாக நாம் எப்பொழுதும் இருந்து வந்துள்ளோம். அந்த வகையில் காத்தான்குடி பிரதான வீதி அபிவிருத்தி விடயம் இதற்கு நல்ல உதாராணமாகும்.

நமது பிரதான வீதி அபிவிருத்தி செய்யப்பட்டதற்கு, சிலர் தாங்களே காரணம் என உரிமை கோரிக்கொண்டிருக்கின்றனர். இந்த இடத்தில் நாம் பல யதார்த்தங்களையும் வரலாற்று உண்மைகளையும் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையில் காத்தான்குடி பிதான வீதி அபிவிருத்தி என்பது, காத்தான்குடியை மாத்திரம் மையப்படுத்தி ஒன்றரை கிலோ மீட்டர்களுக்கு மட்டும் மேற்கொள்ளப்பட்ட வீதி அபிவிருத்தியல்ல. அது திருக்கொண்டியடிமடு தொடக்கம் பொத்துவில் வரை மேற்கொள்ளப்பட்ட வீதி அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு பகுதியாகும். 

எனினும், இவ்வீதி விஸ்தரிப்பு பணியில் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்து வீதி விஸ்தரிப்பிற்கான இடத்தினைப் பெற்றுக்கொடுத்தவர் சகோதரர் ஹிஸ்புள்ளாஹ்தான். எனினும் பல இழப்புகளுக்கு மத்தியில் மத்தியில் தமது சொந்த கடைகளை உடைத்து இதற்கான இடங்களை ஒதுக்கிக் கொடுத்தும், அபிவிருத்தியின் போது ஏற்பட்ட பல மாதகால வியாபார நஷ்டங்களை பொறுத்தக்கொண்டுமிருந்த பிரதான வீதி வர்த்தகர்களும் கடை உரிமையாளர்களுமே உண்மையில் இந்த அபிவிருத்திக்கான உரித்துடையவர்களாவர். 

எனினும் அவ்வாறு தியாகத்துடன் செயற்பட்ட வர்த்தக சமூகத்தின் அபிலாஷகளை பூர்த்தி செய்யும் வகையில் தற்போதைய பிரதான வீதி அமையவில்லை என்பது கவலையான விடயமாகும். 

2009ம் ஆண்டு இவ்வீதி அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்ட கால கட்டத்தில் இதனை ஒரு அரசியல் செயற்பாடாகக் கருதி இவ்வபிவிருத்தியினை தடுத்து நிறுத்த பலரும் முயற்சித்தனர். எனினும் மக்களுக்கு மிக அத்தியவசியமாக தேவைப்பட்ட இவ்வீதி கட்டாயமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் எனும் நிலைப்பாட்டுடனேயே NFGG செயற்பட்டது. 

NFGG இந்த விடயத்தில் மிகக்கரிசனையுடன் செயற்பட்டு இவ்வீதி எவ்வாறு அமையப் பெற்றால் எதிர்காலத்தில் மிகச்சிறந்த ஒரு பாதுகாப்பான வீதியாக திகழ முடியும் எனும் திட்ட முன்மொழிவினை நாம் 2009 ஏப்ரல் மாதத்தில் வரைபடங்களுடன் பிரசுரங்களாக வெளியிட்டிருந்தோம். 

கடைகளை உடைத்து வீதி விஸ்தரிப்பினை மேற்கொள்ளும் போது எவ்வாறு சேதங்களை குறைக்க முடியும் என்பதினையும் அவற்றிற்கான நஷ்ட ஈடுகளை உரிமையாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதினையும் நாம் வலியுறுத்தியிருந்தோம். எமது வெளியீடுகள் இதற்கான வரலாற்று ஆதாரமாக இன்றுமுள்ளன.

அத்துடன் மாத்திரம் நின்று விடாது நாம் அரசியல் பேதங்களை மறந்து சகோதரர் ஹிஸ்புள்ளாஹ்வின் வீட்டிற்கு நேரடியாகச்சென்று இம்முன்மொழிவுகளை சமர்ப்பிந்திருந்தோம். இதனை ஒரு காணொளியாக உருவாக்கி செயற்படுத்தியும் காட்டியிருந்தோம். எனினும் அரசியல் கரோதங்களுக்காக அவை அனைத்தும் புறக்கணிக்கப்பட்ட அடிப்டையிலேயே பிரதான வீதி அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டது. அதன் விளைவாக இன்று மீண்டும் நாம் அது தொடர்பில் ஆராய வேண்டிய கட்டத்திற்கு வந்துள்ளோம். 

அபிவிருத்தியென்பது எவரால் மேற்கொள்ளப்பட்டாலும் , மக்களின் பணம் வினைத்திறனுள்ள வகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் அவை நீண்ட காலத்திற்கு மக்களுக்கு பயனளிக்கக்கூடிய வகையில் செலவு செய்யப்பட வேண்டும் என்பதிலும் அவற்றில் ஊழல் மோசடிகள் இடம்பெற்று மக்கள் பணம் மோசடி செய்யப்பட்டு விடக்கூடாது என்பதிலுமே எப்பொழுதும் அவதானமாக செயற்பட்டு வருகின்றோம்"
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -