அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்ற நினைத்து மக்களிடம் ஏமாறும் காலம் வெகு தூரத்தில் இல்லை..!

எஸ்.அஷ்ரப்கான்-
வ்வொரு முஸ்லிம் அரசியல்வாதிகளினதும் அசைவுகளை வைத்தே அவர்களின் அரசியல் பின்னனியை மக்கள் தெரிந்து கொள்கின்றனர் என நாபீர் பௌண்டேசன் ஸ்தாபகரும் சமூக சேவையாளருமான உதுமான்கண்டு நாபீர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் தலைமைகளின் சமகால நடவடிக்கைகள் தொடர்பாக மேலும் அவர் கருத்துவெளியிடும்போது,

இன்று எம்மிடையே தேசியத் தலைமையென்றும், சத்தியத் தலைமையென்றும் மார் தட்டும் முஸ்லிம் தலைவர்கள் எளிமையாய் வாழ்வது போல் மக்களுக்கு மாயை ஏற்படுத்தி அரசியல் ரீதியாக அப்பாவி பொது மக்களை ஏமாற்றி வருவதை எம்மால் அவதானிக்க முடிகிறது. ஆனால், அரசியலில் மக்களை பகடைக் காயாக நினைத்து ஏமாற்றும் முன்பொரு காலமிருந்ததை மறுக்க முடியாது. ஆனால், இன்றுள்ள மக்களிடம் அந்த பருப்பு வேகாது.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தன் எளிமையின் அடையாளம் உணர்த்த ஆட்டு மந்தைகளை அரவணைத்தது போல சத்தியத் தலைவரான றிஷாத் அவர்களும் சுபஹ் தொழுது விட்டு எளிமையான முறையில் மக்களை சந்திக்க சென்றதாக ஊடகங்களுக்கு புகைப்படங்களை போட்டு ஒரு அரசியல் தலைவரின் எளிமையான விம்பம் கட்டமைக்கபடுவதை சாதாரண பொது மகனும் உணர முடியுமாக இருக்கிறது.

இது போல இரண்டு தையல் மெஷின்களை வழங்கி விட்டும், இருவருக்கு வேலை வாய்ப்பு வழங்கி விட்டும் பெரியதொரு இமாலய சாதனை நிகழ்த்தியதாய் தம்பட்டமடித்துக் கொள்வது எதிர்கால அரசியல் காய் நகர்த்தலே அன்றி வேறில்லை. இலங்கை முஸ்லிம்களுக்கு இந்தத் தலைவர்கள் ஆற்ற வேண்டிய மிகக் கனதியான பணிகள் எத்தனையோ இன்னும் தேங்கியிருக்கின்றன. ஆனால், அவைகள் எல்லாம் இவர்களின் அசிரத்தையால் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

தேர்தல் சங்கு ஊதி விட்டால் ‘பழைய குருடி கதவைத் திறடி’ எனும் தோரணையில் கடந்த காலத்தில் நடைபெற்ற முஸ்லிம்களின் பிரச்சினைகள் மேடைகளில் அனல் பறக்க பேசப்படும். தேர்தல் முடிந்த கையோடு அனைத்தும் மறந்து விடும். முஸ்லிம் அரசியலில் இந்த நிலை எப்போது மாறுமோ அன்றுதான் எம் மக்களுக்கு விடடிவு ஏற்படும்.

விரும்பியோ விரும்பாமலோ, பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் ஆகியோர் தாம் சார்ந்த மக்களுக்கு அல்லது தம் பிரதேசத்திற்கு கணிசமாய் ஆற்றிய சேவைகளை விடவும் தேசியமும் சத்தியமுமான தலைமைகள் மக்களுக்கு செய்த மகத்தான பணிகள் என்னவென்பதை நாம் நமது மனச்சாட்சிகளிடம் அதட்டிக் கேட்கவேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது.

எனவே, கரங்களில் வாய்ப்புகளை வைத்துக் கொண்டு கால நேரத்தை வீணாக்காமல் மக்களுக்கு உண்மையாக நேர்மையாக பணியாற்றுங்கள். அதை விடுத்து மக்களை ஏமாற்ற எளிமை வேடம் தரித்தால் அதே எளிமையான மக்கள் யதார்த்தம் புரிந்து தலைவர்களை ஏமாற்றும் காலம் வெகு தூரத்திலில்லை என்பதை ஆணித்தரமாய் சுட்டிக் காட்ட விரும்புகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -