யாரையும் நம்பி வீட்டுக்குள்ள சேர்க்க முடியலைப்பா... எப்ப எந்த நேரத்தில நமக்கே குழி தோண்டுவாங்கன்னு தெரியலை. அந்த அளவுக்கு சொந்தக்காரங்க யாரு? சோத்துல மண் அள்ளி போடுறவங்கன்னு கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு கூட இருந்தே குழி பறிக்கிறாங்கப்பா... என்று புலம்ப ஆரம்பித்து விட்டனர் இல்லத்தரசிகள். எல்லாம் டிவி சீரியல்கள் பார்ப்பதனால் ஏற்பட்ட எபெக்ட்தான்.
காலையில் 9 மணியில் தொடங்கி இரவு 11 மணி வரை டிவி சீரியல்களை விடாமல் பார்க்கும் பெண்கள் சிலர் சீரியல்களில் வரும் கதாபாத்திரம் போலவே சிலர் ஆகிவிடுகின்றனர். டிவி சீரியலைப் பார்த்து சிலரோ கவிதை கூட எழுத ஆரம்பித்து விட்டனர். 24 மணி நேர வரையறை எல்லாம் கடந்த கால சுழற்சி நீ. வேண்டா விருந்தாளியாய் விளம்பரம். வந்த விருந்தாளிக்கு பாரா முகம். நடு வீட்டில் ஒப்பாரி வைக்கும் உன் சீரியல்கள். நீ வீட்டுக்குள் வந்து படிக்கும் பழக்கத்தை வீட்டுக்கு அனுப்பினாய் ஆக, நீ நல்லவனா, கெட்டவனா? கேட்கிறான், உன்னால் முட்டாள் ஆகி, உன்னை 'முட்டாள் பெட்டி' என அழைக்கும் முட்டாள் பொது சனம். என்று கவிதையாய் எழுதினாலும் டிவி பெட்டி மனிதர்களை முட்டாள்கள் ஆக்குவது என்னவோ உண்மைதான்.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாள்களில் வீட்டுக்கு வரும் நண்பர்களை, உறவினர்களை வரவேற்று மகிழ்ந்தது அந்தக் காலம். இது போன்ற நாள்களில் தொலைக்காட்சி பெட்டி முன் பழியாய்க் கிடப்பதால் யாரும் வந்துவிடக் கூடாது என எண்ணுவது இந்தக் காலம். உறவுப் பாலத்தை உருக்குலைக்கச் செய்வது இந்த முட்டாள் பெட்டிதான். அதற்குக் காரணம் இந்த டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள்தான்.
எந்த சீரியலாவது கொஞ்சம் சந்தோசப்படுகிறதா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். மருமகளை கொலை செய்யத் துடிக்கும் மாமியார். நாத்தனாரை வீட்டை விட்டு துரத்த நினைக்கும் அண்ணி, கணவனை கழுத்த நெரித்து கொல்ல நினைக்கும் மனைவி என பல சீரியல்கள் இன்றைக்கு வீட்டின் வரவேற்பரைக்கு வந்து செல்கிறது. சன் டிவி சீரியல்கள் சுத்த மோசம் என்றால், அதை விட்டு ஜீ சேனலுக்கு மாறினால் அதை விட படு மோசமாக இருக்கிறது. இரவில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் காலை 9 மணிக்கே மறு ஒளிபரப்பு செய்கின்றனர்.
