கிண்ணியா மேலதிக நிருபர்-
கிழக்கு மாகாண தமிழ் மொழிப்பாடசாலைகளில் சிங்கள பாடம் கற்பிப்பதற்கான தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க கோரும் தனிநபர் பிரேரனையை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் எதிர்வரும் 2016.01.26ம் திகதி கிழக்கு மாகாண சபை அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்படுவதாவது....
கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மொழிப்பாடசாலைகளில் 02வது மொழியான சிங்களப் பாடத்தினை மாணவர்கள் கற்றுக் கொள்வதற்கான சிங்கள நூல்கள் வருடா வருடம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. சிங்களப் பாடத்திற்கான தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை. இதனால் தமிழ் மொழிப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தால் வருடா வருடம் வழங்கப்பட்டு வரும் சிங்கள நூல்களை பயன்படுத்த முடியாத நிலமை தோன்றியுள்ளது.
எனவே, நமது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நல்ல சூழ்நிலையில் கிழக்கு மாகாண தமிழ் மொழிப் பாடசாலைகளில் சிங்கள மொழிக்கான தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை கிழக்கு மாகாண சபை மேற்கொள்ள வேண்டும் என்று கிழக்கு மாகாண சபையைக் கோரும் இத் தனி நபர் பிரேரனையை எதிர்வரும் 2016.01.26ம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபையின் 52வது அமர்வின் போதே கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது,
