கல்முனைள தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய சமூகங்களின் இன ஐக்கியத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு மாநகரமாகும். இம்மாநகரத்தில் கல்முனை, கல்முனை தமிழ் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகங்கள் இயங்கி வருகின்றது. 2014ம் ஆண்டு தொகை மதிப்பு அறிக்கையின் பிரகாரம் கல்முனை பிரதேச செயலகத்தில் 44,360 முஸ்லிம் மற்றும் 66 தமிழர்கள் வாழ்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் கல்முனை தமிழ் உப பிரதேச செயலகத்தில் 26,564 தமிழர்கள் மற்றும் 2,376 முஸ்லிம்கள் வாழ்கின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தொன்மை வாய்ந்த கல்முனை மாநகரமானது இன்றுவரை திட்டமிடப்பட்டவகையில் அபிவிருத்தி செய்யப்படாமல் கடந்த கால அரசாங்கங்களினால் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் தற்போதய பிரதமருமாகிய ரணில் விக்கிரம சிங்க அவர்கள் தமது கட்சியின் விஞ்ஞாபனத்தில் கல்முனை நகரை அபிவிருத்தி செய்வதாக குறிப்பிட்டிருந்தார்.
அதனை இன்று நடைமுறைப்படுத்த எத்தணிக்கும் தருணத்தில் தமிழ் தரப்பு சார்பில் சில அரசியல் வாதிகள் அத்திட்டத்திற்கு எதிராக கடந்த 28.12.2015 அன்று ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டதை காணக்கூடியதாக அமைந்தது.
கல்முனை புதிய நகர திட்டம் தொடர்பான முன்மொழிவினை முன்னாள் அமைச்சர் MHM. அஷ்ரப் அவர்கள் கொண்டு வந்த பொழுது தமிழ் தரப்பு சார்பில் தமது எதிர்ப்பினை சில அரசியல் வாதிகள் வெளிக்காட்டியுள்ளனர். தற்போது பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அவர்களினால் குறிப்பிடப்பட்டுள்ள கல்முனை புதிய நகர அபிவிருத்தியானது கல்முனை வாழ் தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய இரு சமூகங்களின் நலன் மற்றும் கல்முனைப் பிராந்திய அபிவிருத்தியைக் கொண்டதே தவிர தனி ஒரு இனம் அல்லது சமூகம் நன்மை அடைவதனை நோக்கமாகக் கொண்டது அல்ல என்பதை புரிந்து கொள்ளுதல் வேண்டும். மேலும் இவ் அபிவிருத்தித் திட்டமானது தேசிய அரசாங்கத்தினுடைய தேசிய வேலைத்திட்டமாகும்.
கல்முனை நகர திட்டம் தொடர்பில் குடியிருப்பு, வர்த்தக நிலையம், அரச அலுவலகம், காணி சுவீகரிப்பு தொடர்பாக அரசாங்கத்தினால் உத்தியோக பூர்வமான வரைபடம் மற்றும் அறிவிப்பு இன்னும் வெளிவராத நிலையில் தமிழ் சமூகத்தினர் அத் திட்டம் தொடர்பில் சந்தேகம் கொண்டு இம்மாநகர மக்களுக்கான அபிவிருத்திக்கு முட்டுக்கட்டை போடுவது எதிர்கால கல்முனை வாழ் தமிழ் மற்றும் முஸ்லிம் சந்ததியினருக்கு இழைக்கின்ற ஓர் மாபெரும் வரலாற்றுத் துரோகம் என்;றால் அது மிகையாகாது. கடந்த 28.12.2015ல் இடம் பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் தமிழ் தரப்பு சார்பில் இப் புதிய நகர திட்டம் தொடர்பில் சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அக்குற்றச்சாட்டுகளில் பிரதானமானது தமிழர்களின் பூர்வீக காணிகள் சுவீகரித்தல் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படுகின்ற போது காணி சுவீகரித்தல் என்பது தடுக்க முடியாக ஓர் நியதியாகும். குறித்த அபிவிருத்தித் திட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட காணிகளில் பெருமளவு தமிழ் தரப்பினருக்குரியது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. உத்தேச ரீதியில் சுவீகரிக்கப்படும் காணிகளில் பெரும் பங்கு முஸ்லிம்களுக்குறியது என்பதை கல்முனை காணி பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி திட்டத்திற்கு சுவீகரிக்கப்படும் காணிகள் தமிழர்களுக்குறியது மட்டுமல்ல தமக்குரிய காணிகளும் சுவீகரிக்கப்படுவதாக முஸ்லிம் தரப்பினர்களும் தெரிவிக்கின்றனர். சுவீகரிக்கப்படும் காணிகளுக்கு பதிவலீடாக நஷ்டஈடு வழங்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அவர்கள் உறுதியளித்துள்ளமையை இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டும்.
வயற்காணிகளை நிரப்புவதன் மூலம் இயற்கையான வெள்ள வடிச்சல் நிலையை பாதிப்புக்குட்படுத்தி வெள்ள நீரினை ஊருக்குள் வரவழைத்தல் என்ற குற்றச்சாட்டும் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்ட தமிழ் தரப்பினரால் குறிப்பிடப்பட்டிருந்தது. மேற்படி குற்றச்சாட்டினை அவதானிக்கும் போது ஓர் அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த முன் அதன் அமைவிடம், இயற்கைச் சூழல் என்பனவற்றிற்கு பாதிப்பு எற்hடாத வகையில் மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் நிபுணர் குழுவினரின் சாத்திய வள அறிக்கை பெறப்படும்.
அவ்வறிக்கையில் குறித்த அபிவிருத்தித் திட்டத்தினால் இயற்கை சூழலுக்கு பாதிப்பு வரக்கூடிய வாய்ப்புகள் இருந்தால் இது தொடர்பான மாற்று நடவடிக்கைகள் ஆராயப்பட்டு அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதே வழமை என்பது ஆய்வாளர்களின் கருத்தாகக் காணப்படுகின்றது.
ஆனால் தமிழ் சகோதரர்கள் அவ் அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் உத்தியோக பூர்வ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட முன்னவே அதனைப் புறக்கணிக்கின்றமையானது, காலம் கனிந்து வரும் நிலையில் தாழியை உடைப்பது போன்றதாகவே தென்படுகிறது.
SLMC தலைவர் வரவு செலவுத்திட்ட விவாதமொன்றின் போது கல்முனை நகர அபிவிருத்தித்திட்டமானது எந்த ஒரு சமூகத்தினருக்கும் பாதிப்பு வராத வகையில் நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிட்டிருந்தார். மேலும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் HMM. ஹரீஸ் தலைமையில் கல்முனைப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் TNA மாகாணசபை, மாநகரசபை உறுப்பினர்கள் முன்னிலையில் மேற்படி அபிவிருத்தித் திட்டம் தொடர்பான விளக்கமளிக்கப்பட்டது.
கடந்த 25.12.2015ல் SLMC தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமயில் கல்முனை மாநகர எதிர்க்கட்சித் தலைர் கு. ஏகாம்பரம், மாநகரசபை தமிழ் உறுப்பினர்கள், விவசாய பிரதிநிதிகள் மற்றும் தமிழ் சிவில் சமூகத்தினர் மத்தியில் மேற்படி திட்டம் தொடர்பான முன்மொழிவுகள் குறிப்பிடப்பட்டு தமிழ் தரப்பினரின் கருத்துகளும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையிலேயே கடந்த 28.12.2015ல் தமிழ் அரசியல் வாதிகள் தலைமையில் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றமையானது தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஓர் விரிசலை தோற்றுவிப்பதாக அமைந்துள்ளது எனலாம்.
கடந்த கால அரசாங்கத்தினால் தமிழ் மற்றும் முஸ்லிம்களின் உரிமைகள் என்பன மறுக்கப்பட்டதொரு நிலையில் காணப்பட்டது. ஆனால் இன்று இவ்விரு சமூகங்களின் மூலம் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் மூலமாக, எமது கல்முனைப் பிராந்தியத்தினை அபிவிருத்தி செய்ய முன்வந்துள்ள நிலையில் எமக்கிடையே புரிந்துணர்வு, ஐக்கியம், விட்டுக்கொடுக்காமை முதலிய காரணங்களினால் இவ் அபிவிருத்தி திட்டத்தினை தடுத்து நிறுத்துகின்ற செயற்பாடானது ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல் எமக்கே உரித்தான பாரிய அபிவிருத்தித் திட்டமானது பெரும்பான்மை சமூகத்தின் பிரதேசத்திற்கு மாறுவதற்கான வாய்ப்புகளே அதிகம் எனலாம். இதனால் பாதிப்படையப் போவது எதிர்கால தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர்கள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.
மேற்படி அபிவிருத்தித் திட்டம் காரணமாக இதுவரை காலமும் பிட்டும் தேங்காய் பூவும் போல ஒற்றுமை, ஐக்கியம் மற்றும் இன நல்லிணக்கத்துடன் வாழ்ந்த தமிழ் முஸ்லிம் உறவில் குந்தகம் ஏற்படாமல் இருப்பதுடன் எமது பிராந்தியத்தற்கென வரவுள்ள பாரிய அபிவிருத்தியை இனத்துவ சிந்தனையின் அடிப்படையில் அணுகாது, எதிர்கால கல்முனைப் பிராந்திய நலனை நோக்காகக் கொண்டு கல்முனை புதிய நகர திட்டமும், தமிழ் முஸ்லிம் உறவும் பாதிப்படையாத வகையில் இருக்க இப்பிரதேச அரசியல் தலைவர்கள், மதப் பெரியார்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.
எம்.வை.எம். யூசுப் இம்ரான்,
உதவி விரிவுரையாளர்,
அரசியல் விஞ்ஞானத் துறை,
கலை மற்றும் கலாசார பீடம்,
இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழகம்.
