ஐ. ஏ. காதிர்கான்,மினுவாங்கொடை நிருபர்-
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள நிலையில், விரைவாக எல்லை நிர்ணயம் மேற்கொள்ளும் போது, அதில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதால், தேர்தலை விகிதாசார முறையிலேயே இம்முறை நடாத்துவது நல்லது என்றும், அடுத்து வரும் தேர்தல் தொடக்கம் வட்டார முறையில் அமுல் படுத்துமாறும், கண்டி மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகள், மாகாண பைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை விகிதாசார முறையில் நடாத்த வேண்டுமாயின், 2012 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு மீண்டும் திருத்தப்படவேண்டும். இது தொடர்பில் கலந்துரையாடல்களையோ அல்லது யோசனைகளையோ முன் வைப்பதில் எந்தவிதமான பலன்களும் கிடைக்கப் போவதில்லை. எனவே, எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடாத்துவதற்கு உத்தேசித்துள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல், வட்டார முறையிலேயே நடாத்தப்படும் என, அமைச்சர் பைஸர் முஸ்தபா பிரதி நிதிகளிடம் பதில் கூறியுள்ளார்.
கண்டி மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் அங்கம் வகிக்கும் பிரதி நிதிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு மத்தியில் அமைச்சர் முஸ்தபா தலைமையில், அமைச்சின் கேட்போர் கூடத்தில் இது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று (2) திங்கட் கிழமை இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் முன்னாள் மற்றும் தற்போதைய மாநகர சபை முதல்வர்கள், நகர மற்றும் பிரதேச சபைத் தலைவர்கள், பிரதித் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், ஆணையாளர்கள், செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இக் கலந்துரையாடலின் போது, அமைச்சர் முஸ்தபா தொடர்ந்தும் பிரதி நிதிகளிடம் கூறியதாவது, உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டம் 2013 ஆம் வருடத்திலிருந்து அமுலுக்கு வருவதால், எதிர்வரும் தேர்தல், வட்டார முறையிலேயே நடாத்தப்பட வேண்டும். இதில் எதுவித மாற்றங்களும் கிடையாது.
எல்லை நிர்ணயம் தொடர்பான யோசனைகள் மற்றும் முரண்பாடுகளை, இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள எல்லை நிர்ணயக் குழுவிடம் வழங்கி, எல்லை நிர்ணயங்களை சீர் செய்து கொள்ள முடியும். ஒட்டு மொத்தமாக, அடுத்து வரும் உள்ளூராட்சி மன்றங்கள் மாகாண சபைகள் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் அனைத்தும் திட்ட வட்டமாக வட்டார முறையில் நடாத்தப் படுவதற்கான நடவடிக்கைகளையே மேற்கொண்டுள்ளோம் என, அமைச்சர் முஸ்தபா இங்கு சமூகமளித்திருந்த சகல பிரதி நிதிகளிடமும் உறுதிபடக் கூறினார்.
அமில பாலசூரிய,
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் ஊடக செயலாளர்.