தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் சரத்குமார் அணி சார்பாக இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பாக்யராஜ், சிம்பு, மோகன்ராம், ராதிகா, ஊர்வசி, பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இதில் மோகன்ராம் பேசும்போது, ‘நடிகர் சங்கத்தினரிடையே ஒற்றுமை குலைத்து விடக்கூடாது. மூத்த நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர் அனைவரும் ஒற்றுமை காக்க உதவ வேண்டும். அப்படி தேர்தல் நடந்தால் சரத்குமார் தலைமையிலான அணிதான் ஜெயிக்கும்’ என்றார்.
ஊர்வசி பேசும்போது, ‘நடிகர் சங்கம் இப்படி பிளவு பட்டு இருக்கிறது. அவர்களை பற்றி இவர்கள் பேசுவது இவர்களை பற்றி அவர்கள் பேசுவது இதெல்லாம் வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டார்.
ராதிகா பேசும்போது, ‘நான் ஒரு சக நடிகை. எல்லா நடிகர்கள் படத்திலும் நடித்திருக்கிறேன். நடிக்கவும் செய்கிறேன். நடிகர் சங்கத்தில் தலையிட்டதில்லை. ஆனால், இப்போது நடிகர் சங்க விவகாரம் வேதனை அளிக்கிறது. எங்கள் குடும்பத்தை தவறாக பேசுகிறார்கள். இதெல்லாம் என்னை வேதனைப்படுத்தியது.
நடிகர் சங்கத்தின் முதல் பிரச்சனை கையெழுத்து வேட்டையில் இருந்து ஆரம்பித்தது. அதிலிருந்து நடிகர் சங்க விவகாரம் இவ்வளவு பெரிதாக ஆரம்பித்தது. நடிகர் சங்க விவகாரம் குறித்து கமல், சிவகுமார், கார்த்தி ஆகியோரிடம் பேசினோம். இவ்வளவு சண்டை நடக்கும் போது கமலும், ரஜினியும் தலையிடாதது வருத்தம். நடிகர் சங்க கட்டிடத்தை பற்றி முழுமையாக தெரியாமல் பேசுகிறார்கள். விஷாலையும் கார்த்தியையும் யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள்.
இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், பெப்சி, மக்கள் தொடர்பாளர்கள் யூனியன் ஆகியோர் ஒருங்கிணைந்து சமாதானம் ஆக சொன்னார்கள். அவர்களுக்கு நன்றி. நாங்கள் எல்லாம் ஒரே குடும்பம், நண்பர்கள் பிரச்சனை இல்லாமல் இருப்பதே நல்லது.’ என்றார்.
